அது கடந்த 5 ஆம் திகதி காலைநேரம். கடிகாரத்தில் நேரமோ 6.05 என காட்டிக் கொண்டிருந்தது. பொரளை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவான 119 ஊடாக அப்போது தான் ஒரு தகவல் பரிமாறப்படுகிறது.
“சேர்…… நாங்கள் கோல்ப் மைதானத்துக்கு அருகிலிருந்து கதைக்கின்றோம்…… இங்கு ஒருவரை வெட்டி போட்டிருக்கிறார்கள்….” என அழைப்பை ஏற்படுத்திய நபர் தகவல் தெரிவித்து அழைப்பை துண்டித்தார்.
இதனையடுத்து பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு உடனடியாக பொரளை கித்துல்வத்த வீதியில் உள்ள கோல்ப் மைதானம் பகுதிக்கு விரைந்து சென்றது.
இதன்போது அந்த மைதானத்தின் பிரதான வாயிலுக்கு அருகே நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதை பொலிஸார் அவதானித்தனர்.
பொரளை பொலிஸ் பிரிவின் கித்துல்வத்த வீதியில் உள்ள இந்த கோல்ப் விளையாட்டு மைதானம் மிக பிரபல்யமானது.
அத்துடன் கோல்ப் விளையாட்டில் ஈடுபடும் பல உள்நாட்டு, வெளிநாட்டு செல்வந்தர்கள் வந்து செல்லும் இடமும் கூட. அதனால் அந்த மைதானப் பகுதியை முக்கியமான பல அதிதிகள் வந்து செல்லும் பகுதியாக கூட அடையாளப்படுத்தலாம்.
இந்நிலையில் உடன் செயற்பட்ட பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பில் தனது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய கொழும்பு தெற்கிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல்தெனியவின் கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பமாகின.
சம்பவஸ்தலமான கோல்ப் மைதானப் பகுதிக்கு சென்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல் தெனிய அங்கிருந்த பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்களிடம் ஸ்தல விசாரணைகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொண்டார்.
அதன்படி கோல்ப் மைதான வாயலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அந்த மைதானத்தின் தொழிலாளரான சமிந்த பெரேரா எனவும் அவர் 38 வயதானவர் எனவும் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழும் அவர் தனியாகவே வீட்டில் வாழ்ந்து வருவது குறித்தும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல் தெனியவுக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு தெற்கு பிரிவு III இற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான்டயஸ்ஸிடம் விசாரணைகளை ஒப்படைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல் தெனிய பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக நாரஹேன்பிட்டி, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவுகளையும் விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹமுல்ல, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகத்தபால ஆகியோரை அழைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல் தெனிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் ஆலோசனையின் கீழ் செயற்பட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் பொரளை, நாரஹேன்பிட்டி மற்றும்வெள்ளவத்தை பொலிஸ் நிலைய விசாரணை குழுக்களுக்கு விசாரணையின் முக்கிய 3 பகுதிகளை பாரப்படுத்தினர்.
.
இந்நிலையில் அடிப்படை விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் கொலை செய்யப்பட்ட சமிந்த பெரேராவின் பெற்றோர் சகோதரரை வரவழைத்து சடலத்தை அடையாளம் கண்டனர்.
அத்துடன் புதுக்கடை 2 ஆம் இலக்க நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்து பிரேத பரிசோதனைக்கும் சடலத்தை உட்படுத்தினர்.
ஆழமான வெட்டுக்காயங்களால் அதிக இரத்தம் வெளியேறியமை மரணத்துக்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதனைவிட சமிந்த பெரேரா பெடிஸ் என்ற பெயராலேயே பெரிதும் அழைக்கப்பட்டு வந்துள்ளதையும் கோல்ப் மைதானத்தில் பந்து சேகரித்து கொடுக்கும் வேலையில் கடந்த 20 வருடமாக அவர் ஈடுபட்டுவருவதும் பொரளை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்தது.
இவ்வாறு தகவல் வெளிப்படுத்தப்பட்ட போது வெள்ளவத்தை குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி நாகஹமுல்ல தனது பொறுப்பை மறுபுறம் நிறைவேற்றலானார்.
கோல்ப் மைதானத்தின் ஏனைய ஊழியர்கள் மைதானத்தை அண்டிய பகுதியை உடையோர் என ஏராளமானோரின் வாக்கு மூலங்களை நாகஹ முல்ல தலைமையிலான பொலிஸ் குழு சேகரித்தது.
அந்த வாக்கு மூலங்களில் கோல்ப் மைதான ஊழியர்கள் பலர் வழங்கிய வாக்கு மூலங்கள் மிக முக்கியமானவை.
அதாவது பெடிஸ் என்ற சமிந்த பெரேரா கழுத்தில் தங்கச்சங்கிலி, விரலில் தங்க மோதிரம் ஆகியவற்றை எப்போதும் அணிந்தே காணப்படுவதாகவும் உயர்ரக தெலைபேசியையே அவர் பயன்படுத்தியதாகவும் நாள் ஒன்றுக்கு 1500 ரூபாவுக்கு மேல் சம்பாதிப்பதாகவும் கோல்ப் மைதானத்துக்கு வரும் கோல்ப் விளையாட்டு பிரியர்களால் பெருமளவு ‘டிப்ஸ்’ பணமும் கிடைப்பதாகவும் அந்த வாக்கு மூலங்கள் உறுதிப்படுத்தின.
மறு புறம் தொழில்நுட்ப ரீதியிலான விசாரணைகளை ஆரம்பித்திருந்த நாரஹேன்பிட்டி பொலிஸார் குற்றம் இடம் பெற்ற கோல்ப் மைதானத்தின் பிரதான வாயிலுக்கு அருகே உள்ள பகுதியை சல்லடை போட்டு ஆய்வு செய்தனர்.
இதன் போது சடலம் காணப்பட்ட பகுதிக்கு அருகே பாதையின் சிறிய தூரத்தில் இருந்த மரம் ஒன்றுக்கு கீழ் மிளகாய்த் தூள் சொப்பிங் பை ஒன்று அவர்களால் அவதானிக்கப்பட்டது.
அந்த மிளகாய்த் தூள் பையானது அள்ளி எடுப்பதற்கு ஏதுவான வகையில் மேற்பகுதி சுருட்டப்பட்ட நிலையில் இருந்தது.
அதனைவிட கைகளால் அதிலிருந்து பெருமளவு மிளகாய் தூளினை அள்ளியதற்கான அடையாளமும் வீழ்ந்து கிடந்த அந்த மிளகாய்த் தூள் பையில் காணப்பட்டது.
இதனைவிட கிடைக்கப்பெற்ற மிளகாய்த் தூள் பைக்கு மேலதிகமாக, சிறிது தூரத்தில் முன்னொன்றும் பின்னொன்றுமாக இருந்த ஒரு சோடி செருப்பினையும் நாரஹேன் பிட்டி பொலிஸார் கண்டனர். அவை சடலத்தை நோக்கியதாக இருப்பதையும் அவர்கள் அவதானித்தனர்.
இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸுக்கு தெரியப்படுத்தப்பட்டன.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த பணாமல் தெனியவும் ஆலோசனைகளை வழங்க ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்கள் ஊடாக விசாரணைகள் ஆரம்பமாகின.
அதன்படி பொரளை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவல்கள் வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி பொலிஸாரின் விசாரணைத் தகவல்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
அதன்படி வெள்ளவத்தை பொலிஸாருக்கு பலர் வழங்கிய வாக்கு மூலங்களில் சமிந்த பெரேரா அணியும் தங்க ஆபரணங்கள், பயன்படுத்தும் விலைமதிப்பு மிக்க கையடக்கத் தொலைபேசி தொடர்பிலான தகவல்களுக்கு பதில் இருக்கவில்லை.
அதாவது பொரளை பொலிஸாரின் விசாரணை அறிக்கையில் சடலத்தில் தங்க ஆபரணங்களோ அருகே கையடக்கத் தொலைபேசியோ இருந்ததாக இல்லை.
எனவே பொரளை, வெள்ளவத்தை பொலிஸாரின் விசாரணை அறிக்கைகளை வைத்து இது தங்க நகைகளை கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்க வேண்டும் என்ற அனுமானத்துக்கு பொலிஸார் வந்தனர்.
அத்துடன் பிரேத பரிசோதனையில், சமிந்த பெரேராவின் கண்களில் மிளகாய்பொடி இருந்ததை வைத்தும் நாரஹேன்பிட்டி பொலிஸாரின் விசாரணையில் தடயமாக மிளகாய் பொடி பை கிடைத்ததை வைத்தும், செருப்பு உள்ளிட்ட தடயங்களை வைத்தும் கொலையானது மிளகாய் பொடி வீசப்பட்டதன் பின்னர் விரட்டிச் செல்லப்பட்டு புரியப்பட்டது என்ற அனுமானத்தையும் பொலிஸார் பெற்றனர்.
இந் நிலையில் ஒருங்கிணைக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அறிவியல் தடயங்களை மையப்படுத்திய விசாரணைகளை முன்னெடுத்த நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ, பெண் உப பொலிஸ் பரிசோதகர் சந்துனி கான்ஸ்டபிள்களான கமல், விஜேவீர, சாமர, ஜயசிங்க உள்ளிட்ட குழுவினரின் அவதானம் சமிந்த பெரேராவின் நவீன ரக கையடக்கத் தொலைபேசி மேல் சென்றது.
ஏனெனில் அதற்கு காரணம் இருந்தது. சமிந்தவைக் கொன்றவர் கண்டிப்பாக கையடக்கத் தொலைபேசி, தங்கச் சங்கிலி மற்றும் தங்க மோதிரத்தைக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என பொரளை, வெள்ளவத்தை பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வெவ்வேறு கோண விசாரணைகளில் உறுதியானதே அதற்கான காரணமாகும்.
இந் நிலையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், சமிந்தவின் தொலைபேசி இலக்கத்தை அவனது நண்பர்கள் ஊடாக பெற்றுக்கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதன்படி சமிந்தவின் இலக்கத்துக்கு இறுதியாக ஒரு இலக்கத்திலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதை பொலிஸாரால் அவதானிக்க முடிந்தது.
இந் நிலையில் அந்த தொலைபேசி இலக்கத்துக்கு சொந்தக்காரர் யார் என்பதை அறிய விசாரணை நடத்திய பொலிஸார், அவர் பொரளை , கித்துல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த அருணு சாந்த என்பவரென்று தெளிவானது.
இதனையடுத்து கித்துல்வத்தை அருணு சாந்தவை தேடி அவரது வீட்டுக்கு நாரஹேன்பிட்டி பொலிஸார் சென்றனர்.
எனினும் அருணு சாந்தவை அங்கு பொலிஸாரினால் காணமுடியவில்லை. வீட்டில் அவன் மனைவி சாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருந்த நிலையில் அருணு சாந்த எங்கே என அவன் மனைவியை பொலிஸார் விசாரணை செய்தனர்.
‘ சேர்… அவர் வேலை விஷயமாக பதுளை வரை போயிருக்கின்றார். ஒரு விண்ணப்பம்… அதனை கொடுத்துவிட்டு வருவதாகவே சென்றார். காலையில் வந்துவிடுவார்.’ என சாலினி பொலிஸாருக்கு பதிலளித்துள்ளார்.
அருணு சாந்தவின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் கூடவே சமிந்த கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்து தடயமாக மீட்கப்பட்ட செருப்பு ஜோடியின் ஒன்றை கூடவே எடுத்துச் சென்றிருந்தனர். அந்த செருப்பின் பட்டியில் ‘ ஸ்போர்ட்ஸ்’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந் நிலையில் அந்த செருப்பை காட்டிய பொலிஸார் சாலினியிடம் இந்த செருப்பை அடையாளம் தெரிகின்றதா என கேட்டனர்.
‘ சேர்…இது கணவரின் செருப்பு.. இரவில் நான்கூட திடீரென விழித்திருக்கும் போது இதனை மலசல கூடத்துக்கு போட்டு செல்வேன்..
ஏனெனில் அவர் கட்டிலுக்கு அருகிலேயே கழற்றி வைத்துவிட்டு செல்வார்.. அம்மாம்.. இந்த செருப்பு உங்களுக்கு எப்படி சேர்…என் கணவருக்கு என்ன ஆனது…’ சாலினி எதுவும் தெரியாமல் அப்பாவித்தனமாக பொலிஸாரிடம் கேட்டாள்.
