தனது இரண்டு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீர்கொழும்பு, சில்வர்ஸ்டர் வீதி, ஏத்துக்கால பிரதேசத்தைச் சேர்ந்த வர்ணகுலசூரிய பீட்டர் யேசுமணி ( 40 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஒரு மீனவராவார். இவரது மனைவி ( 37 வயது) ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவராவார். இவர்கள் இருவருக்கும் 13 வயது மற்றும் ஏழு வயதில் இரு மகள்மார்கள் உள்ளனர். இவர்கள் பாடசாலை மாணவிகளாவர்.
சந்தேக நபரான தந்தை ஏழு வயது மகளை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்வதை மூத்த மகள் கண்டு தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாயார் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சிறுமிகள் இருவரையும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமையும், ஏழு வயது சிறுமி கடுமையான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமையும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டார்.