சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நடிகர் சரத்குமார் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
நடிகர் சரத்குமார் தலைமையிலான அணிக்கும், நடிகர் நாசர் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் சரத்குமார் தலைமையிலான அணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி நடிகர் சரத்குமார் பேசியது: நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட நடிகர் சங்கத்துக்கு என்னால் முடிந்த அளவு கடுமையாக உழைத்திருக்கிறேன்.
கடன் சுமை, நலிந்த கலைஞர்களின் நலன், படங்கள் வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்னைகள் உள்ளிட்ட எல்லா வகையான சிக்கல்களிலும் நேர்மையாகவும், உண்மையாகவும் பணியாற்றியுள்ளேன்.
நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாதவர்கள் இப்போது பேசுகிறார்கள். நடிகர் சங்கம் எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள்கூட பேசும் நிலைமை உள்ளது. நாசர், விஷால் ஆகியோர் பின்னால் இப்போது கலை உலகம் நிற்கவில்லை.
எங்கள் அணியின் பின்னால்தான் ஒட்டுமொத்த கலை உலகம் திரண்டுள்ளது. ராதாரவியைப் பார்த்து வெட்டியான், சாவு வீடுகளுக்குச் செல்பவர் என்று சொல்கிறார் விஷால். இது ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்துவது.
நான் நினைத்தால், விஷாலை வெளியே வரமுடியாத அளவுக்கு செய்ய முடியும். பூச்சி முருகன் மீது நம்பிக்கை வைத்தவர்கள் 33 ஆண்டுகள் இந்த கலை உலகில் பயணித்த என் மீது நம்பிக்கை வைக்காதது ஏன்?
நாசருக்கும், விஷாலுக்கும் இந்த விஷயத்தில் என்ன நோக்கம் இருக்கிறது என்றே தெரியவில்லை. ராதாரவி திட்டினார் என்பதற்காக சங்கத்தை உடைக்கலாமா? நடிகர் சங்கத்தில் எந்த வகையான ஊழல்களும் நடக்கவில்லை என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.
ஆனால் நடிகர் சங்கம் பற்றி ஒன்றும் தெரியாத விஷால் என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். மாற்றம் வரவேண்டும் என்று ஒபாமா சொன்னார். அதைத்தான் நானும் செய்தேன்.
பழைய கட்டடத்தை இடித்து, புதிதாகக் கட்ட நடவடிக்கை எடுத்தேன். நடிகர் சங்கம் மீண்டும் கடனில் மூழ்கி விடக்கூடாது என யோசித்து, திட்டமிட்டு ஒப்பந்தம் போட்டோம்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை கட்டாமல் இருப்பதற்கு எதிர்த் தரப்பே காரணம். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து இப்போது இருக்கும் இந்த இடத்தை அடைந்தவன் நான். உண்மை, உழைப்பு, நேர்மை இவை எப்போதும் என்னிடம் உண்டு.
என் மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மன வேதனையை ஏற்படுத்துகிறது. எங்களிடம் உண்மை இருக்கிறது. அந்த உண்மை எங்களுக்கான வெற்றியைப் பெற்றுத் தரும். நான் என்ன தவறு செய்தேன் என்பதை இப்போது கூட விஷால் தரப்பினரால் சுட்டிக் காட்ட முடியவில்லை.
நடிகர் சங்க கட்டடம் கட்டாமல் ஓயமாட்டேன். என் இறுதி ஊர்வலம் அந்தக் கட்டடத்திலிருந்துதான் தொடங்கும்,” என்றார் சரத்குமார். சரத்குமார் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சேரன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகத்தினர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சரத்குமார் அணியினரை ஆதரித்துப் பேசினர்.
பட்டுக்கோட்டை, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடக சங்கங்களின் நிர்வாகிகள், நாடக மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
விஷாலை கிண்டலடித்து பேசிய நடிகர் ராதா ரவி