அரசியல்வாதிகளின் பேச்சை சகிக்கமுடியாத ஒரு அமெரிக்கர் ’தயவு செய்து எங்கள் நாட்டை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சி கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட நடந்துவரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அக்கட்சியை சேர்ந்த 11 வேட்பாளர்கள், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இவர்களின் விவாதத்தை பார்த்து கடும் வெறுப்படைந்த ஒரு அமெரிக்கர், இங்கிலாந்து ராணிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் “பிரிட்டனின் அரசாட்சிக்கு கீழ் அமெரிக்காவை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அமெரிக்க மக்கள் சார்பில் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் விவாதத்தை நீங்கள் பார்த்திருந்தால் என்னுடைய இந்தக் கடுமையான நிலைப்பாட்டுக்கு என்ன காரணம் என்பது புரியும். நன்றி. ராணியை ஆண்டவன் காப்பாற்றுவாராக”என தெரிவித்துள்ளார்.

இந்தக் கடிதத்தை இங்கிலாந்து ராணிக்கும், பிரதமர் டேவிட் கேமரூனுக்கும் கடந்த மாதம் எழுதியிருந்தார். இதற்கான பதில் அளித்துள்ள, பக்கிங்காம் அரண்மனை செய்தித் தொடர்பு அதிகாரி ”இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் விவகாரத்தில் ராணி தலையிட விரும்பவில்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply