வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து எந்தவித மக்கள் அபிமானமும் அற்ற நிலையில் நீக்கப்பட வேண்டும் என்று சில தரப்புக்கள் விரும்புகின்றன.

அது, மிக அவசரமாக நிகழ்த்தப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருதுகின்றன. அதன்போக்கிலான நகர்வுகளின் பிரதிபலிப்புக்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வெகுவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிக்கும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ மின்னஞ்சல் பரிமாற்றங்கள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

வழமைபோல, தமிழ் ஊடகப் பரப்பு தன்னுடைய சார்பு நிலையினைப் பொறுத்து குறித்த விடயத்தைக் கையாண்டிருந்தது.

அதாவது, சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான தரப்புக்கள் மின்னஞ்சல் பரிமாற்றத்தை வைத்துக் கொண்டு முன்னரும் பின்னரும் நிகழ்ந்தவைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தன.

ஆனால், சி.வி.விக்னேஸ்வரன் சார்பு தரப்போ, அப்படியொரு நிகழ்வே நிகழாதது போன்றதொரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.

ஆனால், குறித்த சர்ச்சைகள் தொடர்பில், வடக்கு மாகாண சபையில் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய விளக்கவுரையொன்றை (பதிலுரையொன்றை) மாத்திரம் வெளியிட, மக்களுக்கு ‘அடியும் முடியும்’ தெரியாத நிலையொன்றை ஏற்படுத்தி விட்டு அச்சர்ச்சைகள் ஓய்ந்தன.

SA01-300x199வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழியப்பட்ட போதிலும், தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட தரப்புக்களினாலேயே பெரு விருப்போடு முன்னிறுத்தப்பட்டார்.

இதற்காக தமிழரசுக் கட்சிக்குள்ளேயே சம்பந்தன்- சுமந்திரன் தரப்பினர் பெரும் எதிர்வினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததுடன், பங்காளிக் கட்சிகளுடனான நீண்ட உரையாடல்களையும் நிகழ்த்த வேண்டியிருந்தது. இந்த நிலையானது தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவான கருத்துப் பரிமாற்றங்களை தோற்றுவிக்கக் காரணமானது.

அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மென்வலு (அல்லது ‘நெகிழ்நிலை’ என்று கொள்க) தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கொழும்பினை வாழ்விடமாக கொண்டவரும், முன்னாள் அரச சேவையாளருமான ஒருவர் தமிழ்த் தேசிய விடுதலை தொடர்பில் எவ்வாறான அக்கறையை வெளிப்படுத்துவார் என்கிற சந்தேகத்தின் போக்கிலான நிலைப்பாட்டினால் எழுந்தது அது.

ஆனால், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த ஆணையோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றது, முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பெரும் ஆரவாரத்தோடு அமர்த்தப்பட்டார்.

அன்று முதல் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்த சர்ச்சைகள் அல்லது விமர்சனங்கள் என்று நோக்குமிடத்தில்,

1. நல்லிணக்க வெளிப்பாடு எனும் வெளிப்பாட்டோடு ‘மக்களின் ஆணையைப் புறந்தள்ளி’ அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டமை.

2. கொழும்பு, இரத்மலானை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மன்மதராசாவினை தன்னுடைய பிரத்தியேகச் செயலாளராக நியமித்தமை. 3.வடக்கு மாகாண அமைச்சர்கள் தெரிவின் போது பங்காளிக் கட்சிகளின் முடிவுகளை உள்வாங்காமல் அமைச்சர்களை நியமித்தமை.

குறிப்பாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் முடிவுகளை மீறி அந்தக் கட்சியின் பொ.ஐங்கரநேசனை அமைச்சராக்கியமை.

4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டமொன்றில் தமிழரசுக் கட்சி சார்பில் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டமை. அதாவது, ‘முன்னாள் ஆயுதப் போராட்ட இயக்கங்களின் பெயரினால் தான் அடையாளப்படுத்தப்படுவதை விரும்பவில்லை’ என்று பேசியமை.

5. ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான அவரின் பகிரங்க விமர்சனங்கள் மற்றும் நிலைப்பாடுகள்.

6. பொதுத் தேர்தலில் எந்தவொரு தரப்பினரையும் ஆதரிக்க முடியாது என்று ஒதுங்கியிருந்தமையும் அதனை முன்னிறுத்தி அவர் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மறைமுக கருத்துக்களும்.

7. இப்போது, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியுடனான முதலமைச்சரின் மின்னஞ்சல் உரையாடல்களை முன்னிறுத்திய விடயங்கள்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் இரண்டு விடயங்கள், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மீது தனிப்பட்ட ரீதியிலும் விமர்சனங்களை தோற்றுவித்திருந்தவை.

முதலாவது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மிக இணக்கமானவராக அடையாளப்படுத்தப்பட்டு வந்த இரத்மலானை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மன்மதராசாவினை தன்னுடைய பிரத்தியேக செயலாளராக நியமித்தமை தொடர்பிலானது.

ஏனெனில், மன்மதராசாவும் சி.வி.விக்னேஸ்வரனும் உறவினர்கள். இரண்டாவது, ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியுடனான முதலமைச்சரின் மின்னஞ்சல் உரையாடல்களை முன்னிறுத்தி வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலானது.

அதாவது, வடக்கு மாகாண சபைக்கு ஐக்கிய நாடுகள் வழங்குவதாக தெரிவித்த நிதி ஒதுக்கீடு மற்றும் அதனை கையாள்வதற்கான தனிப் பணிப்பாளராக நிமலன் கார்த்திகேயன் நியமிக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியை தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார் என்பதுவும், நிமலன் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் பணிக்கான சலுகைகள் தொடர்பில் கோரப்பட்ட விடயங்கள் பற்றியதும். இந்த விடயம் பொதுத் தேர்தலுக்கு முன்னரேயே உயர்மட்டத்தில் பரவலாக பேசப்பட்டது.

அதாவது, அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்றிருந்த நிமலன் கார்த்திகேயன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் (பெறாமகன் முறையிலான) உறவினர் என்றும்,

மீண்டும் குடும்ப உறவினர் ஒருவரை முக்கிய பதவியொன்றில் அமர்த்துவதற்கான நியமனத்தினை வழங்குவதற்கான முனைப்புக்களில் முதலமைச்சர் ஈடுபடுகின்றார் என்பதுமானது. இதுதான், இப்போது, முதலமைச்சர் மீதான தமிழ் மக்களின் அபிமானத்தை அகற்றுவதற்கான விடயமாக சில தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

நிமலன் கார்த்தியேன் தன்னுடைய உறவினர் இல்லை என்றும், அவரின் கடந்தகால பணி அனுபவங்களை முன்னிறுத்தியே ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கிட்டினை முன்னிறுத்திய வேலைத்திட்டங்களுக்கான பணிப்பாளரான நியமிக்குமாறு கோரினேன் என்றும் வடக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆனால், முதலமைச்சருக்கும் ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ மின்னஞ்சல் உரையாடல்கள் எவ்வாறு ஊடகங்களிடம் வெளிவந்தன என்பதுவும், அந்த மின்னஞ்சல்கள் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் (cc- இடப்பட்டன) பகிரப்பட்டன என்பதுவும் கேள்விக்குட்படுத்த வேண்டிய விடயங்கள்.

indexஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் வரவேற்றிருந்த போதிலும், ஐக்கிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இலங்கையின் புதிய ‘மைத்திரி- ரணில்’ அரசாங்கம் பற்றிய நம்பிக்கைகளை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை. மாறாக, பெரும் அதிருப்திகளையே கடந்த காலத்தில் வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.

ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் பணியகமொன்றில் வைத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளக பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான இணக்கத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட விதமும், அதற்கான அவரின் எதிர்ப்பும் கருத்தில் கொள்ள வேண்டியவை.

அதுதான், வடக்கு மாகாண சபைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கீடுகளை தள்ளி வைக்க காரணமானவை என்கிற முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் புறந்தள்ள முடியாதவை.

அதுபோலவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தரப்புக்களை உள்ளக விசாரணைப் பொறிமுறையை ஏற்கச் செய்வதற்கான அமெரிக்காவின் பெரும் முனைப்புக்களின் போதும் முதலமைச்சர் பெரும் எதிர்வினையாற்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முதலமைச்சருக்கும் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையிலான மின்னஞ்சல் உரையாடல்கள் ஊடகங்களில் வெளியான விடயம் தொடர்பில் நான்கு தரப்புக்களின் மீது கவனம் செலுத்த முடியும். முதலாவது, ஐக்கிய நாடுகளின் விதிவிடப் பிரதிநிதியே குறித்த மின்னஞ்சல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கலாம்.

Wigneswaran-with-Sambanthan_CIஇரண்டாவது, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கியிருக்கலாம். மூன்றாவதாக, இரா.சம்பந்தன் வழங்கியிருக்கலாம். நான்காவது, யாராவது இணைய ஊடுருவிகள் மூலம் ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியின் அல்லது, முதலமைச்சரின் மின்னஞ்சலுக்குள் நுழைந்து பெற்றிருக்கலாம்.

இதில், முதலமைச்சர் வெளியிட்டிருக்கலாம் என்பதை ஓரளவுக்கு தவிர்த்துவிடலாம். இணைய ஊடுருவிகள் என்கிற விடயமும் தவிர்க்கக் கூடியது. அப்படியான நிலையில், ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி அல்லது இரா.சம்பந்தன் மீதான சந்தேகங்கள் அதிகமாக கொள்ளப்படக் கூடியவை. இவற்றையெல்லாம் மீறி ஐந்தாவதாக ஒரு காரணத்தினால் குறித்த மின்னஞ்சல்கள் வெளியாகியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழ்த் தேசிய அரசியலில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தற்போதைய நிலைப்பாடு என்பது ஓரளவுக்கு மக்களினால் அங்கிகரிக்கப்பட்டிருக்கின்றது.

பொதுத் தேர்தல் காலத்தில் அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பில் அதிருப்திகள் இருந்தாலும், அதனைத் தாண்டிய அபிமானத்தைக் கொள்வதற்கான சில நடவடிக்கைகளை முதலமைச்சர் கடந்த காலத்தில் முன்னெடுத்திருக்கின்றார்.

அது, அவருக்கு எதிரான உட்கட்சி, வெளிக்கட்சி, தென்னிலங்கை மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட தரப்புக்களுக்கு அச்சுறுத்தலானது.

அதுபோலவே, எப்போதாவது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இன்னொரு அணியொன்று நகர்வதற்கான தோற்றப்பாடுகள் ஏற்படுவதையும் மேற்கண்ட தரப்புக்கள் இரசிக்கவில்லை.

அவை, வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக் காலத்தோடு சி.வி.விக்னேஸ்வரன் அரசியல் அரங்கிலிருந்து எந்தவித அடையாளப்படுத்தல்களும் இன்றி நீக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருக்கின்றன.

அப்படியான கோணமொன்றிலிருந்தும் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான மின்னஞ்சல் உரையாடல் வெளியாகியாகிய விடயமும் நோக்கப்பட வேண்டியிருக்கின்றது.

புருஜோத்தவன் தங்கமயில்

Share.
Leave A Reply