சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் ஆகியோர் தேர்தல் அதிகாரி பத்மநாபன் காலில் விழுந்து சான்றிதழ் வாங்கினார்கள்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு வெளியானது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது.
இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு விஷால் அணியில் போட்டியிட்ட அயூப்கான், கோவை சரளா, சங்கீதா, பால தண்டபாணி, பூச்சிமுருகன், ராஜேஷ், சோனியா, ஜூனியர் பாலையா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, பசுபதி, உதயா, பிரேம்குமார், ஸ்ரீமன், விக்னேஷ், பிரகாஷ், சிவகாமி ஆகிய 20 பேர் வெற்றி பெற்றனர்.
சரத்குமார் அணியில் போட்டியிட்ட 24 பேரில் ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பாண்டவர் அணியில் வெற்றி பெற்ற நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் ஆகியோருக்கு தேர்தல் அதிகாரி பத்மநாபன் சான்றிதழ் வழங்கினார். அப்போது, இவர்கள் அனைவரும் அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர்.