யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த வாகீசன் தர்சனி என்ற பெண்ணை துரத்திச் சென்று கத்தரிக்கோலினால் குத்திக் கொன்ற கணவனுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மனைவி தன்னை முறைகேடான வகையில் பேசியதால் ஏற்பட்ட கோபாவேசம் காரணமாக கணவனாகிய நவரட்னம் வாகீசன் கைமோசக் கொலை புரிந்துள்ளார் என அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குற்றவாளி, பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தீர்ப்பு, மனைவி மற்றும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி கைதடியில் வாகீசன் தர்சனி என்ற பெண்ணைக் கொன்றதாக, அவருடைய கணவன் நவரட்னம் வாகீசன் என்பவருக்கு எதிராக கொலைக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, இந்தச் சம்பவம் நடை.பெற்ற போது அதனை நேரில் கண்ட, இறந்தவரின் மகளாகிய  வாகீசன் சாருஜா (அப்போது அவருக்கு வயது 4.

தற்போது 10 வயது) சாட்சியமளிக்கையில், பெரிய கத்தரிக்கோல் ஒன்றினால், அப்பா அப்போது மீசை தாடி வெட்டிக்கொண்டு இருந்தார்.

அம்மா உரலில் சம்பல் இடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அம்மா அப்பாவைப் பேசினார். அப்பாவுக்கு கோபம் வந்தது. உடனே அப்பா கத்தரிக்கோலுடன் அம்மாவைத் துரத்தினார்.

அம்மா உலக்கையையும் கையில் கொண்டு ஓடியபோது, மர வேரில் கால் தடக்குப்பட்டு கீழே விழுந்தார். கீழே விழுந்த அம்மாவை, அப்பா கையில் இருந்த கத்தரிக்கோலினால் அவருடைய நெஞ்சில் குத்தினார் என தெரிவித்தார்.

இறந்தவரின் சகோதரியான சிறிஸ்கந்தராஜா துஸ்யந்தினி என்பவரும் இந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்தார்.

கத்தரிக்கோலால் கணவன் என்னைக் குத்திப்போட்டான் நீ தான் என்ர பிள்ளைய பார்க்க வேணும் என்று காயமடைந்த தனது சகோதரி இறப்பதற்கு முன்னர் தன்னிடம் தெரிவித்தாகக் கூறினார்.

இவருடைய சாட்சியத்தை இறந்தவரின் மரண வாக்குமூலமாக நீதிமன்றம் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டது.

இறந்தவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்திய அதிகாரி சாட்சியமளிக்கையில் உடலில் குத்துக் காயம் காணப்பட்டதாகவும், அது, 12.5 சென்ரி மீற்றர் ஆழத்திற்குச் சென்று இருதயப் பகுதியை சேதப்படுத்தியிருந்ததனால், மரணம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் ஆரம்ப விசாரணைகள் நடத்திய பொலிஸ் புலனாய்வு அதிகாரி, எதிரி தனக்கு அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இறந்தவரைக் குத்துவதற்காகப் பயன்படுத்திய கத்தரிக்கோலைக் கைப்பற்றியதாக தனது நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வழக்கின் எதிரியாகிய நவரட்னம் வாகீசன்  சாட்சியமளிக்கையில், ‘அவ, எனது மனைவி என்னுடைய அம்மாவையும் சகோதரியையும் என்னுடன் தகாத முறையில் சேர்த்து கேவலமாகப் பேசினார்.

அவருடைய மிகவும் கேவலமான வார்த்தைப் பிரயோகத்தினால் எனக்கு கோபம் வந்தது. அப்போது தனது கையில் இருந்த கத்தரிக்கோலை அவர் மீது எறிந்தேன். அது, அவருடைய நெஞ்சில் பட்டுவிட்டது’ எனக் கூறினார்.

