தனது ஒரு வயதும் ஒரு மாதமுமேயான பச்சிளம் குழந்தையை தனது கணவர் 3 முறை நிலத்தில் அடித்து கொலை செய்யததாக குழந்தையின் தாய் இன்று (07) நீதிமன்றில் தெரிவித்தார்.
கடந்த வருடம் மார்ச்ச 26 ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததோடு, இது குறித்தான விசாரணை இன்று (07) அம்பாறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையிலேயே குறித்த குழந்தையின் தாய் இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார்.
குறித்த தினத்தில் தானும், கணவரும் குழந்தையும் சந்தைக்குச் சென்றதாகவும் கணவரை குழந்தையை வைத்திருக்கச் சொல்லியதாகவும் பின்னர் சந்தையிலிருந்து திரும்பியதாக, குழந்தையின் தாய் தெரிவித்தார்.
அதனை அடுத்து குழந்தையை வைத்திருந்த கணவர், குழந்தை அழ ஆரம்பித்ததால், திடீரென குழந்தையை நிலத்தில் வீசி அடித்தாக தெரிவித்தார்.
பின்னர், மேலும் இருமுறை இவ்வாறு செய்ததாகவும், குழந்தையை காப்பாற்றச் சென்ற தனக்கு தலையிலும் முதுகிலும் முரட்டுத்தனமாக தாக்கியதாகவும், ஒரு தடவை கீழே இருந்த குழந்தையை தூக்கி கையை திருப்பி மீண்டும் நிலத்தில் போட்டதாகவும் அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அம்பாறை, மஹாஓயவை கெகிரிஹேனவைச் சேர்ந்த மிலானி பிரதீகா என்பவரே குறித்த குழந்தையின் தாயாராவார்.
அம்பாறை உயர் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமசந்திரன் முன்னிலையில் இடம்பெற்ற இவ்விசாரணையில், நீதிபதியின் அனுமதியுடன் பொம்மை ஒன்றை வைத்து தனது கணவர் மேற்கொண்ட தாக்குதலை விளக்கினார்.
இதன்போது, யாரிடமும் இது குறித்து கூற வேண்டாம் என தன்னை பயமுறுத்தியதாகவும் அதன் பின்னரே குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்த மேலதிக விசாரணை எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

Share.
Leave A Reply