இலங்கையில் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ்க் கைதிகளில் கணிசமானவர்களை அடுத்த மாதம் 7-ம் திகதிக்குள் விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.
நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுடன் இன்று காலை நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நீதியமைச்சரும் தானும் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் முடிவில் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள், வழக்கு விசாரணையின் கீழ் உள்ளவர்கள் மற்றும் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் என்று மூன்று பிரிவினராக தமிழ்க் கைதிகள் சிறைகளில் உள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.
வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன்வைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறினார்.
வழக்கு நடந்துகொண்டிருக்கும் கைதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழ்க் கைதிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் கோரியிருந்த மூன்றுமாத அவகாசத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
பாரதூரமான குற்றங்களைச் செய்த கைதிகளைத் தவிர மற்றக் கைதிகளின் பிரச்சனைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்ற சமரசம் இருதரப்பிலும் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
நீதியமைச்சருடனான பேச்சுவார்த்தையில் தன்னுடன் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த முடிவு தொடர்பில் உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு ‘இனி அமல்படுத்தப்படுவது கைதிகளின் முடிவில் தங்கியுள்ளது’ என்றார் சம்பந்தன்.
கைதிகள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தம் செய்யலாம் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
இன்றைய 16-10-2015 இலங்கை செய்திகளை முழுமையாக பார்வையிடுங்கள்
-BBC செய்திகள்-
அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை : பொன்சேகா
விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கடந்தக் காலங்களில் எமது நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்று முழுவதுமாக ஒத்துழைப்பு தந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வெறுமனே இவர்களை மட்டும் அரசியல் கைதிகளாக எந்த ஒரு விசாரணைகளும் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்;டார்.
நாடளாவிய ரீதியில் தமக்கான விடுதலையினை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
எமது நாட்டில் கடந்தகாலங்களில் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கையின் போது எமது இராணுவ வீரர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது எமது நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தனர்.
இவ்வாறான நிலையில் விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்களும், கேபி என குறிப்பிடப்படும் குமரன் பத்மநாதன் உட்பட சில உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படும் போது இவர்களை மட்டும் எவ்வித விசாரணைகள் இன்றி நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்ற செயல் என்றே குறிப்பிட வேண்டும்.