யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெரிய வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாக வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டபோது, சாவகச்சேரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 இராணுவத்தினரை மீட்டுச் செல்வதற்கு இராணுவ அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் அண்மைய தினங்களாக நெடுஞ்சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மர்மமான முறையில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்த சாவகச்சேரி காவல்துறையினர், வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் இரகசியமாகப் பதுங்கியிருந்து நோட்டம்விட்டபோது,

வாகனம் ஒன்றில் வந்த ஏழு இராணுவத்தினர் விளம்பரப் பலகையொன்றின் இரும்புகள் இரும்புச் சட்டங்களை அறுக்க முற்பட்டபோது கையும் களவுமாக அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களை விசாரணை செய்து இவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபோதே, இவர்கள் இராணுவத்தினர் என்ற விடயம் காவல்துறையினருக்குத் தெரியவந்ததாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இவர்கள் பற்றிய தகவல் அறிந்து அது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இராணுவக் காவல்துறையினரும் சாவகச்சேரி காவல் நிலையத்திற்குச் சென்றனர்.

கைதான இராணுவத்தினரை மீட்டுச் செல்வதற்காக இராணுவ அதிகாரிகள் தமது மெய்ப்பாதுகாப்புக்கான இராணுவத்தினருடன் சாவகச்சேரி காவல் நிலையத்தைச் சூழ்ந்திருப்பதாகத் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாகவே கையாள வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்களை இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்க முடியாது என்றும் காவல்துறையினர் இராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply