யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (09.10.2015) பிரமாண்டமான நடைபவனி ஆரம்பமாகி இடம்பெற்றது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பாடசாலையின் மைதானத்திலிருந்து ஆரம்பமாகிய பிரமாண்டமான நடைபவனியை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார்.
ராஜேந்திர பிரசாத் வீதியூடாகப் பயணிக்கத் தொடங்கி வேம்படி வீதியூடாகப் பலாலி வீதியைச் சென்றடைந்தது. பின்னர் பலாலி வீதியூடாகப் பயணித்து இராமநாதன் வீதியை அடைந்து அங்கிருந்து பிறவுண் வீதிக்குச் சென்று அரசடி வீதியைச் சென்றடைந்தது.
அங்கிருந்து கஸ்தூரியார் வீதியூடாக கல்லூரி வீதியை அடைந்து அதன் வழியே கே.கே.எஸ்.வீதியை நடைபவனி சென்றடைந்தது.
பின்னர் கே.கே.எஸ் வீதியூடாகப் பயணித்த நடைபவனி யாழ்ப்பாணம் சத்திரத்துச் சந்தியை அடைந்தது. தொடர்ந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக மணிக் கூட்டுக் கோபுர வீதியை அடைந்தது. பின்னர் மீண்டும் வேம்படி வழியாக மத்திய கல்லூரியின் வளாகத்தைச் சென்றடைந்தது.
குறித்த நடைபவனியில் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை நீண்டு செல்லக் கூடிய வகையில் கல்லூரியின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் வகையில் பிரமாண்ட ஊர்திப் பவனிகளும் தமிழ் மக்களின் கலாசார மற்றும் மாணவர்களின் அணிவகுப்பும் இநடைபவனியும் இடம்பெற்றது.
கல்லூரியின் இலட்சிணை பொறிக்கப்பட்ட பிரமாண்டமான ஊர்தி முன்னே வர அதனைத் தொடர்ந்து பாண்ட் வாத்திய அணிவகுப்பு, மாணவர்களின் அணிவகுப்பு, பழைய மாணவர்களின் அணிவகுப்பு, ஆரம்பப் பிரிவு மாணவர்களின் அணிவகுப்பு, சாரணர்கள், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாணவர்கள் அணிவகுப்பு என்பன இடம்பெற்றன.
இதன் போது கல்லூரியின் இந்து மன்றம், தமிழ் மன்றம், விஞ்ஞான மன்றம், வணிக மன்றம் உட்படப் பல்வேறு மன்றங்களின் ஊர்திப் பவனிகளும் கண்களுக்கு விருந்தளித்தன .