பெங்களூரு: ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தைப் போல தாலி கட்டிய மனைவியை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க சென்னை பொறியியலாளர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதா (20 வயது – பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் (23 வயது – பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இருவரும் பாடசாலையில் படிக்கும் காலத்திலிருந்து காதலித்துள்ளனர். ராகவன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், சுதாவின் காதலுக்கு அவருடைய வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
உடனே சுதாவின் படிப்பையும் பாதியில் நிறுத்தி இருக்கிறார்கள் அவரது பெற்றோர்.
ஆனாலும் இந்த காதல் ஜோடி கைபேசியில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். அதையும் அறிந்த சுதாவின் பெற்றோர், அவருக்கு உடனே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி சுதாவை அவருடைய உறவினரான சென்னையில் பொறியியலாளராக வேலை பார்த்து வருபவருக்கு கடந்த ஜூன் 11 ஆம் திகதி கட்டாயத் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.
இதன்போது கணவரிடம் தனது காதல் கதையை சுதா கண்ணீர் மல்க கூறி இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர், தனது மனதை தேற்றிக்கொண்டு, உன் காதலனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று சுதாவிடம் உறுதி கூறி இருக்கிறார்.
இதையடுத்து சுதாவின் காதலன் மற்றும் அவருடைய பெற்றோரைச் சந்தித்த அந்தப் பொறியியலாளர், நடந்த சம்பவங்களை விளக்கி கூறி, சுதாவுக்கும் ராகவனுக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் பெற்றிருக்கிறார்.
அதன் பின்னர், இதுபற்றி தனது பெற்றோர் மற்றும் சுதாவின் பெற்றோரிடம் கூறி இருக்கிறார்.
ஆனால் அவர்கள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,அவர்களுக்கு சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்க வைத்து சமாதானம் செய்திருக்கின்றனர். இருவரும் சகஜமான தம்பதி போல நடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆடி மாதம் வந்ததால் சுதாவை ஆந்திராவுக்கு அழைத்து வந்தனர் பெற்றோர். அப்போது சுதா தனது காதலன் ராகவனுடன் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
சுதா, ராகவன் மற்றும் பொறியியலாளர் ஆகியோரின் பெற் றோரை அழைத்து பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுதாவை அவரின் காதலனுடன் சேர்த்து வைக்க கணவர் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
அப்போது, முறைப்படி சுதாவின் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, அதன்பின் சுதாவை அவரது காதலனுடன் சேர்த்து வையுங்கள் என்று பொலிஸார் அறிவுரை கூறி இருக்கின்றனர்.
தற்போது சுதாவும் ராகவனும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர் விவாகரத்து கிடைக்கும் வரை, பெண்கள் நல காப்பகத்தில் சுதாவை தங்கியிருப்பதற்கு பொலி ஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.