யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்யா கொலைச் சம்பவம் தொடர்பில் அப்போது வட மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்டவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலையின் பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும், மஹாலிங்கம் சிவகுமார் என்பவரை பொலிஸ் தடுப்பில் இருந்து வெளியேற்றி கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்கினை விசாரணை செய்யும், CIDயினரின் அறிக்கைக்கு அமைய, மஹாலிங்கம் சிவகுமார் எனப்படும் பிரதான குற்றவாளியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென மீண்டு வந்தனரா?

Vinayakam_001இறுதிப் போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணா மற்போனார்கள் என்று அறியப்பட்ட, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தளபதிகளில் ஒருவரான விநாயகத்தின் குடும்பத்தினர் திடீரென தமது தாய் வீட்டுக்குத் திரும்பியிருக்கின்றனர் என்று வெளியான தகவல்களை அடுத்து யாழ். குடாநாடு நேற்றுப் பெரும் பரபரப்பாக இருந்தது.

விநாயகம் தற்போது மேற்கு நாடு ஒன்றில் இருக்கிறார் என்றும் விடு தலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றார் என்றும் இலங்கை அரச படைகள் கடந்த காலங்களில் தெரிவித்து வந்தன.

இறுதிப் போரின் போது அவரது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள் என்றும் பின்னர் காணாமற்போயிருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் விநாயகத்தின் மனைவியும் அவரது இரு குழந்தைகளும் அவரது தாயாரது வீட்டுக்குக் கடந்த சில நாள்களின் முன்னர் திரும்பியிருக்கிறார்கள். காணாமற்போயிருந்த அவர்களைத் திடீரென ஒரு தரப்பினர் கொண்டு வந்து இறக்கி விட்டுச் சென்றிருக்கின்றனர் என்றும் –

இந்தத் தகவல் அறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் அவர்கள் ஒரு கடிதத்தைக் காட்டி அவர்களிடம் அனுமதி பெற்றால் தாங்கள் பேசத் தயார் என்று கூறுகிறார்கள் என்றும் கடற்படையினரே அவர்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள் என்றும் பல்வேறு கதைகள் நேற்று யாழ். குடாநாடு முழுவதும் பெரும் பரபரப்பாக அடிபட்டன.

எனினும் இவற்றில் எவையும் பக்கச் சார்பற்ற தரப்புகள் மூலமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

நீண்ட காலத்தின் பின்னர் விநாயகத்தின் மனைவியும் பிள்ளைகளும் அவர்களது தாயார் வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார்கள் என்பது உண்மை என்றபோதும் அவர்கள் புனர்வாழ்வின் பின்னர் திரும்பியிருக்கிறார்கள் என்றே ஊரவர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் உதயன் பத்திரிகைக்கு நம்பகமாகத் தெரியவந்தது.

Share.
Leave A Reply