ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நிறைவேறியிருக்கிறது.
2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தீர்மான யுத்தம், இப்போது ஒருமித்த தீர்மானமாக – வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் நிலையை வந்தடைந்திருக்கிறது.
2012ஆம் ஆண்டிலும் கூட, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நம்பகமான உள்நாட்டு விசாரணையைத் தான் வலியுறுத்தியிருந்தது. 2013இலும் அதே கோரிக்கை தான் விடப்பட்டது.
ஆனால், அப்போதைய அரசாங்கம் அந்த தீர்மானத்தை எதிர்த்தது, நடைமுறைப்படுத்த முடியாது என்று சர்வதேச சமூகத்துடன் முரண்பட்டது.
இதன் விளைவாக, 2014இல், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்கு வழிவிடும் தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தது.
அதன்படியே விசாரணைகள் நடத்தப்பட்டு, அதன் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் தான், மீண்டும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது அமெரிக்கா.
இதற்கு முந்திய மூன்று தீர்மானங்களையும், பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவுக்கு தனது இராஜதந்திர பலம் முழுவதையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
ஏனென்றால், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா என்று வலுவான நாடுகள் பல இலங்கையின் பக்கத்தில் நின்றன. கடைசி நேரத்தில் இந்தியா கூட இலங்கைக்காக வாதாடியது.
இதனால், பல நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக அமெரிக்கா தனது வழக்கமான பாணியிலான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
ஏனென்றால், இது அமெரிக்காவின் கௌரவப் போராட்டமாகவும் அமைந்திருந்தது. ஆனால், இம்முறை அமெரிக்கா, தீர்மானத்தை நிறைவேற்ற அந்தளவுக்கு பெரிய இராஜதந்திர அழுத்தங்களைச் சந்திக்கவில்லை.
தாம் முன்வைத்த தீர்மானத்தை இலங்கையையும் ஏற்றுக் கொள்ள வைத்து, இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த, குரல் கொடுத்து வந்த நாடுகளையும் இணங்க வைத்து, அதனை ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது அமெரிக்கா.
கடந்த மாத துவக்கத்தில் கொழும்பு வந்திருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், இம்முறை ஜெனீவாவில் ஒருமித்த கருத்துடைய தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முடியும் என்று நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது அந்தக் கருத்து அப்படியே நடந்தேறியிருக்கிறது.
இந்த தீர்மானத்தை எப்படி கொண்டு செல்வது என்று அமெரிக்கா முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு காய்களை நகர்த்தியிருக்கிறது என்பது இதன் மூலம் உணர முடிகிறது.
இந்த தீர்மான விடயத்தில், இலங்கையை ஏற்றுக்கொள்ள வைத்தமை அமெரிக்காவுக்குக் கிடைத்த முதலாவது வெற்றி.
இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை எதிர்க்காமல் அடக்கி வைத்தமை அமெரிக்காவின் இரண்டாவது வெற்றி என்று கூறலாம்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், புதிய அரசாங்கம் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவே நடக்கத் தொடங்கியிருக்கிறது.
எனவே, ஜெனீவாவில் தாம் கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு அமெரிக்கா நிச்சயம் அழுத்தம் கொடுத்திருக்கும்.
ஆனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவது மட்டும் முக்கியமல்ல, இதனை நடைமுறைப்படுத்துவது தான் முக்கியமானது.
அதற்கு இலங்கையின் ஆதரவும் அர்ப்பணிப்பும் அவசியமானது.
எனவே, சாதாரண அழுத்தங்களின் ஊடாக மட்டும் இந்த விடயத்தில் முன்னேற்றங்களை எட்டமுடியாது என்பதை அமெரிக்கா நன்கு உணரும்.
அதேவேளை, முதலாவது தீர்மான வரைவை கடந்த மாதம் அமெரிக்கா வெளியிட்ட போது, அதனை முறைசாராக் கூட்டங்களில் கடுமையாக எதிர்த்திருந்தது இலங்கை அரசாங்கம்.
அந்த முதல் வரைவு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை முற்றிலுமாகப் பிரதிபலிக்கும் வகையில், சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுநர்களை உள்ளடக்கியதாக நம்பகமான, சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பெரும் போராட்டத்தின் பின்னர், இலங்கை அரசாங்கம், “சர்வதேச” என்ற பதத்தை நீக்குவதற்கு அமெரிக்காவை இணங்க வைத்திருந்தது.
முதல் வரைவு முற்றிலுமாகவே கலப்பு நீதிமன்றத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
ஆனால், இலங்கையின் வற்புறுத்தல் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆலோசனையின் பேரில், சர்வதேச நீதிபதிகள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் என்பதற்கு பதிலாக, கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் என்று தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டது.
இதுவும் கூட கலப்பு நீதிமன்றத்தைத் தான் பிரதிபலிக்கிறது.
ஆனால், சில குறைபாடுகள் இதில் இருப்பதையும், தெளிவின்மைகள் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, கொமன்வெல்த், வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள் விசாரணையில் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது எந்த அடிப்படையில், எந்தளவு பிரதிநிதித்துவம் கொண்டதாக இந்த நியமனங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
நம்பகமான உள்ளக விசாரணை ஒன்றுக்குக் கூட இணங்காத நிலையில் தான் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் இருந்தது.
ஆனால், நம்பகமான உள்ளக விசாரணையை நடத்த தற்போதைய அரசாங்கம் முன்வந்தது.
என்றாலும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான விசாரணையை நடத்தும், உள்நாட்டு சட்ட கட்டமைப்புகள் ஏதும் இலங்கையில் இல்லை என்று தெளிவாக கூறியிருந்த நிலையில், உள்ளக விசாரணைக்கு இணங்க அமெரிக்கா மறுத்தது.
