அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
லட்சுமி மேனன், அஸ்வின் கக்குமனு, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 1-ந் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஒரு சில காரணங்களால் டீசர் வெளியாவது தள்ளிப் போனது. எனவே, வரும் அக்டோபர் 8-ந் தேதி ‘வேதாளம்’ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிக்கப்பட்டது.
அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘வேதாளம்’ படத்தின் டீசர் இரவு வெளியானது. டீசரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
டீசர் முழுவதும் அஜித் மட்டுமே ஆக்கிரமித்து மிரட்டுகிறார். டீசரில் அஜித் தெறிக்கவிடலாமா என்று கேட்கிறார். ஆனால் அவர் ரசிகர்கள் ஏற்கனவே இணையத்தை தெறிக்கடித்து வருகிறார்கள். டீசர் வெளியாகி ஒரு மணி நேரத்திலேயே 4 லட்சம் வீயூஸ்களை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது.
படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.