சரணாகதி அரசியலில் பயணிக்கின்றோமா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கம் விசாரணைகளை காலதாமதப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனிவாவுக்குச் சென்றிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அங்கு நடைபெற்ற சந்திப்புக்கள் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை மற்றும் ஐ.நா. விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பினுள் காணப்படும் முரண்பாட்டு நிலைமைகள் தொடர்பாக வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி :- ஐ.நா. அறிக்கைக்கும், நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணைக்குமிடையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் ஜெனிவா சென்றிருந்த நீங்கள் இவ்விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தி சர்வதேச தரப்புக்களுக்கு அழுத்தமளித்தீர்களா?
பதில்:- ஐ.நா மனித உரிமை பேரவையில் 47 அங்கத்துவ நாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் 12 நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து இவ்விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.
குறிப்பாக தமிழ் மக்களின் சர்வதே விசாரணைக்கான கோரிக்கைக்கான காரணங்கள், வடமாகாணத்தில் காணப்படும் மோசமான இராணுவப்பிரசன்னம், சாட்சியங்களின் பாதுகாப்பு, வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாட்சியமளிப்பு, இலங்கை அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தொடர்பாக அனுபவங்கள், முன்னாள் ஜனாதிபதி, இராணுவத்தளபதிகளை விசாரணைக்குட்படுத்த இடமளிக்க மாட்டோமென தற்போதைய ஆட்சியின் பிரதானிகள் பகிரங்கமாகத் தெரிவித்து வரும் கருத்துக்கள்,
இலங்கைக்கு வெளியில் விசாரணைகள் இடம்பெறவேண்டியதற்கான காரணங்கள் ஐ.நா.அறிக்கையில் கூறப்பட்டுள்ள கலப்பு விசேட நீதிமன்ற பொறிமுறை கூட அகற்றப்படுவதற்கான நிலைமை காணப்படுகின்றது (அமெரிக்க பிரேரணை நிறைவேற்றுவதற்கு முன்னதாக) அதற்கு இடமளிக்க கூடாது போன்ற விடயங்கள் தொடர்பாக அப்பேச்சுவார்த்தைகளின் போது அதீத கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திய 12 நாடுகளில் இலத்தீன் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகள் சில எம்மால் எடுத்துக்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேரவை அமர்வுகளின்போது தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளன.
இருப்பினும் இங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையொன்றே நடைபெறவேண்டுமென்ற விடயம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
கேள்வி:- உள்ளக விசாரணை முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டதென எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகின்றீர்கள்?
பதில்:- ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் உள்ளக விசாரணையே மேற்கொள்ளப்படவேண்டும் என்ற முடிவுக்கு சர்வதேசம் வந்திருந்தது.
அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வால் இங்கு வருகை தந்திருந்தார்.
அவர் கூட்டமைப்பைச் சந்தித்த போது வடக்கு முதல்வரும் கலந்துகொண்டிருந்தார். அச்சந்திப்பையடுத்தே விசாரணை அவசியம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
எனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் இடம்பெறுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா, இலங்கை, சிலசமயம் இந்தியாவும் உட்பட்டு உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
இந்நிலையில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் வெறுமனே மேலெழுந்த வாரியாகவே அனைத்தும் இடம்பெற்றன.
கேள்வி:- அவ்வாறாயின் எந்த நம்பிக்கையில் நீங்கள் ஜெனிவாவுக்கு சென்றிருந்தீர்கள்?
பதில்:- எமக்கு மிகவும் குறுகிய காலப்பகுதியே காணப்பட்டது. அக்கால எல்லைக்குள் அங்கத்துவநாடுகளை நேரில் சந்தித்து உள்ளக விசாரணையொன்று முன்னெடுக்கப்படுமானால் அதில் ஏற்படப்போகும் விளைவுகள் தொடர்பாக எடுத்துக் கூறி மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் அங்கு சென்றிருந்தோம்.
நாம் சந்தித்த நாடுகளில் சில சர்வதேச விசாரணையையும், சில கலப்பு விசேட நீதிமன்ற பொறிமுறையூடான விசாரணையையும் வலியுறுத்தியிருந்தன.
எனினும் அவை எல்லாவற்றையும் கடந்து அமெரிக்காவும், இலங்கையும் விரும்பிய வகையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
விசேடமாக இலங்கை குறித்த பிரேரணையை ஏற்றுக்கொண்ட பின்னர் ஏனைய சர்வதேச நாடுகள் ஆதரவை வழங்கியிருந்தன.
கேள்வி:- தற்போதைய பரிந்துரை கூட நாட்டுக்கு ஆபத்தானது என பெரும்பான்மை தரப்புக்கள் போர்க்கொடி தூக்குகின்றனவே?
பதில்:- தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையை இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தனக்கு எதிராக எந்தவொரு தீர்மானமும் காணப்படுமாகவிருந்தால் அதனை நிச்சயம் நிராகரித்திருக்கும்.
தற்போதைய பிரேரணையில் பொறுப்புக்கூறலை அதியுச்சயளவில் வலியுறுத்திய சரத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இலங்கையின் நீதித்துறைக்கு உட்பட்ட வகையிலேயே விசாரணை நடைபெறும். அதன்போது அரசாங்கம் விரும்பினால் பொதுநலவாய நாடுகள், வெளிநாடுகளின் உதவிகளைபெற்றுக்கொள்ளலாம் என்றே கூறப்பட்டிருக்கின்றது.
மாறாக உதவியைப் பெறவேண்டும் அல்லது அவர்களின் பங்களிப்பு காணப்படவேண்டுமென வலியுறுத்தப்படவில்லை.
இவ்வாறு காணப்படுவதனால் தான் ஆட்சியின் பிரதானிகள் தாம் முன்னாள் ஜனாதிபதி, இராணுவத்தளபதிகள் ஆகியோரை காப்பாற்றியுள்ளதாக கூறுகின்றார்கள்.
அதேநேரம் குறித்த பிரேரணையில் பல இடங்களில் புதிய ஆட்சியை கருத்தில்கொண்டு அதிகமாக வரவேற்கின்றோம் என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஆகவே இலங்கை அரசாங்கத்திற்கு இந்தப் பிரேரணை அழுத்தமளிப்பதாகவே அல்லது நெருக்கடியை ஏற்படுத்துவதாகவோ இல்லை.
எனினும் சிங்கள, பௌத்த அமைப்புக்கள் தமது சுயநல அரசியல் தேவைக்காக அப்பிரேரணை தொடர்பாக மாறுபட்ட கருத்தை முன்வைத்து தென்னிலங்கைக்கு வேறுபட்ட நிலையை காட்டுவதற்கு முயல்கின்றன.
கேள்வி:- ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்கா பொறுப்புக்கூறலை வலியுறுத்தி காத்திரமான பிரேரணைகளை கொண்டுவந்திருந்தது.
அவ்வாறிருக்கையில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் அந்நாடு இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு அடிப்படைக் காரணம் என்ன?
பதில்:- அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவமே முதன்மையானது. அக்கேந்திர முக்கியத்துவம் பாதிப்படையக் கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடு. கடந்த ஆட்சியின் போது இக்கேந்திர முக்கியத்துவமானது சீனாவின் கைகளுக்கு அதிகமாகச் சென்றிருந்தது.
அத்துடன் சீனாவின் வர்த்தகங்கள், நிர்மாணச்செயற்பாடுகள் இலங்கையினுள் அதிகளவில் இருந்தன. இதனால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு மாறாக இலங்கை செயற்படும் என்ற ஐயப்பாடு காணப்பட்டது. ஆகவே தான் ஆட்சி மாற்றம் அவசியமாக இருந்தது.
முதலில் ஜனாதிபதி மாற்றப்பட்டார். அடுத்து பாராளுமன்றத்தில் அவர்களுக்கு சாதகமான ஆட்சி உருவாக்கப்பட்டது. அந்த ஆட்சி பாதுகாக்கப்படவேண்டியது அவர்களுக்கு அவசியமாகவிருந்தது.
அந்த அடிப்படையிலேயே அவர்கள் இயங்கினார்கள். உள்நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்புக்களுக்கான நீதிகிடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்பது அவர்கள் நன்கறிந்துள்ளார்கள்.
கேள்வி:- தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், போராட்டங்கள் உருவானமைக்கான காரணங்கள், இன்றைய தேவைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் அயல் நாடான இந்தியா அறிந்துள்ளது. இந்தியா தமிழர்களை கைவிடாது என்பது கூட்டமைப்பின் மாறாத நிலைப்பாடாக உள்ளது. இருப்பினும் தமிழர்களுக்கான நீதிகோரல், பொறுப்புக் கூறல் தொடர்பில் இந்தியா தற்போது கொண்டிருக்கும் நிலைப்பாட்டை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- எந்தவொரு நாட்டுக்கும் தமது நலன்களே முதன்மையானவை. அதனடிப்படையிலே இந்தியாவுக்கும் தமது நலன்கள் முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் இருக்கும்.
இலங்கையில் நீண்டகாலமாகவே இனப்பிரச்சினையொன்று காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இனக்கலவரம் நடைபெற்றபோது அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திராகாந்தி தனது பிரதிநிதிகளை இங்கு அனுப்பியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய, இலங்கை -ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இந்தியாவின் பல்வேறு வகிபாகங்கள் கடந்தகாலத்தில் இருந்துள்ளன.
அதுமட்டுமன்றி இறுதி யுத்தத்தில் எத்தனையாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எவ்வளவு விதவைகள் உள்ளனர்.
தற்போது தமிழர்களின் நிலை என்ன? எவ்வளவு அழிவுகளுக்கு முகங்கொடுத்துள்ளோம் உள்ளிட்ட அனைத்தையும் இந்தியா அறிந்துள்ளது. யாழில் இந்திய துணைத்தூதரகமொன்று உள்ளது.
அதன் மூலம் டெல்லியில் உள்ள அதிகார வர்க்கத்தினர் தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டு வருகின்றார்கள். நாம் சந்திக்கின்றபோது பல தகவல்களை வழங்குகின்றோம்.
இந்தியா தற்போது 50ஆயிரம் வீட்டுத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. ஆகவே அவர்கள் அறியாத புதிய விடயங்கள் ஒன்றுமில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு பெறவேண்டுமென்பதையே வலியுறுத்துகின்றோம் என பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படவேண்டும். இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றப்படவேண்டும்.
மீள்குடியேற்றம், விதவைகள், காணாமல்போனோர், அரசியல் கைதிகள் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கைகள் வேண்டும்.
நீண்டகாலமாக காணப்படும் இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். தமிழ் மக்கள் கௌரவமாக வாழவேண்டும் இதுவே எமக்கு தேவையாகவுள்ளது. இவை இந்தியாவின் நலன்களுக்கு எதிரானவையல்ல.
அவ்வாறான நிலையில் இந்தியா எமது விடயங்கள் தொடர்பில் எவ்வளவு தூரம் ஆழமாக செயற்படுகின்றது என்ற ஐயப்பாடு தற்போது எழுந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழர்களின் பிரச்சினைக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் பட்சத்தில் தமது நாட்டில் காணப்படும் காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா.வின் தலையீடு ஏற்படலாம்.
அதேநேரம் அதிகமான அழுத்தங்களை வழங்கும் பட்சத்தில் இலங்கை, சீனாவின் பக்கம் சார்ந்து விடும். அது தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும் ஆகிய கருத்துக்களை தொடர்ச்சியாக டெல்லி கூறிவருகின்றது.
அண்மையில் தமிழக சட்டசபையில் இலங்கை விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியை தொடர்புகொண்டார்.
அதன்போது அவ்வாறான நிலைப்பாட்டை எடுப்போமாகவிருந்தால் இலங்கை சீனாவின் பக்கம் சென்றுவிடுமென கூறப்பட்டிருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் இந்தியாவின் நட்பு சக்திகள். கடந்த காலங்களில் இந்திய சீன, இந்திய, பாகிஸ்தான் யுத்தங்களின் போது இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகளுக்கே சாதகமாக இருந்தது. ஈழத்தமிழர்கள் மாத்திரமே இந்தியாவுக்கு ஆதரவாக இருந்துள்ளார்கள்.
அதேபோன்று இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை கூட இலங்கை அரசாங்கமே மலினப்படுத்தி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த தவறியிருக்கின்றது.
அவ்வாறான நிலையில் இந்தியா தமிழர்களின் நலன்களை ஓரங்கட்ட முனைகின்றதா என்ற ஐயப்பாடுகள் மேலெழுந்துள்ளன.
தமிழர்களை பொறுத்தவரையில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படமாட்டார்கள். ஆகவே நட்பு சக்தியாகவிருக்கும் தமிழர்களை பாதுகாக்கவேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது.
கேள்வி:- ஐ.நா.வின் 30ஆவது மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாகவே உள்ளக விசாரணை தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாக கூறுகின்றீர்கள். அவ்வாறாயின் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயம் தொடர்பில் கூடி ஆராய்ந்து ஏன் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை?
பதில்:- நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயம் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டி ஆராய்ந்து அது தொடர்பிலான அடுத்த கட்ட செயற்பாடுகளை இறுதி செய்திருக்க வேண்டும்.
துரதிஷ்ட வசமாக நாம் பல்வேறு தடவைகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கூட்டுமாறு கூட்டமைப்பின் தலைவரிடம் கோரிய போதும் அது நடைபெற்றிருக்கவில்லை.
தற்போது வரையில் அக்கூட்டம் கூட்டப்பட்டு ஆகக் குறைந்தது இப்பிரேரணை குறித்து கூட கலந்தாலோசிக்கப்படாதிருப்பது துர்பாக்கியமானது.
கேள்வி:- சர்வதேச விசாரணையொன்று நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகின்றதே?
பதில்:- ஐ.நா.விசாரணையொன்றை நட-த்தி முடித்திருக்கின்றதென்றால் அதனு-டைய பொருள் சர்வதேச விசாரணையொன்று நிறைவடைந்து விட்டது தானே.
ஆகவே நாம் தொடர்ந்தும் சர்வதேச விசாரணை தொடர்பில் பேசவேண்டுமென்ற அவசியமில்லை என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரால் மீண்டும் மீண்டும் பல இடங்களில் வியாக்கியானம் செய்யப்பட்டது.
அது தவறானது என்பதை இலங்கை குறித்த அறிக்கையை வெளியிட்டு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய மனித உரிமை ஆணையாளரின் கருத்துக்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
குறிப்பாக ஆணையாளர் கூறுகையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். மனித குலத்திற்கு எதிராக பாரிய குற்றங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆகவே குற்றவியல் நீதிமன்றங்கள் ஊடாக அவை விசாரணை செய்யப்படவேண்டும். இலங்கையின் நீதித்துறை பலவீனமாக இருப்பதாலும் அரசாங்கத்திடம் அதற்கான சக்தி காணப்படாதிருப்பதனாலும் நாம் கலப்பு விசேட நீதிமன்ற பொறிமுறையை பரிந்துரை செய்கின்றோம் எனக்குறிப்பிட்டார்.
அத்துடன் இனப்படுகொலை தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டபோது குற்றவியல் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அது குறித்த சான்றுகள் கிடைக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர்கள் சர்வதேச விசாரணை நிறைவடைந்து விட்டதாக முரணான கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறக்கூடாது. சர்வதேச விசாரணை நிறைவடையவில்லை என்பதே யதார்த்தமாகவுள்ளது.
கேள்வி:- சர்வதேச விசாரணை, நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களால் ஒருவருக்கொருவர் முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றீர்களே?
பதில்:- உண்மையிலேயே முரண்பாடான கருத்துக்கள் வெளிவருகின்றதை ஏற்றுக்கொள்கின்றோம். சர்வதேச விசாரணை, அமெரிக்க பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு கூடி ஆராயாமையே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.
அதேநேரம் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படவேண்டும் என்பதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.
அதன் காரணத்தாலேயே பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை வலியுறுத்தி ஐ.நா . மனித உரிமை ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம்.
அமெரிக்க பிரேரணையின் முதல் வரைபு சமர்ப்பிக்கப்பட்டபோதும் அதிலுள்ள முக்கிய விடயங்கள் அகற்றப்பட்டு நீர்துப்போகச் செய்யப்பட்ட பின்னர் சமர்ப் பிக்கப்பட்ட இரண்டாவது வரைவையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூட்டமைப்பு வரவேற்பதாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
அது தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய தரப்பினரோடு கலந்தாலோசிக்கப்படவில்லை.
இவ்வாறு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் குறித்த பிரேரணையில் சில விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என நாம் அதிகாரிகளை கோரியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கின்றது எனக் கூறப்பட்டது.
ஆகவே கலந்தாலோசித்து ஒட்டுமொத்தமான கருத்துக்களை முன்வைத்திருப்போமாக இருந்தால் அது ஆக்கபூர்வமாக அமைந்திருக்கலாம்.
அதற்கான வாய்ப்புக்களை தமிழரசுக்கட்சியின் சில உறுப்பினர்கள் வழங்கியிருக்கவில்லை. இதன் காரணத்தாலேயே முரண்பட்ட கருத்துக்கள் வெளிப்பட்டன. இதனால் மிக முக்கியமான பிரச்சினையொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாளுவதில் வலுவான நிலை இருந்திருக்கவில்லை.
கேள்வி :- தற்போதைய அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெறுவதில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் மென்போக்கு கடைப்பிடிக்கப்படுகின்றதெனக் கருதுகின்றீர்களா?
பதில்:– மென்போக்கு என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. மென்போக்கு என்பது குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக பாரிய அழுத்தங்களை வழங்காது கையாள்வதாகும். மாறாக தற்போது ஒட்டுமொத்தமாக சரணாகதி அரசியலில் பயணிக்கின்றோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் விரும்பும் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதென்பது தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் நின்று பார்க்கும் போது அது சரியா என்ற கேள்வியெழுகின்றது.
தந்தை செல்வநாயகம் அறவழியில் போராடி இயலாமை காரணமாகவே தனிநாட்டு பிரகடனத்தை மேற்கொண்டார். அவ்வாறிருக்கையில் தற்போதைய நிலையில் எமது மக்கள் நலன்கள் சார்ந்த பல விடயங்கள் விட்டுக்கொடுக்கும் செயற்பாடுகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- சரணாகதிபோக்கென எந்த அடிப்படையில் கூறிகின்றீர்கள்?
பதில்:– அண்மையில் சாட்சியங்கள்
பாதுகாப்பு தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் வௌிநாடுகளில் கேள்வியெழுப்பியபோது , எமது மக்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு , காணமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சிமளித்துள்ளார்கள். அதேபோன்று எதிர்காலத்திலும் சாட்சியமளிப்பார்கள்கள் எனக் கூறியுள்ளார்.
மிக அண்மையில் காணமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க மக்கள் சென்ற போது அங்கு செல்லவேண்டாம் என பயங்கரவாத விசாரணைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தடுத்திருக்கின்றார்கள்.
அச்சுறுத்தியிருக்கின்றார்கள். இவ்வாறு பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆணைக்குழுவிற்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கமும் குறித்த ஆணைக்குழுவை உதாரணம் காட்சி தம்மை நியாப்படுத்துகின்றது. ஆகவே இவ்வாறான கருத்துக்கள் அப்போக்கையே வௌிப்படுத்துவதாக உள்ளது.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமிழ் மக்கள் ஆணைவழங்கியுள்ளார்கள். அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய ஒட்டுமொத்த தேவையும் கூட்டமைப்புக்கு உள்ளது. ஆகவே இவ்வாறான முரண்பாட்டு போக்கை களைவதற்காக எவ்வாறான நடவடிக்கையை எடுக்கப்போகின்றீர்கள்?
பதில்:- நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ, இந்தியாவுக்கோ எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் அல்ல. தமிழ் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திச் செயற்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
அதன் அடிப்படையில் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய தரப்புக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். தற்போது வரையில் முடிவுகள் எட்டப்படவில்லை. விரைவில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளோம்.
கேள்வி:- அவ்வாறானால் நீங்கள் தமிழரசுக்கட்சியோடு, கூட்டமைப்பின் தலையோடு இவ்விடயங்கள் குறித்த எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தமாட்டீர்களா?
பதில்:- அவ்வாறில்லை. நாம் இவ்விடயங்கள் தொடர்பாக பேசுவதற்காக கூட்டத்தை கூட்டுமாறு கோரிவருகின்றோம். அதன்போது இவ்விடயங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை.
இருப்பினும் அவர்கள் தொடந்தும் இதேபோக்கினை கடைப்பிடிப்பார்களாக இருந்தால் அது தொடர்பில் நாம் சிந்தித்து முடிவுகளை அறிவிப்போம்.
கேள்வி:- 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதிக்கு பின்னர் சர்வதேசத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நம்பியிருக்கின்றது.
தமிழர் பிரச்சினை சர்வதேசத்தில் முதன்மை படுத்தப்பட்டிருப்பதாக கூறியது. தற்போது சர்வதேசத்துடன் இணைந்து பயணிக்கும் ஆட்சி உருவாகியிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்புக்கு அநீதி இழைக்கப்படுமானால் சர்வதேச தரப்பால் நீதி பெற்றுக்கொடுக்கபடுமென தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா?
பதில்:- பலஸ்தீன விடுதலை இயக்கம் எழுபது வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றது. அது தொடர்பாக பல்வேறு பிரேரணைகள் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் கூட நிறைவேற்றப்பட்டன.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அப்பிரேரணையை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறான நிலையிலும் பலஸ்தீன விடுதலை இயக்கம் தொடர்ந்தும் போடிக்கொண்டிருக்கின்றது. அதில் படிப்படியாக முன்னேற்றத்தையும் கண்டு வருகின்றது.
அவ்வாறிருக்கையில் தற்போது எமது பிரச்சினை சர்தேச ரீதியாக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் எமது பிரச்சினைகளை விட வேறு நாடுகளின் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படலாம். இலங்கை அரசாங்கம் காலத்தை வீணடித்து தமதங்களை செய்து மறக்கப்பட்ட விடமாக்கும் செயற்பாடுகளையே நிச்சயமாக முன்னெடுக்க முனைவார்கள். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
ஐ.நா அதிகாரிகளுடன் நாம் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதும் அவர்கள் அமெரிக்க பிரேரணையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்தொடர்கள் தொடர்பில் திருப்தி கொண்டிருக்கவில்லை என்பதை தெரிவித்தார்கள்.
மேலும் இலத்தீன் அமெரிக்க நாடான பரகுவே எமது பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றில் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளது.
ஆகவே எமது பிரச்சினைகளை சர்வதேச தரப்புக்கள் கவனத்தில் கொண்டுள்ளன. முறையான அனுகுமுறைகளை தொடர்ந்தும் மேற்கொள்வோமாகவிருந்தால் சரியான கட்டத்தை நோக்கிச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையுள்ளது.
கேள்வி:- வேறுபட்ட நிலைப்பாட்டிலுள்ள புலம்பெயர் அமைப்புக்களின் நிலைப்பாடு என்வாகவுள்ளது?
பதில்:– புலம் பெயர் அமைப்புக்களில் அதிகளவானவை சர்வதேச விசாரணையையே கோரிநின்றன. அதனைத் தொடர்ந்து கலப்பு விசேட நீதிமன்றத்தை ஐ.நா ஆணையாளர் வலியுறுத்தியபோது அதனை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டள்ளது.
இந்நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை குறித்து இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணிப்புடன் இருப்போம் என்பதே அவர்களின் தற்போதைய நிலைப்பாடாகவுள்ளது. மாறாக அவர்கள் பிரேரணையை ஏற்றுக்கொள்ளவில்லை.
வரவேற்கவுமில்லை. காரணம் அனைத்து வலியுறுத்தல்களையும் கடந்து தற்போது இலங்கை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்மானம் வந்திருக்கின்றது.
ஆகவே அதனை குழப்பியவர்களாக இருக்காது என்ன நடக்கின்றது என்பதை பொறுதிருந்து பார்ப்போம் என்ற கருத்தையும் கொண்டிருக்கின்றார்கள்.
நாமும் அதனையே கூறுகின்றோம். இந்த பிரேரணை விடயங்களை குழப்பியவர்களாக அல்லது குழப்ப முனைபவர்களான எம்மை யாரும் முத்திரை பதிக்க முயல வேண்டாம். மாறாக அதில் சரியான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதையே கூறுகின்றோம்.
கேள்வி:- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உள்நாட்டில் கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்தே பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் பலனில்லை என்ற தோற்றப்பாடு எழுந்துள்ளதே?
பதில்:- முன்னாள் ஜனாதிபதி ஆட்சியிலிருந்து அகற்றப்படுவார் என எண்ணியிருக்காத போதும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அரசியலில் மாற்றங்கள் நிகழலாலம். தற்போதுள்ள அரசாங்கமும் முழுமையாக சீனாவை எதிர்ப்பவர்களல்ல.
பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் சீனாவுடன் இருக்கின்றன. ஆகவே புதிய அரசாங்கத்தினரும் கயிற்றின் மேல் நடப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
அவ்வாறான நிலையில் உள்நாட்டு உலக அரசியல் மாற்றங்களை உணர்ந்து எமது அனுகுமுறைகளை இலக்குகள் நோக்கி முன்னெடுக்கவேண்டும்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேசரிக்கு விசேட செவ்வி