அப்பாவின் இந்த சாட்சியத்தைக் கேட்ட கண்கண்ட சாட்சியாகிய மகள் சாருஜா உடனடியாகவே அவருடைய கூற்றை மறுத்துரைத்தார். ‘அப்பா கோபத்தோடு, அம்மாவைத் துரத்திச் சென்றார். அம்மா தடக்கி கீழே விழுந்தபோது, அப்பா அவரைக் கத்தரிக்கோலினால் குத்தியதைக் கண்டேன்’ என தெரிவித்தார்.

வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் இந்த வழக்கில்  கோபாவேசம் காரணமாக கணவன் தனது மனைவியைக் கைமோசக் கொலை புரிந்துள்ளார் என தெரிவித்தார்.

ஆயினும், சாதாரண வாய்த்தர்க்கத்திற்கு நியாயமான மனிதன் ஒருவன் கடும் கோபம் அல்லது திடீர் கோபம் அடைவது குறைவு என கூறியுள்ள நீதிபதி, எதிரி கத்தரிக்கோலைக் கையில் வைத்து மனைவியை 50 அடி தூரத்திற்குத் துரத்திச் சென்று குத்தியுள்ளமை – அதுவும் அவருடைய நெஞ்சில் இருதயப்  பகுதியில் குத்தியமை, அவருடைய குற்ற எண்ணத்தை எண்பித்திருக்கின்றது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியாகிய குழந்தை சாருஜா, 4 வயதாக இருந்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நடைபெற்ற மரண விசாரணையில் சாட்சியமளித்துள்ளார்.

அதில் அம்மாவும் அப்பாவும் சண்டை பிடித்தார்கள். அப்பா ஓடிவந்து அம்மாவுக்கு கமக்கட்டுக்குக் கீழே கத்தரிக்கோலினால் குத்தினார். அதை நான் கண்டேன் என அந்தக் குழந்தை அந்த சாட்சியத்தில் தெரிவித்திருந்தது.

அதே குழந்தை 6 வருடங்களின் பின்னர், இந்த நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், எந்தவிதமான மாறுபாடும் இல்லாமல், சம்பவத்தின்போது தான் கண்டதை அப்படியே தெரிவித்திருக்கி;ன்றது

என்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இளஞ்செழியன் இந்தத் தீர்ப்பில் விசேடமாகத் தெரிவித்ததாவது:

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் மனைவியின் மரணம் கணவனின் கையில் உள்ளது என்பதற்கு இந்த வழக்கு உதாரணமாக அமைந்துவிட்டது. சாதாரண ஒரு வாய்ச்சண்டை ஆட்கொலையில் சென்று முடிவடைந்திருப்பதை இந்த வழக்கில் காணமுடிகின்றது.

மனைவி தனக்கு திருப்பி அடிக்கமாட்டார் என்ற துணிவில், கணவனான எதிரி அவரைத் துரத்திச் சென்று கத்தரிக்கோலால் குத்தியுள்ளார்.

கொல்லப்பட்ட பெண் ஓடும்போது, உரலில் சம்பல் இடித்துக்  கொண்டிருந்த உலக்கையை கையில் கொண்டுதான் ஓடியுள்ளார்.

தற்காப்புக்காகவாவது கத்தரிக்கோலுடன் தன்னைத் துரத்திக் கொண்டு வந்த தனது கணவன் மீது தன்னுடைய கையில் இருந்த, அந்த உலக்கையை அவர் பயன்படுத்தவில்லை.

பெண்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்காகவே, வீட்டு வன்முறைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மனைவி கொடுமை செய்தால் விவாகரத்து பெறுவதற்கு சிவில் சட்டம் அனுமதித்திருக்கின்றது.

இந்த வகையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநா பெண்கள் மாநாட்டு மனித உரிமை உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில், பெண்களுடைய நலன்களைப் பாதுகாக்க, பெண்கள் விவகாரத்துக்கென அரசாங்கத்தில் தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால், குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள  எதிரிக்கு 16 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது. தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறினால், அதற்காக 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த எதிரி, மனைவியின் மரணம் சம்பந்தமான வழக்கு விசாரணைகள் முடிவடையாத நிலையில், வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

மனைவி மற்றும் பெண்கள் மீது வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும், என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply