ஒட்டாவா: கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36 பஞ்சாபியர் உட்பட 44 இந்திய வம்சாவளியினரும் 6 ஈழத் தமிழர்களும் களமிறங்கியுள்ளனர்.
கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரிகளான லிபரல்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நமது தேர்தல் களங்களைப் போலவே வாக்குறுதிகளை கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் நூதனமான முறையில் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்வைத்திருந்தன.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 40% வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய கருத்து கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் அல்லது லிபரல் கட்சியே ஆட்சி அமைக்கும் என கூறுகின்றன.

அதாவது 4வது முறையாக பிரதமராக விரும்பும் ஸ்டீபன் ஹார்பருக்கும் லிபரல் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் பியரே ட்ரூடியூவின் மகனுமாகிய ஜஸ்டின் ட்ரூடியூவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
அதே நேரத்தில் புதிய ஜனநாயகக் கட்சியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலின் இறுதி கட்ட பிரசாரங்கள் ஞாயிறன்று ஓய்ந்தது.
19-1445249375-canada-tamil-mplist-600
44 இந்திய வம்சாவளியினர்…
இத்தேர்தலில் கணிசமான அளவில் வெளிநாட்டவரையும் கனேடிய அரசியல் கட்சிகள் களமிறக்கி உள்ளன. தற்போது மொத்தம் 44 இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் 36 பேர் பஞ்சாபிகள். ஆளும் கன்சர்வேட்டிவ் 14, லிபரல்கள் 20, புதிய ஜனநாயக் கட்சி 10 இந்திய வம்சாவளியினரை களத்தில் நிறுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தேர்தலில் 10 பஞ்சாபியரும் 2011-ல் 8 பஞ்சாபியரும் வென்று எம்.பி.க்களாகினர்.
ஒட்டுமொத்தமாக கனடாவில் சுமார் 5 லட்சம் பஞ்சாபியர் வசிக்கின்றனர்.
6 ஈழத் தமிழர்கள் போட்டி
இதேபோல் கனடா தேர்தல் களத்தில் 6 ஈழத் தமிழர்கள் குதித்துள்ளனர். இவர்களில் ராதிகா சிற்சபை ஈசன் கடந்த தேர்தலில் வென்று முதல் தமிழ் எம்.பி.யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர்.
சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞரான ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி கற்ற சாந்திகுமார், செந்தி செல்லையா, இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்து கனடாவில் குடியேறிய ரோஷன் நல்லரத்தினம், கார்த்திகா கோபிநாத் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக கட்சி வேறுபாடுகளைக் கடந்து 6 தமிழரையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply