நாளைய உலகை அலங்கரிக்க காத்திருந்த வண்ண மலர் சேயா செதவ்மி காமுகனின் வல்லுறவு வேட்டையில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்து ஒரு மாதமும் கடந்து விட்டது.
சேயாவின் சிரிப்பு, மழலை மொழி, குறும்பு செயல் எல்லாமே வெ”றும் நினைவுகளாகவே இன்று உள்ளன. எவ்வளவு தான் அழுதாலும் சேயா இனி எப்போதுமே வரப்போவதில்லை.
ஆனால், சேயாவுக்கு ஏற்பட்ட இந்த துர்ப்பாக்கிய நிலை இனியும் இந்நாட்டில் எந்தவொரு பெண் பிள்ளைக்கும் ஏற்படக் கூடாது எனவே, சேயாவின் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் அவர்களுடைய முகத்திரை கிழிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே இன்றைய நிலையில் அனைவருடைய எதிர்பார்ப்புமாகும்.
இந்நிலையில் சேயாவின் கொலைச்சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலையே காணப்பட்டது.
சேயாவின் சடலத்திலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரி சந்தேக நபர்களின் மரபணு மாதிரிகளுடன் ஒத்திசையவில்லை.
இத்தகையதொரு நிலையில் தான் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயாவின் சகோதரன் சமன் ஜயலத்தின் மரபணு மாதிரி சேயாவின் மரபணு மாதிரியுடன் ஒத்திசைவதாக மினுவாங்கொடை நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி பொலிஸார் அறிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நோக்குவோமானால்,
கடந்த மாதம் 11 ஆம் திகதி சேயாவின் ஆயுளின் கடைசி நாள். இரவு தனது சகோதரியுடனும், சகோதரனுடனும் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த சேயா மறுநாள் காலை வீட்டிலிருக்கவில்லை.
இதனை தொடர்ந்து 13 ஆம் திகதி சேயாவின் வீட்டிலிருந்து 200 மீற்றர் தொலைவிலுள்ள ஓடைக்கரையொன்றிலிருந்து சேயா சடலமாகவே மீட்கப்பட்டாள்.
அதுமட்டுமின்றி, சேயாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சேயா மிகவும் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு துணியிலான பட்டி ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சேயாவின் மரணம் யாரால்? எதற்காக? எப்படி?
போன்ற அடுக்கடுக்கான பல கேள்விகளை அனைவர் மத்தியிலும் தோற்றுவித்தது. எனினும், ஆரம்பத்தில் சேயாவின் குடும்பத்தினருடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த நபர் ஒருவரே சேயாவை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்பட்டது.
சேயாவின் தாய்,தந்தை, பாட்டன், பாட்டி அயல் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என்று 30இற்கும் அதிகமானவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதனிடையே தான் சேயாவின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான பொறுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (CID) ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி கொட்டதெனியாவ பொலிஸார், குற்றப்புலனாய்வுப்பிரிவினர், மேல் மாகாணத்தின் வடக்குப்பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது தேசிய உளவுத் துறையின் ஆலோசனையும் பெறப்பட்டது
அவ்வாறு முன்னெடுத்த விசாரணைகளின் போது மேற்படி படுபாதக செயலை வித்தியாசமான பாலியல் ஆசைகளைக் கொண்ட நபர் அல்லது குழுக்கள் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர்.
எனவே அத்தகைய பின்னணியைக்கொண்ட நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியதுடன், சந்தேகத்தின் பேரில் 18 வயதான பாடசாலை மாணவன், 31 வயதான ஒரு பிள்ளையின் தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
எனினும் அவர்களின் மரபணு மாதிரிகள் சேயாவின் மரபணு மாதிரியுடன் ஒத்திசையவில்லை என்ற காரணத்தினால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சேயா செதவ்மியின் கொலை வழக்கில் மற்றுமொரு திருப்பு முனையாக பெம்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய கொண்டையா என அழைக்கப்படும் தினேஷ் பிரியசாந்த தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
எனவே அவன் தொடர்பில் பல்வேறு தகவல்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் சேகரித்தனர். அதுமட்டுமின்றி, 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில். தேடுதலை மேற்கொண்ட போது கொண்டயாவின் போர்வையும், கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டது.
இதனைதொடர்ந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசியை ஆதாரமாக கொண்டு தொலைபேசியில் அதிகளவில் இருந்த உள்வரும் வெளிச் செல்லும் அழைப்புகளை விசேட சோதனைக்குட்படுத்தினர்.
இதன்போதே அந்த தொலைபேசி இலக்கம் கொண்டையாவின் சகோதரன் சமன் ஜயலத்துடையது என்பது தெரியவந்தது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் சமன் ஜயலத்தை கைது செய்து கொண்டயா தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.
இவ்வாக்குமூலத்தில் தனது சகோதரன் கொண்டயா தான் இக்கொலையினை புரிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தான்.
எனவே அவ்வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே பெம்முல்ல காட்டுப்பிரதேசத்தில் வைத்து கொண்டயாவை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட கொண்டையாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொண்டனர்.
இதன்போது கொண்டையாவும் “நானே சிறுமி சேயாவை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் வழங்கியிருந்தான்.
இந்நிலையில் கொண்டையாவும் டீ.என்.ஏ பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டான். எனினும், இக்கொலை சம்பவத்தை கொண்டையா தான் புரிந்திருக்கின்றான் என்பதை நிரூபிக்கும் அளவுக்கு போதிய சாட்சியங்கள் இல்லாமை, கொண்டயா வழங்கிய வாக்குமூலத்துக்கும் சாட்சியங்களுக்கு இடையில் காணப்பட்ட வேறுபாடுகள் காரணமாக விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியது.
இதேவேளை, சேயா செதவ்மியை கொலை செய்தது எனது சகோதரனான கொண்டயாவாக இருக்கக் கூடும், அவனிடத்தில் பாலியல் ரீதியான வித்தியாசமான பழக்கவழக்கங்கள் காணப்பட்டன என்றெல்லாம் வாக்குமூலத்தை வழங்கிய கொண்டையாவின் சகோதரன் சமன் ஜயலத் மீதும் பொலிஸாரின் சந்தேகம் திரும்பியது.
அதற்கு காரணம் சமன் ஜயலத் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் காணப்பட்டன.
எனவே இதை உன்னிப்பாக அவதானித்த பொலிஸார் ஏதோ ஒரு வகையில் சேயாவின் கொலை தொடர்பில் சமன் ஜயலத்துக்கு தொடர்பிருக்க வேண்டும் அல்லது இக்கொலையினை சமன் ஜயலத் செய்துவிட்டு கொண்டயாவை இதில் சிக்க வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர்.
எனவே தொடர்ந்து சமன் ஜயலத்தும் தொடர்பாக இரகசிய விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டனர். இதில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்,
சமன் ஜயலத்
36 வயதான சமன் ஜயலத்தும் பாலியல் ரீதியான வித்தியாசமான அணுகுமுறைகள் பழக்க வழக்கங்கள் கொண்ட ஒருவன் என்றும் அது தொடர்பான வழக்கு ஒன்றின் காரணமாக 6 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தவன் என்றும் தெரியவந்தது.
இதனையடுத்து பொலிஸார் லிஹினியாகம என்னும் இடத்தில் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது சமன் ஜயலத்தை கைதுசெய்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற தொடர்ச்சியான விசாரணையின் போது “நானே சிறுமி சேயாவின் கொலைக்கு காரணம். நான் முதலில் சேயாவின் அம்மாவை எனது ஆசைக்கு பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடனே யன்னலின் ஊடாக வீட்டுக்குள் நுழைந்தேன்.
எனினும், எனது கையில் ஆயுதம் எதுவுமில்லை என்ற காரணத்தினால் அவர் விழித்துக்கொண்டால் எனக்கு பிரச்சினையாகி விடும் என்று எண்ணி சேயாவை தூக்கிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தேன்.
இதன்போதே அவள் என் பிடியிலிருந்து தப்பிச் செல்லும் நோக்குடன் என் கன்னத்தை கடித்தாள். எனவே ஆத்திரமுற்ற நான் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நீரோடைக்குள் வீசினேன்.
ஆயினும், ஆரம்பத்தில் நான் கொண்டயாவை பழியை ஏற்குமாறு வலியுறுத்தியதால் தான் அவன் பழியை ஏற்றுக்கொண்டான்.” என்று பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தான்.
அதற்கேற்றது போல் கொண்டயாவின் மரபணு மாதிரியும் சேயாவின் மரபணு மாதிரியுடன் பொருந்தவில்லை. மேலும் சமன் ஜயலத்தின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டு ஜீன். டெக் நிறுவனத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைதொடர்ந்து அந்த அறிக்கையில் சமன் ஜயலத்தின் மரபணு சேயா செதவ்மியின் மரபணுவுடன் பொருந்துவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி அறிவித்தனர். இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எனவே, இது தொடர்பான விசாரணைகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும். என்றும், எந்த ஒரு குற்றத்துக்கும் சூடு தணியும் முன்னர் தண்டனை வழங்கினால் தான் அந்தக் குற்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு இருக்கும் எனவும் பொதுமக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.