சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் நியூயோர்க் புறப்படுவதற்கு சுமார் ஒரு மணிநேரம் முன்னதாக, அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

மறுமுனையில் இருந்து கேட்ட மகிந்தவின் குரல் அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

நாட்டின் சார்பாக, பிரமாண்டமான பணியை முன்னெடுத்துச் செல்லும், சிறிலங்கா அதிபருக்கு, மகிந்த ராஜபக்ச இதன் போது வாழ்த்துக் கூறினார்.

அதன் பின்னர், அவர், எமிரேட்ஸ் விமானம் மூலம் நியூயோர்க் புறப்பட்டுச் சென்றார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

மகிந்தவைக் காப்பாற்றிவிட்டோம், படையினருக்கும் துரோகம் செய்யமாட்டோம் – ரணில் கூறுகிறார் .

ranilமகிந்த ராஜபக்சவை தூக்குக்கயிறில் இருந்து நாமே காப்பாற்றி விட்டோம், எந்தச் சந்தர்ப்பத்திலும் படையினருக்குத் துரோகம் இழைக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“மனித உரிமை மீறல் விவகாரத்தில் இருந்து சிறிலங்காவைப் பாதுகாக்கும் வகையிலான அமெரிக்காவின் தீர்மானத்தை இனவாதிகள் எதிர்க்கின்றனர்.

அனைத்துலக குற்றச்சாட்டுகளில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, அல்லது நானோ அமைச்சரவையோ எடுக்கவில்லை.

ஜனவரி 8 ஆம் நாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களே இந்த ஆணையை வழங்கினர்.

நாம் முன்னெடுத்த நல்லிணக்க மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை அனைத்துலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. எங்கள் மீது அனைத்துலகம் நம்பிக்கை கொண்டுள்ளது.

இதற்கமைய ஐ.நா மனித உரிமை பேரவை நிகழ்ச்சி நிரலில் இருந்து சிறிலங்கா விவகாரத்தை அகற்றியுள்ளோம்.

இனிமேல் சிறிலங்கா விவகாரம் மனித உரிமை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாது.

எனினும் இரண்டு தரப்பிலும் உள்ள இனவாதிகள் மனித உரிமை விவகாரம் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

அனைத்துலகத்தின் குற்றச்சாட்டை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் சிறப்பான முறையில் முன்னெடுக்க வேண்டும்.

இல்லையேல் அனைத்துலகத்தின் விரோதத்திற்கு நாம் உள்ளாக நேரிடும். அதுமாத்திரமின்றி மக்களும் எம்மை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்து விடுவர்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சஅனைத்துலகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையினாலேயே இந்த நிலைமைக்கு சிறிலங்கா முகங்கொடுக்க நேரிட்டது.

இதனால் அனைத்துலகத்தின் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டியேற்பட்டது. மகிந்த ராஜபக்ச தனக்காக மாட்டிக் கொண்ட தூக்கு கயிறிலிருந்து நாமே அவரைக் காப்பாற்றியுள்ளோம்.

உலகிலேயே மிகவும் புதிய பொறிமுறையில் உள்ளக விசாரணையை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தென்னாபிரிக்காவில் அமைக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை பார்க்கிலும் சிறப்பானதாக பொறிமுறையினை கொண்டு சிறிலங்காவின் தரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவோம்.

இரண்டு தரப்பினராலும் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உண்மை கண்டறிய வேண்டும்.

காணாமல்போனோர் தொடர்பில் சிறப்புப் பணியகம் நிறுவப்படும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் தீர்மானங்கள் மத தலைவர்கள் உள்ளடங்கிய கருணை சபைக்கு செல்லும்.

அவர்களே அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள். உலகிலேயே புதியதொரு பொறிமுறையை நாம் ஏற்படுத்தவுள்ளோம்.

இதனை மகிந்த ராஜபக்ச அன்றே செய்திருந்தால் இவ்வளவு தூரம் நாம் பயணிக்க வேண்டியதில்லை.

நாம் வித்தியாசமான முறையில் அனைத்துலகத்தை அணுகினோம். இனவாதத்தை கைவிட்டு நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியேற்பட்டுள்ளது.

இவ்வாறு சென்றால் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியாது போய்விடுவோ என்ற அச்சத்தினாலேயே எதிர்க்கட்சியினர் எமது செயற்பாடுகளை எதிர்க்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply