கொட்டகெத்தன – ஓப்பாத்தவத்தை பிரதேசத்தில் தாயொருவரும், அவரது புதல்வியும் வாழ்ந்து வந்த வீட்டின் அருகில் ஒழிந்திருந்த ஒருவரை தேடும் பணிகள் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவர் இதுவரை கைது செய்யப்பட்டவில்லை. நேற்று மாலை குறித்த அடையாளம் தெரியாதவரை, 62 வயதான தாயுடன் வீட்டில் இருந்த 29 வயதான புதல்வியும் கண்டுள்ளனர்.

வீட்டில் அருகில் மறைந்திருந்தவர் மேலாடையின்றி, கையில் கூரிய ஆயுதத்துடன் நின்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது புதல்வி கூச்சலிட்டதும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

பின்னர் பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த காவல்துறை விசேட அதிரடிப்படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சம்பவம் இடம்பெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் கொட்டகெத்தனவில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் சிலர் குறித்த வீட்டிற்கு சென்றிருந்தனர்.

வீட்டில் இருந்த காவல்துறை புத்தகத்தில் கையொப்பம் இடுவதற்கே அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.

காவல்துறையினர் அங்கிருந்து வெளியேறியதும் சந்தேகத்திற்குரிய ஒருவர் ஆயுதத்துடன் தென்பட்டதாக தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொட்டகெத்தன பகுதியில் இதுவரை 19 பெண்கள் வரை அடையாளம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டனர்.

இறுதியாக கடந்த மாதம் 28 ஆம் திகதி கொட்டகெத்தன ஓப்பாத்தவத்த பகுதியில் 48 வயதான பெண்ணொருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply