பெங்களூர்: கள்ளக்காதலுடன் தப்பியோடிய 4 வயது குழந்தையின் தாய், தன்னை யாரோ கடத்திவிட்டதாக கணவருக்கு போன் செய்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. பெங்களூர் போலீசாரின் தூக்கம் கெடுத்த இந்த கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட கள்ளக்காதலியும், காதலனும் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டனர். பெங்களூர், யஷ்வந்த்பூர் அடுத்துள்ள எம்.எஸ்.பாளையா பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி நந்தினி (29), கம்மனஹள்ளியிலுள்ள ஐடி கம்பெனியொன்றில் ரிசப்சனிஷ்டாக வேலை பார்க்கிறார். தம்பதிகளுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, 8 மணியளவில் நந்தினி, தனது கணவருக்கு செல்போனில் இருந்து அழைப்புவிடுத்துள்ளார்.
பதற்றத்தோடு பேசிய நந்தினி, விதானசவுதா அருகே பஸ்சுக்காக நின்றபோது, ஆட்டோவில் தன்னை சிலர் கடத்திச் செல்வதாகவும், தற்போது பி.இ.எல் சர்க்கிளில் (பெங்களூரின் ஒரு பகுதி) ஆட்டோ விரைந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
போன் கட்
அதிர்ச்சியடைந்த பாஸ்கர், உடனே ஆட்டோவில் இருந்து நந்தினியை கீழே குதித்து, பிறரிடம் உதவி கேட்குமாறு அலறியுள்ளார். ஆனால், உடனே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திரும்ப போன் செய்தபோது, நந்தினி போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
போலீஸ் பரபரப்பு
பதற்றத்தோடு சதாசிவநகர் காவல் நிலையம் ஓடினார் பாஸ்கர். நடந்தவற்றை போலீசாரிடம் எடுத்துக்கூறினார்.
சட்டசபை கட்டிடம் அமைந்துள்ள விதான சவுதா அருகேயிருந்து ஒரு பெண் கடத்தப்பட்டுள்ளதாக கூறி வந்த புகாரை கேட்டு போலீசார் திடுக்கிற்றனர். ஏற்கனவே ஐடி ஊழியர் ஒருவர் ஓடும் வேனில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில்தான் பெங்களூரில் நடந்திருந்ததால் போலீசார் உடனடியாக ஆக்ஷனில் இறங்கினர்.
அதிரடி நடவடிக்கைகள்
கடத்தல் புகாரை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நகரில் இயங்கும் அனைத்து ஆட்டோக்களையும் முற்றிலும் சோதனை செய்ய டிராபிக் போலீசாருக்கு உத்தரவு பறந்தது. அதேநேரம், நந்தினியிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு எந்த பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
போலீசுக்கு சந்தேகம்
நந்தினி செல்போனில் பேசியபோது, அவர் தமிழக எல்லைக்குள் இருந்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பி.இ.எல் சர்க்கிளில் இருப்பதாக நந்தினி கூறியதற்கும், செல்போன் டவர், தமிழகத்தை காட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தனர் போலீசார். அவர்களுக்கு நந்தினி நாடகம் ஆடுவதாக சந்தேகம் எழுந்தது.
கதை அப்படி போகுதா
இதையடுத்து, நந்தினிக்கு நெருக்கமானவர்கள் செல்போன் எண்கள் அனைத்தையும் பாஸ்கரிடமிருந்து கேட்டு பெற்றனர் போலீசார்.
அதில் அந்தோணி என்பவரின் செல்போன் எண்ணும், நந்தினி எண்ணும் ஒரே பகுதி டவர் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டறிந்தனர் காவல்துறையினர். உடனடியாக அந்தோணியின் செல்போன் டவர் தற்போது எந்த பகுதியில் உள்ளது என்பதை தொடர்ந்து டிரேஸ் செய்தபடி இருந்தது காவல்துறை.
நாடகம் அம்பலம்
அந்தோணியின் செல்போன் டவர் கோவையை காட்டியது. இதையடுத்து, நந்தினி வேலை பார்த்த நிறுவனத்தில் உள்ளோரிடம் அந்தோணி பற்றி போலீசார் விசாரித்தனர். அவர் அந்த நிறுவன முன்னாள் ஊழியர் என்பதும், அவருடன் நந்தினி நெருக்கமாக இருந்ததாகவும் தகவல் கிடைத்தது.
மேலும், அன்று அலுவலகத்தை விட்டு கிளம்பும்போது, “நான் கொஞ்சநாளைக்கு பிறகுதான் உங்களை பார்ப்பேன்” என்று நெருங்கிய நண்பர்களிடம் நந்தினி கூறியிருந்தார் என்ற தகவலும் அம்பலமானது.
மடக்கிப் பிடிப்பு இதையடுத்து கோவை விரைந்த போலீசார் கடத்தல் நாடகமாடிய நந்தினி மற்றும் கள்ளக்காதலன் அந்தோணி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். ஒரு பெண்ணின் கள்ளக்காதல் ஒட்டுமொத்த சிட்டி போலீசாரின் தூக்கத்தையே கெடுத்த சம்பவத்திற்கு இது ஒரு லேட்டஸ்ட் உதாரணம்.