இந்தக்கட்டத்தில் தான், சர்வதேச நீதிபதிகள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய விசாரணையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
ஆனால், அதற்கு இலங்கை மட்டுமன்றி அதன் நட்பு நாடுகளும் எதிர்ப்பு வெளியிட்டன. அது இலங்கையில் இறைமையை மீறுகின்ற செயல் என்று வாதிட்டன.
இந்த நிலையில் தான், கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரிக்க வேண்டும் என்ற இரண்டாவது வரைவை அமெரிக்கா கையளித்தது.
இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வாயை அமெரிக்கா மூடியது.
விசாரணைகளில் வெளிநாட்டவர்கள் தலையீடு செய்வது, இலங்கையின் இறைமையை மீறும் செயல் என்று வாதிட்டு வந்த சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா, இந்தியா போன்ற நாடுகளெல்லாமே இறுதி தீர்மான வரைவுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.
இதுகுறித்து சீனா, இந்தியா போன்ற நாடுகள் அதிகம் பேசவில்லை. தீர்மான வரைவைத் திருத்தவும் முயற்சிக்கவில்லை.
கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணையில் உள்ளடக்க வேண்டும் என்ற பதத்தை மேலும் வலுவிழக்கச் செய்ய இலங்கை மறைமுக முயற்சிகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த விடயத்தில் கடந்த காலங்களைப் போலவே இந்தியா தலையீடு செய்யும் என்றும் வலுவாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொமன்வெல்த் மற்றும் வெளிநாடுகளின் நீதிபதிகள் என்ற பதம் சேர்க்கப்பட்டதால் இந்தியா அடங்கிப் போனது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், ஜெனீவாவில் இந்த முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தது என்று கருத முடியாது. ஆனால், எதிர்க்கவில்லை. எதிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.
ஏனென்றால், இதுபோன்ற வெளியக விசாரணைகளை இலங்கையில் நடத்த அனுமதிப்பது, காஷ்மீரிலும் இதுபோன்ற கோரிக்கைகளைப் பலப்படுத்தி விடும் என்று இந்தியா கருதுகிறது.
இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு விடயத்தையும், இந்தியா தனது நாட்டின் நலனில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வைத்தே முடிவுகளை எடுக்கிறது.
ஆனாலும், இம்முறை தீர்மான விடயத்தில், உள்நாட்டு விசாரணைக்கு அப்பால் நகர்த்தப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கவும் முடியாத- அதேவேளை, வெளிப்படையாக ஆதரிக்கவும் முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவும் கூட இதனை எதிர்க்கவோ, வாக்கெடுப்பு நடத்தவோ கோரவில்லை.
இலங்கை அரசாங்கம், தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதால், அதனுடன் இணங்கிச் செல்வதால் மட்டும் சீனா அவ்வாறு நடந்து கொண்டதெனக் கூற முடியாது.
கடந்த காலங்களில், சம்பந்தப்பட்ட நாடுகள் இணங்கியிருந்தாலும், பிற உறுப்பு நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமைய தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கின்றன.
ஆனால், இம்முறை, இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உலகம் அங்கீகரித்திருப்பதையும், அதற்கு ஆதரவளிப்பதையும் கருத்தில் கொண்டு சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வாக்கெடுப்பைக் கோராமல் இருந்து விட்டன.
இதேபோன்றதொரு தீர்மானம், ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்டிருந்தால், அப்போதும் இந்த நாடுகள் இவ்வாறு செயற்பட்டிருக்கும் என்று கருத முடியாது.
அங்கு ரஷ்யா, சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. அதை வைத்து தீர்மானத்தை இந்த நாடுகள் நிச்சயம் தடுத்திருக்கும்.
ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது, எனவே, தாம் எதிர்த்தாலும், தீர்மானம் நிறைவேறும் என்பதை, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் உணர்ந்திருந்தன.
இங்கும் வீட்டோ அதிகாரம் இந்த நாடுகளுக்கு இருந்திருந்தால், இலங்கை ஒருபோதும், இத்தகைய தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்திருக்காது என்பதும் உறுதி.
எது எப்படியோ, தமிழர் தரப்பும், மனித உரிமை அமைப்புகளும் முழுமையாகத் திருப்தி கொள்ளும் அளவுக்கு இல்லாவிட்டாலும், உள்ளக விசாரணைக்கு அப்பாற்பட்ட ஒரு – முன்னேற்றகரமான விசாரணைக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் இட்டிருக்கிறது அமெரிக்கா.
இந்த தீர்மானம் மிகவும் வலுவானது என்று கூற முடியாவிட்டாலும், இதனை வைத்து, தமிழ் மக்களுக்கு உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகளைத் தேட முனையலாம்.
அதேவேளை, இலங்கைக்கு இந்த தீர்மானத்தின் மூலம், 18 மாதங்கள் நிம்மதியாக மூச்சு விடும் காலஅவகாசம் கிடைத்திருக்கிறது.
அதற்குள்ளாக, நம்பகமான விசாரணைகள், காத்திரமான நடவடிக்கைகளின் மூலம், நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இலங்கை இருக்கிறது.
நாட்டின் அடிப்படைச் சட்டக் கட்டமைப்புகளை வைத்தே, இந்த தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும்.
அதனை எப்படி அரசாங்கம் சாதிக்கப் போகிறது என்பது தான் அடுத்துள்ள கேள்வியாக இருக்கிறது.
இப்போதைக்கு அமெரிக்காவின் இராஜதந்திரம் ஜெனீவாவில் வெற்றி பெற்றிருந்தாலும், அது இறுதியான வெற்றியை அளிக்குமா என்பது இலங்கையின் கையில் தான் இருக்கிறது.