பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியபின், அதில் திருப்தியில்லாமல் மீண்டும் ஆணாக மாறி இப்போது மறுபடியும் பெண்ணாக மாறியுள்ளார்.
குழப்பமாக இருக்கிறதா? சொற்கள் தவறுதலாக இரு தடவைகள் அச்சிடப்படவில்லை. அவர் உண்மையிலேயே 3 தடவைகள் தனது பாலினத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.
ஆணாகப் பிறந்தபின் பெண்ணாக மாறுவதற்கும், பெண்ணாகப் பிறந்த நிலையில் ஆணாக மாறுவதற்கும் சத்திர சிகிச்சைகளை நாடுபவர்கள் எண்ணிக்கை மேற்குலகில் அதிகரித்து வருகிறது.
ஆனால், ஷெல்சி அட்டோன்லி எனும் இவருக்கு தனது பாலினம் எது என்பதில் குழப்பம் நிலவுகிறது.
அதனால், 3 தடவைகள் பாலினத்தை மாற்றிக்கொண்டாராம்.
ஷெல்சி அட்டோன்லிக்கு தற்போது 30 வயதாகிறது. பிறக்கும்போது ஆணாக இருந்தவர் இவர். மெத்திவ் என அவருக்கு பெற்றோர் பெயரிட்டனர்.
எனினும், ஒரு சிறுமியைப் போன்று செயற்படத் தொடங்கினார் மெத்திவ்.
ஆணின் உடல்தோற்றம் கொண்ட பெண் என தன்னை அவர் கருதினாராம். 18 வயதில் அவர் பெண்ணாக மாறினார்.
தனது மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்வதற்காக அவர் 5000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களை செலவிட்டார்.
ஆனால், பெண்ணாக மாறியதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே, மீண்டும் ஆணாக மாறுவதற்கு அவர் தீர்மானித்தார். சிறிது காலம் ஆணாக அவர் வாழ்ந்தார்.
முழுமையாக ஆணாக மாறுவதற்காக மீண்டும் சத்திரசிகிச்சை செய்துகொள்ள அவர் எண்ணினார்.
எனினும் தனது கவர்ச்சியான உடல் வளைவுகளை துறப்பதில் அவருக்கு தயக்கம் ஏற்பட்டதாம்.
எனவே, தொடர்ந்தும் பெண்ணாக இருப்பதற்கு தான் தீர்மானித்ததாக ஷெல்சி கூறுகிறார்.
இது தொடர்பாக ஷெல்சி தெரிவிக்கையில், “அப்போது நான் மத்திவ் என ஆணாக வாழ்ந்தேன்.
எனது மார்பகங்களை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிக்கொள்வதற்கு நான் தீர்மானித்தேன்.
ஆனால், கண்ணாடியில் எனது உடலை பார்த்தபோது மார்பகங்களை அகற்றப்போவதை எண்ணி எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.
அதையடுத்து, எனது மார்பகங்களை அகற்றிக்கொள்ளாமல் தொடர்ந்தும் பெண்ணாக வாழ்வதற்கும் மார்பகங்களை மேலும் பெரிதாக்கிக் கொள்வதற்கும் விரும்பினேன்.
இத்தீர்மானத்தையடுத்து மீண்டும் பெண்ணாக வாழ ஆரம்பித்தேன்”என அவர் கூறியுள்ளார்.
நாம் ஆணா, பெண்ணா என்ற குழப்பநிலை ஒரு மனோவியாதி எனக்கூறும் ஷெல்சி இதற்கு சிகிச்சை அவசியம் என்கிறார்.
பாடசாலைக்காலத்தில் சக மாணவிகளிடமிருந்து மேக்கப் டிப்ஸ்களை பெற்றுக் கொண்டதாக ஷெல்சி கூறுகிறார்.
“பலர் என்னைக் கேலி செய்தனர். ஆனால், சிறந்த நண்பிகள் குழாமொன்று எனக்குக் கிடைத்தது.
எனக்கு 18 வயதானபோது, ஆண்களின் உடற்தோற்றம் கொண்ட யுவதிகள் குறித்த கட்டுரையொன்றை வாசித்தேன்.
அதையடுத்து நானும் பெண்ணாக மாற விரும்பி மருத்துவர்களிடம் எனது நிலையை தெரிவித்தேன்.
பால்மாற்றம் குறித்து எனது தாயிடம் கூறுவதற்கு நான் தயங்கியபோதிலும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார்” என்கிறார் ஷெல்சி.