தீர்வுப்பொதி என்ற பொதுப்   புள்ளியிலிருந்து, தமிழர் தரப்போடு, தீர்வுக்கான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான பொது இணக்கப்பாட்டுக்கு இலங்கை அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த பத்தியாளருடன் பேசும்போது அண்மையில் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களின் தீர்வு எனப்படுவது விடைகாணப்பட முடியாத விவகாரமாக, தசாப்தங்களின் தத்துப்பிள்ளையாக, கைமாறப்பட்டுவருகின்ற இந்த வேளையில், ஏதாவது ஒரு பொதுப்புள்ளியில் இருதரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டிய கடப்பாடு மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆரோக்கியமான விடயம்.

மேற்குலகு சார்பாக ஆட்சிமாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் பின்னர் அவை முறிந்துபோவதும் இலங்கையின் வரலாற்றின் சம்பிரதாய நிகழ்வுகளாவிட்டன.

இந்த அவநம்பிக்கையான மரபுகளிலிருந்து வெளியேறி, பல இலட்சக்கணக்கான மக்களை பலிகொடுத்து நினைத்துப் பார்க்கமுடியாத அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் புரிந்து இன்னமும் விடியலுக்காக ஏங்கி நிற்கின்ற ஒரு தேசிய இனத்தின் அரசியல், பொருளாதார அபிலாஷைகளுக்கு தீர்வளிக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும், முன்னெப்போதுமில்லாத வகையில் சர்வதேச சமூகத்தின் தோள்களில் தற்போது விழுந்திருக்கிறது.

அந்த வகையில், ஜெனீவாத் தீர்மானத்துக்குப் பின்னர் வெளிவந்திருக்கும் இந்த தகவல், தமிழ்மக்களைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கை தரவல்ல ஒளிக்கீற்றாக நோக்கப்படக்கூடிய விடயமாகும்.

IMG_0003

‘நீலன் திருச்செல்வம்

இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகள் அனைத்தும் காலம் காலமாக முன்வைத்த தீர்வுப்பொதிகளை எடுத்து நோக்கினால், அவற்றில் பெரும்பாலனவர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டது ‘நீலன் திருச்செல்வம் அவர்களின் தீர்வுப்பொதி’ ஆகும்.

1995 இல் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட இந்த தீர்வுப்பொதியை, இப்போது அரசியலில் உள்ள பலரும் அப்போது பெரிதும் வரவேற்றிருந்தனர்.

இந்த தீர்வுப் பொதியைப் பொறுத்தவரை இது ‘பிராந்தியங்களின் கூட்டமைப்பு’ என்ற விடயத்தை விரிவாக பேசுகிறது.

இந்த தீர்வுப்பொதியை அப்போது ஐக்கிய தேசியக் கட்சிகூட ஆதரித்திருந்தபோதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்ற விடயத்தில்தான் அரசுடன் முரண்பட்டுக்கொண்டது.

ஆனால், தற்போதைய ஜனாதிபதி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து தான் ஒருமுறை வகிக்கப்போகும் பதவிக்காலத்திலேயே நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வினை பெற்றுக்கொடுக்கப்போவதாக, தனது 100 நாட்கள் திட்டத்தில் தெரிவித்திருந்தமை இது விவகாரத்தில் கொள்கையளவில் சாதகமான சமிக்ஞைகளையே காண்பித்திருக்கிறது.

இணைந்த வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் எட்டு பிராந்தியங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தம்மைத் தாமே நிர்வகிக்கும் ஆட்சிக்கட்டமைப்பை உருவாக்கி வழங்கவல்ல இந்த தீர்வுப்பொதி, இப்போதிருக்கும் மத்திய அரசின் அதிகார கெடுபிடிகளைப் பெரிதும் தளர்த்தும் யோசனைகளை முன்வைத்திருந்தது.

நாட்டின் மிக முக்கிய விவகாரங்களான வெளிவிவகார கொள்கை, இராணுவம் போன்றவற்றை தவிர்த்து கணிசமான விடயங்களில் பிராந்திய ஆட்சிக்கட்டமைப்புக்களே நேரடியாக முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் அதிகாரங்களை வழங்குவதற்கு இந்த தீர்வுப்பொதி வழிகாட்டியிருந்தது. (இந்த தீர்வுப்பொதி தொடர்பான விரிவான ஆய்வொன்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்)

தற்போது பிரச்சினை யாதெனில், இந்த வகையான தீர்வுப்பொதிகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கு நிறைவேற்று அதிகாரத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஜனாதிபதியும் ஏகபோகமான ஆதரவு மிக்க பிரதமராக மிளிரும் ரணிலும் எவ்வளவு தூரம் சிங்கள தேசத்தை சமாளிக்கப்போகிறார்கள் என்பதுவே ஆகும்.

அண்மையில், சட்டத்தரணி புவிதரனுடன் பேசும்போது மிகவும் முக்கியமான விடயம் ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது, ஐ.நா. தீர்மானம் தொடர்பான விதந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பாகவும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பான விளக்கங்களை தெரியப்படுத்தும்போதும் ஜனாதிபதி மைத்திரியும் ரணிலும் தென்னிலங்கை தரப்பைத்தான் தொடர்ந்தும் ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தார்களே தவிர, இதுவரையில் தமிழர்தரப்பை நோக்கி ஒரு பேச்சுக்காவது ஒரு நல்லெண்ண சமிக்ஞைமிக்க ஓர் அறிக்கையை அரசு விடுக்கவில்லை.

‘உங்களுக்கு மின்சாரக்கதிரை இல்லை என்றும் உங்களை போர்க்குற்றங்களுக்காக தண்டிக்க விடமாட்டோம் என்றும் உங்களது, பெயர்களை வெளியிட விடமாட்டோம் என்றும் படைத்தரப்பை சமாளிப்பதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு துளியை கூட, பாதிக்கப்பட்ட தரப்பினரை நோக்கி மேற்கொள்ளவில்லை.

‘மருந்துக்கு தன்னும் ஒரு மன்னிப்புக் கோரவில்லை. ஐ.நா. தீர்மானத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களைத் தங்களுக்கு எதிராக சவாலான சக்தியாக பார்க்கும் நிலைப்பாடுதான் அரசுத்தரப்பில் தெரிகிறதே தவிர, ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டிய சமூகமாக தமிழர் தரப்பை அரசு பார்க்கவில்லை’ என்று அவர் கூறியிருந்தார்.

உண்மையில், இது விடயத்தில் அரசு அதிகம் கரிசனை செலுத்தாத வரையில் எந்த தீர்வுப்பொதியை நோக்கிய பயணம் வெற்றிகரமாக அமையப்போவதில்லை.

காலம் காலமாக மேற்கொள்ளப்பட்ட தீர்வு முயற்சிகளை எடுத்துநோக்கினால், ஆட்சி இயந்திரங்கள் தங்களை

தூயவர்களாக வெளிக்காட்டிக்கொண்டு, தீர்வை முன்னெடுக்க முடியாத தோல்விகளுக்கு இனவாத சக்திகளை காரணம் காட்டியே தமிழர் தரப்பு நியாயங்களையும் அவர்களுக்கான நீதியையும் இழுத்தடித்து வந்துள்ளன.

கிழித்துப்போட்ட தீர்வு விவகாரத்திலிருந்து தொடங்கிய அரசியல் சாபக்கேடுகள் ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து வருவதும் அவற்றை காரணம் காட்டி தப்பித்துக்கொள்ளும் அரசாங்கங்கள், இந்த காலப்பகுதியில் தெற்கின் அபிவிருத்தியையும் தமது மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதிலும் முனைப்புடன் செயற்பட்டு வந்ததும்தான் வரலாறு.

இந்த படிப்பினைகளைத் தற்போதைய அரசுக்குச் சொல்லிப் புரியவைக்க தேவையில்லை. ஆட்சியிலிருப்பவர்கள் அனைவரும் இந்த வரலாற்றைத் தரிசித்து வந்தவர்கள்தான்.

விடுதலைப்புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த காலப்பகுதியில், தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களை ரணில் அரசு எவ்வாறு முகம்கொடுத்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

anton_balasingamவிடுதலைப்புலிகளுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட ரணிலை மட்டுமல்ல, போர்நிறுத்தத்தைக் கண்காணிக்க வந்த வெளிநாட்டுக் குழுவினரையும் தென்னிலங்கை இனவாத சக்திகள் எவ்வளவு கேவலமாக விமர்சித்தார்கள், அவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி தென்னிலங்கை மக்கள் மத்தியில் கிளர்ச்சிகளை மேற்கொள்ள எத்தனித்தார்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

கொழும்பில் கொடும்பாவி எரிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கொழும்பிலிலுள்ள ஐ.நா. அலுவலகத்துக்கும்கூட பாதுகாப்பு வழங்கவேண்டிய நிலைக்கு எதிர்ப்புக்கள் வலுத்தன.

இப்படியான சிங்கள தேசத்தின் இனவாத சக்திகளையும் சிங்கள மக்களையும் சரியாக கையாளுவதற்கு இம்முறையும் அரசு தவறினால், தீர்வை பெற்றுக்கொடுக்கப்போவதாக சர்வதேச சமூகத்தின் முன்பாக வழங்கிய உறுதிமொழிகள் வெறும் வெற்றுமொழிகளாக மட்டுமே வீணாகும் என்பதை இலங்கை புரிந்துகொள்ளவேண்டும்.

ஐ.நா. தீர்மானத்துக்;குப் பின்னர் அதனை வரவேற்ற அனைத்து தரப்பினரும் சுட்டிக்காட்டிய பொதுவிடம் ‘இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி அமையாது’ என்பதே ஆகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒருங்கே அமையப்பெறும் சாதகமான சூழ்நிலைகள், பூகோள அரசியல் வெளியில் எல்லா நேரமும் வாய்ப்பதில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை அது தற்போது மீண்டும் கனிந்திருக்கிறது. சிங்கள தேசத்தின் புத்திஜீவிகள் குழாம் எனப்படுபவர்களின் ஊடாக சிங்கள மக்களுக்கு நடைமுறை யதார்த்தங்களை எடுத்துக்கூறுவதற்கும், நாட்டின் இன்னொரு பகுதியில் இடம்பெற்ற கொடூர யுத்தத்தின் வடுக்களையும் அதன் காரணங்களையும் விளக்கமளிப்பதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவதற்கும் அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

இனவாத கட்சிகளை இனியும் தங்கள் சுயலாப அரசியலுக்கான கருவிகளாக பயன்படுத்தாமல் தீர்வின் சாதகமான விளைவுகளை நோக்கி உள்வாங்க வேண்டும்.

கடந்தகாலங்களில் இலங்கையில் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதிகள் அனைத்தும், ஏதோ ஒரு விதத்தில் தமிழர் பிரச்சினையை குறிப்பிட்டளவுக்காவது தீர்வை முன்வைப்பதாகவே இருந்தது. ஆனால், அதில் மேற்கொள்ளப்பட்ட அரசியதலையீடுகளும் இனவாத ஊடுருவல்களும்தான் தீர்வையும் இந்த தீவையும் கொழுந்துவிட்டெரித்தன. இந்தப்புற்றுநோய்க்கு மைத்திரி மருந்தளிப்பாரா பார்ப்போம்.

-ப.தெய்வீகன்-

Share.
Leave A Reply