தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு நடிகர்கள் சங்கமென பெயர் சூட்ட வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இன்று நடைபெற்றுவரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த பிறகு இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் துவங்கியது. சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் அப்பாஸ் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்தத் தேர்தலில் நடிகர் சரத் குமார் தலைமையில் ஒரு அணியும் நடிகர் நாசர் தலமையிலான ஒரு அணியும் போட்டியிடுகின்றன.
சரத்குமார் அணியில் சரத்குமார் தலைவர் பதவிக்கும், ராதாரவி பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். நாசர் அணியில் நாசர் தலைவர் பதவிக்கும் விஷால் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் 3139 பேர் வாக்களிக்க முடியும். தபால் மூலமாக வாக்களிக்க 934 பேர் விண்ணப்பித்தனர். தபால் வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 783 பேர் தபால் மூலமாக வாக்களித்துள்ளர்.
வாக்குப்பதிவு இன்று காலையில் ஏழு மணிக்குத் துவங்கியது. இன்று மாலை ஐந்து மணி வரையில் வாக்குப்பதிவு நடக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குகளை எண்ணும் பணி துவங்கும். இரவு 9 மணியளவில் முடிவுகள் வெளியாகத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெயரை மாற்ற வேண்டும்: ரஜினி
இன்று காலையில் எட்டு மணியளவில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கைப் பதிவுசெய்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் எந்த அணி வெற்றிபெற்றாலும் இரண்டு பணிகளை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்று கூறினார்.
முதலாவதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்றி, தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் சூட்ட வேண்டுமென்றும் இரண்டாவதாக, ஒவ்வொரு அணியும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த சில தடவைகளாக பொறுப்பாளர்கள் ஒரு மனதாகத் தேர்வுசெய்யப்பட்டுவந்தனர்.
சினிமாத் துறையில் ஒரு பிரிவான நடிகர்களுக்கான சங்கத்தின் இந்தத் தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.
பல தொலைக்காட்சிகள், இந்தத் தேர்தல் குறித்த செய்திகளை நேரலையாக ஒளிபரப்பிவருகின்றன. இது தொடர்பான விவாத நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகின்ரன.
கடந்த சில தினங்களாக சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. சரி, நடந்தது நடந்துவிட்டது. அதுக்காக நமக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்கள் நினைத்துவிடக் கூடாது. ஒரு போட்டி வந்துவிட்டது.
நன்றி, வணக்கம்!”