பொலிஸாரின் சந்தேகம் கிட்டத்தட்ட உறுதியானது. விசேட பொலிஸ் குழு இரவோடிரவாக பதுளை நோக்கி சென்றது.
அப்போது அதிகாலை 5 மணியை எட்டியிருந்தது. அருணு சாந்த பதுளை பஸ் நிலையத்துக்கு வந்தார். அதுவரை பஸ் நிலையத்தில் காத்திருந்த பொலிஸார் சமிந்த பெரேராவின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் அவனைக் கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்தனர்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து அவனை விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது தான் நடந்தவை அனைத்தையும் ஒன்று விடாது அருணுசாந்த கிளிப் பிள்ளையாய் ஒப்புவித்தான்.
‘ சேர்..உண்மையை சொல்கின்றேன்.. அந்த கொலையை நான் தான் செய்தேன்.. தங்கச் சங்கிலி, மோதிரத்தை அபகரிக்கவே செய்தேன் சேர்… அவற்றை நாரஹேன்பிட்டி பகுதியில் அடகுக்கடையில் அடகுவைத்துள்ளேன்..சேர்..’ எனக் கூறியவன் கொலை செய்த விதத்தையும் அப்படியே குறிப்பிடலானான்.
‘ அன்றைய தினம் மாலை 5 மணி இருக்கும் சேர்.. நான் கோல்ப் மைதானத்துக்கு அப்பால் உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில் நின்றுகொண்டிருந்தேன்.
அப்போது பெட்டிஸ் வேலை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தான். வரும் போது என்னிடம் ‘ இன்று எதுவும் செய்யவில்லையா தம்பி’ என கேட்டான். அந் நேரத்தில் நானும் நண்பர்கள் சிலரும் அங்கு பியர் குடித்துக்கொண்டும் கஞ்சா பயன்படுத்திக் கொண்டும் இருந்தோம். நான் ஏதாவது செய்வோம் என பெட்டிசுக்கு பதிலளித்தேன்.
இரவாகும் போது நான் வீட்டுக்கு சென்றேன். கோல்ப் மைதானத்துக்கு அடிக்கப்பட்டிருக்கும் வலையை ஓரமாக்கிவிட்டு அப்பால் சென்றால் எனது வீட்டு சுவர் உள்ளது.
மெதுவாக வீட்டுக்குள் சென்ற நான் அணிந்திருந்த காற்சட்டையை மாற்றிவிட்டு நீல நிற காற்சட்டை ஒன்றை அணிந்தேன். ஏற்கனவே கொள்வனவு செய்த கத்தியை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டேன்.
வீட்டில் கொள்வனவு செய்து வைக்கப்பட்டிருந்த மிளகாய் பொடியையும் சொப்பிங் பையுடனேயே கையில் எடுத்துக்கொண்டேன். அப்படியே கோல்ப் மைதானத்தின் பிரதான வாயிலை நோக்கி நான் சென்றுகொண்டிருந்த போது பெட்டிக்கு நான் அழைப்பை ஏற்படுத்தினேன்.
அழைப்பை ஏற்படுத்தி.. இன்று ஏதாவது செய்வோமா என நான் கேட்டேன். பியர் ஒன்று எடுப்போமா… வருகின்றாயா என கேட்கும் போதே எனது தொலைபேசியின் பெட்டரி விலகி அது செயலிழந்தது. பின்னர் மீண்டும் பெட்டரியை சரிசெய்து அழைப்பை ஏற்படுத்தினேன்.
பெடிஸ் அண்ணா… சிகரட் பெக்கட் ஒன்றும் எடுத்துக்கொண்டு கோல்ப் மைதானத்தின் பிரதான வாயில் பக்கமாக வாருங்கள் என்றேன்.
பெட்டிஸ் துவிச்சக்கர வண்டியில் வந்தான். வந்து துவிச்சக்கர வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு எனக்கு அழைப்பை ஏற்படுத்தி எங்கே இருக்கின்றாய் என கேட்டான்.
அப்போது நான் மைதானத்துக்கு உள்ளே மரம் ஒன்றின் கீழ் இருந்தேன். நீ நிற்பதை நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.. அப்படியே முன்னோக்கி வா என நான் பெட்டிஸ் இடம் கூறினேன்.
அவனும் அப்படியே வந்தான். வரும் போது மறைந்திருந்த நான் அவன் முகம் மீது மிளகாய் பொடியை வீசினேன்.. அவன் மீண்டும் திரும்பி ஓட ஆரம்பித்தான்.
விரட்டினேன். விரட்டிச் சென்று கத்தியால் பின் புறமாக வெட்டினேன்… அது அவனது கையை பதம் பார்த்தது. தொடர்ந்தும் ஓடினான்.. விடவில்லை.. விரட்டினேன்.. ஒரு இடத்தில் முகம் குப்புற அவன் விழுந்தான்.
உடனே நான் அவனது தலையை பதம் பார்த்து இரு வெட்டுக்களை வெட்டினேன்.. அவன் அவ்விடத்திலேயே இறந்தான்…
உடனே பெட்டிஸ் அணிந்திருந்த தங்க மாலை, மோதிரம் என்பவற்றுடன் இரு தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு கத்தியையும் புல்லில் துடைத்துக் கொண்டு வீதிக்கு சென்றேன்.
அங்கு முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி நேராக வீட்டுக்கு வந்தேன். வீட்டின் முன்னால் உள்ள குழாய் நீர் பைப்பில் உடைகளை கழுவினேன். கத்தியை கூரையின் மேல் மறைத்தேன்.
உடைமாற்றிக்கொண்டு கொள்ளையிட்ட நகையுடன் அதே முச்சக்கர வண்டியில் நாரஹேன்பிட்டிக்கு சென்றேன். அங்கு மோதிரத்தை அடகு வைத்தேன். 28 ஆயிரம் ரூபா கிடைத்தது.
முச்சக்கர வண்டிக்கு வாடகையாக 700 ரூபா கொடுத்தேன். பியர் ஒன்றை மீண்டும் வாங்கினேன். நண்பர்களுடன் சேர்ந்து குடித்தேன். பின்னர் வீட்டுக்கு இரவு 10 மணி அளவில் வந்தேன். வரும் போது மனைவிக்கு கொத்து வாங்கிக்கொண்டு போனேன்.
காலையில் எழுந்து பெட்டிஸை கொலை செய்த இடத்துக்கு போனேன். அங்கு எனது செருப்பு இருந்தது. அப்போது எனக்கு பயமாக இருந்தது. நேராக வீட்டுக்கு வந்தேன்.
பெட்டிஸின் சங்கிலியை கொண்டு போய் அடகு வைத்தேன். வைத்துவிட்டு 27000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டேன். எனது மூத்த பிள்ளை பொரளையில் படிக்கும் நிலையில் அந்த பிள்ளைக்கு விளையாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு பாடசாலை விட்டதும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்கு சென்றேன்.
பெடிஸின் தொலைபேசியை சப்பாத்துக்குள் ஒளித்து வைத்தேன். பின்னர் இரவு வேலை விஷயமாக எனக் கூறி பதுளைக்கு வந்தேன்.
புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து இரவோடிரவாக பதுளைக்கு வந்தேன். அதற்கு மறு நாள் மீண்டும் கொழும்புக்கு வர பதுளை பஸ் நிலையத்துக்கு வந்த போதே நீங்கள் கைதுசெய்து விட்டீர்கள் என அவன் ஒன்று விடாது அத்தனையையும் பொலிஸாரிடம் கூறினான்.
கைது செய்யப்பட்ட அருணு சாந்தவின் அடையாளப்படுத்தலின் பிரகாரம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள், தொலைபேசி மற்றும் கொலையின் போது அணிந்திருந்த ஆடை என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன.
சமிந்த பெரேரா அழகாக அணியும் உடைகள், நகை ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டு அவற்றை எப்படியேனும் அபகரிக்க வேண்டும் என்ற திட்டத்தில் மிக சூட்சுமமாக செய்யப்பட்டதே இந்த கொலை என பொலிஸார் விசாரணைகளில் வெளிப்படுத்திக்கொண்டதுடன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கூட கொலை செய்வதற்கென்றே கொள்வனவு செய்யப்பட்டது என்பதையும் கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்ட அருணு சாந்த புதுக்கடை இரண்டாம் இலக்க நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.