தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய, முக்கிய சந்தேகநபரை சுவிற்சர்லாந்தில் இருந்து விசாரணைக்காக சிறிலங்காவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் வைத்து, சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக மூன்று கடற்படையினர் மற்றும் முன்னாள் காவல்துறை காவலர் என நால்வர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டு, இது தொடர்பிலான அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை அனைத்துலக காவல்துறை ஊடாக நாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அது தொடர்பிலான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுளள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தற்போது சுவிற்சர்லாந்தில் உள்ள சந்தேக நபர் ரவிராஜ் கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டவர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையிலேயே, மேலதிக விசாரணைகளுக்கான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவரை கொழும்புக்கு அழைத்து வருவதற்கான அழைப்பாணையை விடுக்கும் செயற்பாடுகள் தற்போது சட்ட மா அதிபர் திணைக்களம் ஊடாக இடம்பெற்று வருவதாகவும் காவல்துறைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், கொலையாளி வந்ததாக கருதப்படும் முச்சக்கர வண்டி உள்ளிட்டவை புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விசாரணைகள் பெரும்பாலும் நிறைவுற்றுள்ளன. வெ ளிநாட்டில் உள்ள சந்தேக நபரை நாட்டுக்கு அழைத்து வந்ததும் ரவிராஜ் படுகொலை விசாரணைகளில் திருப்பம் ஏற்படும் என்றும் சிறிலங்கா காவல்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


ரவி ராஜ் கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஓய்­வு­பெற்ற கடற்­படை வீர­ரான நேவி சம்பத் என அறியப்படும் சம்பத் முன­வீரருக்கு மட்டும் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரு கடற்­படை வீரர்களும் முன்னாள் பொலிஸ் உளவுப் பிரிவு கான்ஸ்­ட­பிளும் விளக்­க­ம­றி­யலில் உள்­ளனர்.

Share.
Leave A Reply