அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பணியாளர் ஒருவரை முதலாளி மற்றும் அவரது ஆட்கள் சேர்ந்து அவரது கை, கால்களை கட்டி தொங்கவிட்டு அடித்துக் கொலை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சிங். அவர் தனது மனைவி ரஜ்ஜி மற்றும் குடும்பத்தாருடன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் ஜஸ்ப்ரீத் சிங் என்பவருக்கு சொந்தமான பேக்டரியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் பேக்டரியில் ஏதோ திருடிவிட்டதாக கூறி ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் அவரது ஆட்கள் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ராம் சிங்கின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் அவரின் கை, கால்களை கட்டி அடித்துள்ளனர்.
அவர்கள் ராம் சிங்கை அடித்து, பஞ்சாபியில் திட்டி, சிரித்து ரசித்துள்ளனர். அவர்கள் ராம் சிங்கை அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ராம் சிங்கின் உடல் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் ஜஸ்ப்ரீத் சிங் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.