தன்னை எப்போதும் மற்றவர்களை விட அதிக புத்திசாலியாகவும் , திறமையானவனாகவும் காட்டிக்கொள்வதில் விருப்பம் கொண்டவன் தாவூத். அதை பல்வேறு சம்பவங்களில் உணர்த்தியும் இருக்கிறான்.
பல சமயங்களில் அவனது நடவடிக்கைகள் எல்லாம் கை தேர்ந்த அரசியல்வாதிபோல இருக்கும். யாராலும் செய்ய முடியாது என்று தவிர்க்கப்பட்ட ‘விஷயத்தை’ கொஞ்சம் கூட உயிர் பயமின்றி சவாலாக செய்து முடிப்பது தாவூத்துக்கு பிடிக்கும்.
சிங்கப்பூர் தேசம் வளர்ந்து வந்த நேரம். எல்லோரின் பார்வையும் சிங்கப்பூர் பக்கம் இருந்து வந்தது. சுற்றுலா உள்பட பல்வேறு தொழில்கள் மூலம் அந்த நாட்டின் வருமானம் கொட்டியது.
இந்தியாவில் இருந்து பெரும்பாலான பணக்கார தொழில் அதிபர்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் சென்று வந்தனர். மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ஒருவர், சிங்கப்பூருக்கு டூர் செல்வதாக சொல்லிவிட்டு, அங்கு வைத்து தனது பிசினஸ்களை செய்து வந்தார்.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை வரி கட்டாமல் இந்தியாவுக்கு வாங்கியும் வந்தார். லண்டனைச் சேர்ந்த பெரும் புள்ளிகளுக்கு சிங்கப்பூரில் வைத்து வரி கட்டாமல் வைரங்களை விற்றும் வந்தார்.
அடிக்கடி வந்து போனதால், ‘இவர் சுற்றுலாவுக்கு வரவில்லை; ஏதோ செய்கிறார்’ என்று இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகள், அவர் மீது சந்தேகப் பார்வையை செலுத்தினர்.
அதற்கு ஏற்றாற்போல மும்பையில் இவரது நடவடிக்கைகள் இருந்தன. மும்பையின் டான்களான கரீம் லாலா மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகிய இருவருக்கும் நெருக்கமாக இருந்தார்.
இருவருக்கும் அன்பளிப்புகளை அள்ளி வழங்கினார். தனது தொழிலில் எந்த வித பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்று மும்பையின் மிகப்பெரிய தலைகளுக்கு தானாக முன்வந்து சலுகைகள் செய்து வந்தார்.
அதனால் மார்வாடி சமூகத்தை சேர்ந்த அந்த வைர வியாபாரியின் உண்மையான பெயர் மறைக்கப்பட்டு, லால் சேட் என்றால் மும்பையின் அனைத்து பெரும் புள்ளிகளுக்கும் தெரிந்து இருந்தது.
இந்த விஷயம் மெல்ல மெல்ல போலீஸ், கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும் தெரிந்து இருந்தது. யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார் வைர வியாபாரி.
அரசுக்கு கட்ட வேண்டிய வரிப் பணத்தைக் கட்டாமல் அதிக அளவில் கருப்பு பணத்தை வைத்து இருந்தார். வரி கட்ட வேண்டிய பணத்தில் ஒரு சிறிய தொகையை, அந்தந்தத் துறையின் அதிகாரிகளுக்கு கொடுத்து வந்தார்.
அதனால் பல்வேறு அதிகாரிகளும் அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். ஒரு சில நேர்மையான அதிகாரிகளும் இருந்து வந்ததால் அந்த வைர வியாபாரியை திட்டமிட்டு மடக்க காத்திருந்தனர்.
மிக விலையுயர்ந்த வைரக்கற்கள் அடங்கிய ஒரு பெட்டியை சிங்கப்பூரில் இருந்து இந்தியா கொண்டுவர வேண்டும். அந்த கற்களின் மதிப்பு அப்போதே இரண்டு கோடிகள்.
கஸ்டம்ஸ் அதிகாரிகள் தன்னை மடக்கப்போவதாக லால் சேட்டுக்குத் தகவல் வந்தது. சிங்கப்பூர் சென்றால் வழக்கமாக செல்லும் ஒரு ஹோட்டல் ஒன்று இருந்தது.
அந்த ஹோட்டலில் மும்பையைச் சேர்ந்த ஒருவன் வேலை செய்து வந்தான். அவனின் உபசரிப்பில் கொஞ்ச நாளில் அவனையும் தன்னுடைய ஆளாக பயன்படுத்திக்கொண்டார் லால் சேட்.
அதனால் சிங்கப்பூரில் லாலுக்கு எல்லாமாக இருந்துவந்தான் மும்பைக்காரன். தன்னை இந்திய அதிகாரிகள் கைது செய்தால் எளிதாக வெளியே வந்து விடலாம், சிங்கப்பூர் அரசு கைது செய்தால் வெளியே வரமுடியாது.
மரண தண்டனைகூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பயந்த லால், தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து நேராக கிளம்பி, மும்பைக்காரன் அறையில் அந்த வைரக்கற்களை, அவனது கழிவறையில், அவனுக்கே தெரியாமல் ரகசியமாக வைத்துவிட்டு உடனடியாக இந்தியாவுக்கு ஃபிளைட் பிடித்தார்.
இந்தியாவில் லால் சேட்டை மடக்கி கடுமையாக சோதனைகள் செய்தார்கள். நடந்த எல்லா சோதனைகளிலும் எதுவும் கிடைக்கவில்லை.
வெறும் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார் சேட். ஒரு மாத காலம் ஆகிவிட்டது. பண நெருக்கடியால் சேட் சிக்கி தவித்து நின்றார். வேறு வழியில்லாமல் பல்வேறு நபர்களின் உதவிகளை நாடினார்.
பல்வேறு நபர்கள் சிரமம் எடுத்தும், வைரக்கற்களை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை. கடைசியாக தாவூத்திடம் வந்தார்.
தாவூத் அதற்கு கைமாறாக பாதிக்குப் பாதி பங்கு கேட்டான். சேட்டும் ஒப்புக்கொண்டு எப்படியாவது வைரம் வந்தால் போதும் என்று தாவூதின் டீலுக்குத் தலையாட்டினான்ர்.
வைரத்தை சொன்னபடி சொன்ன தேதியில் லாலிடம் கொண்டுவந்து சேர்த்தான் தாவூத். மிரண்டு போனார் லால். என்ன செய்வது என்று தெரியாமல் தாவூத்துக்கு சலாம் அடித்து நன்றி கூறினார்.
எப்படி கொண்டு வந்தாய் என்று சேட் எத்தனையோ முறை கேட்டும், தாவூத் அதனைப்பற்றி வாய் திறக்கவே இல்லை. ஆனால் அந்த ரகசியம் தாவூதின் சகோதரருக்கும்,தாவூத்தின் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்து இருந்தது.
பயங்கரமான கண்காணிப்பு வளையத்தில் இருந்து வந்த லால் சேட்டின் வைரத்தை சிங்கப்பூரில் இருந்து மும்பைக்குக் கொண்டுவர பல்வேறு சிரமங்கள். கெடுபிடிகள் இருந்து வந்தன.
அந்த நேரம் பார்த்து சிங்கப்பூரில் வேலை செய்துவந்த தாவூத்தின் கூட்டாளி ஒருவனின் உறவினர், விபத்து ஒன்றில் இறந்து விட, இறந்தவனின் உடலை மும்பைக்குக் கொண்டுவர முடியாமல் தவித்து வந்தனர். இந்த விஷயம் தாவூத்துக்குத் தெரிய வந்ததும் அதனை வைத்து இரண்டு திட்டங்கள் தீட்டினான்.
இறந்தவரின் உடலை கொண்டுவர எல்லா ஏற்பாடுகளும் செய்துதருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, தனது கூட்டாளி இஜாஜாஸ் என்பவனை உடனடியாக சிங்கப்பூர் அனுப்பினான்.
அங்கே வழக்கமாக செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, ஜெனெரல் மருத்துவமனையில் இருந்த பாடியை வாங்கினார்கள். அங்கிருந்து ஏர்போர்ட் வரும் வழியில் ஒரு சிலரின் உதவியோடு இறந்தவனின் உடலில் வைரக்கற்களை மறைத்து வைத்துவிட்டான் இஜாஜாஸ்.
மரத்திலால் ஆன சவப்பெட்டியை ரெடி செய்து அதனுள் பாடியை வைத்து, சிங்கப்பூரில் இருந்த அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, பத்திரமாக இந்தியா செல்லும் ஃபிளைட்டில் ஏற்றிவிட்டனர்.
அதே சமயம் அங்கு பத்திரமாக வந்தாலும், இந்தியாவில் இருந்து தாவூத்தின் ஆட்களின் சிங்கப்பூர் பயணத்தின் உள்நோக்கம் பற்றி தெரிய முடியாமல் குழம்பி இருந்தனர்.
பார்சல் உள்பட இறந்த உடலினை பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவருக்கு லம்பாக ஒரு தொகையை கொடுத்து தாவூத்தின் ஆட்கள் சரிசெய்து வைத்து இருந்தனர்.
சிறிய அளவில் எலெக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் வருகிறது. அதை கண்டுகொள்ளாமல் விடவேண்டும் என்று சொல்லி இருந்தனர்.
வைரம் வரும் கதையை மறைத்து இருந்தனர். சொன்னபடி தாவூத்தின் நண்பன் பிணத்தின் சவப்பெட்டிக்குள் ஒரு சில கடிகாரங்கள், ட்ரான்ஸ்சிஸ்டர்கள் என்று மறைத்து வைத்து கொண்டுவந்தான்.சோதனை செய்யும் இடம் வந்ததும் மேலோட்டமாக பார்த்த அதிகாரி கண்டுகொள்ளாமல் அனுப்பிவிட்டார்.
எல்லா சோதனைகளும் முடிந்து மும்பையில் இருந்து பிணம் நேராக நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தது. இடையில் இடைமறித்த தாவூத், வைரங்களை மட்டும் வாங்கிவிட்டு பிணத்தை அனுப்பிவிட்டான்.
இப்படிதான் தாவூத் யாரும் செய்ய முடியாத செயலை துணிந்து செய்தான். பல்வேறு பொருளாதார நெருக்கடிகளில் இருந்து லால் விடுபட்டார். அதே நேரத்தில் மிகப்பெரிய பணத்தை ஒரே வேலையில் முழுதாக கையில் பார்த்தான் தாவூத்.
நடந்த சம்பவங்கள் மெல்ல மெல்ல கரீம் லாலாவுக்கும் மஸ்தானுக்கும் தெரியவந்தது. ஆனால் எப்படி செய்தான் என்று யாருக்கும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
எல்லா சம்பவங்களிலும் அடாவடித்தனம் கை கொடுக்காது என்று பல்வேறு நபர்கள் உணரத் தொடங்கினர். தாவூத்தின் இந்த திறமையை பற்றி வெளியே எல்லோரும் பேசி முடிப்பதற்குள், தாவூத் அடுத்தக்கட்ட வளர்ச்சியை எட்டி இருந்தான்.
இனக் குழுக்கள் போல கடத்தல் குழுக்களும் மும்பையில் நிரம்பி இருந்தது. அதனால் அரசுக்கு பெரும் நெருக்கடியான சூழல் நிலவி வந்தது.
இந்தியாவின் பெரும் வரி ஏய்ப்பு சம்பவங்கள் மும்பை, குஜராத், டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் அரசுக்கு தெரிந்தே நிகழ்ந்து வந்தது. போதிய ஆதாரங்கள் இல்லாமல் அரசு வேடிக்கை மட்டும் பார்த்து வந்தது.
பல்வேறு திறமையான அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு போட்டுப்பார்த்தனர். ஆனாலும் கடத்தல்கார்கள், கருப்பு பணக்காரர்கள், தொழில் அதிபர்களின் ஆட்டங்கள் அடங்கவே இல்லை. வழக்கமாக நடைபெறும் எல்லா திரைமறைவு தொழில்களும் வெகு ஜரூராக நடந்துகொண்டு இருந்தன.
பிக்பாக்கெட் திருடன் முதல் பெரிய டான்கள் என எல்லோரையும் சிறைக்குத் தள்ள அரசு காத்திருந்தது. அதற்கான நேரமும் வந்தது. இந்த முறை நாட்டுக்கு அச்சுறுத்தல் தந்துவந்த பல்வேறு முக்கிய நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் தாவூத்தும் ஒருவன்….
அடுத்து நடந்தது என்ன?