கடந்த மாதம் மெக்காவுக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைத்துச் சொல்லப்படுவதாக சவூதியின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்திருப்பதாகவும் மேலும் 32 பேரைக் காணவில்லையென்றும் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஒட்டுமொத்தமாக 769 பேர் இறந்ததாக சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், வெளிநாட்டு ஊடகங்களும் பிற அதிகாரிகளும் 1,000க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகக் கூறிவருகின்றனர்.
கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஹஜ் யாத்திரையின் போது நடந்த மிக மோசமான விபத்து இதுவாகும்.
இந்த விபத்தில் 76 பாகிஸ்தானியர்களும் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்தப் பகுதியில் பாதுகாப்பைக் கையாண்ட விதத்திற்காகவும் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை மிக மெதுவாக அளித்துவருவதற்கும் சவூதி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
உயிரிழந்தவர்களில் இரானைச் சேர்ந்தவர்கள் அதிகம். அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் 464 பேர் இந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிகாரபூர்வ அறிக்கைகள், இந்த விபத்தில் உயிரிழந்த நாடுகளிலிருந்து வெளியாகும் ஊடகச் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விபத்தில் 1216 பேர் உயிரிழந்திருக்கலாம் என பிபிசி மானிட்டரிங் பிரிவு தெரிவிக்கிறது.
ஹஜ்: முந்தைய விபத்துகள்
2006: மினாவில் ஜமரத் பாலத்திற்குக் கீழ் ஏற்பட்ட விபத்தில் 364 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
1997: மினாவின் தற்காலிகக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 340 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். கடுமையாக வீசிய காற்றும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
1994: கல்லெறியும் சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 270 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர்.
1990: புனிதத் தலங்களுக்குச் செல்லும் பாதைகளில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1,426 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியர்கள்.
1987: இரானைச் சேர்ந்த யாத்ரீகர்கள் நடத்திய அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படைகள் புகுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 402 பேர் உயிரிழந்தனர்.
Hajj 360 – experience the journey to Mecca in 360 degrees