தாயகத்தில் இன்று புற்றுநோய் காரணமாக சாவினை தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரான தமிழினி என்றழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, தமது 43ஆவது வயதில் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இயற்கையெய்தினார்.
நீண்டநாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அன்னார், மஹரகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார்.
தற்போது பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில், பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழினி கடந்த 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாக சேர்ந்தார்.
பின்னர், தன்னுடைய சிறப்பான செயற்பாடுகளால் விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பை எடுத்து மகளிர் அரசியல் பிரிவை வழிநடத்தி வந்தார்.
இறுதி யுத்தத்தின் பின்னர் வன்னியில் இருந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த தமிழினி படையினரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் புனர்வாழ்வுப் பயிற்சிக்காக பூந்தோட்டம் புனர்வாழ்வுப் பயிற்சி மையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்.
புனர்வாழ்வுப் பயிற்சிகளை முடித்துக்கொண்டதையடுத்து, தமிழினி அவருடைய தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒப்படைக்கப்பட்டார்.
புனர்வாழ்வு நடவடிக்கையின்போது அவர் பல இன்னல்களுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனையடுத்து தொடர்ந்தும் நோய்வாய்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது உடல், நேற்றுமாலை பரந்தன் சிவபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட, அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும், அவரது உடலுக்கு நேற்றிரவு அஞ்சலி செலுத்தினர்.
அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 2 மணியளவில் பரந்தனில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில்,
“உலகெங்கிலும் இருக்கின்ற எமது தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள்.
அத்தோடு எமது பகுதியில் இருக்கின்றவர்கள் முடியுமானால் அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருக்கும்அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி மரணம்
18-10-2015
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி இன்று ஞாயிறு அதிகாலை காலமானார்.
கிளிநொச்சி மாவட்டம் பரந்தனை சொந்த இடமாகக் கொண்ட தமிழினியின் இயற்பெயர் சிவசுப்பிரமணியம் சிவகாமி. இறக்கும்போது அவருக்கு 43 வயது.
கடந்த 1991 ஆம் ஆண்டு 19 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த தமிழினி பின்னர் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக உயர்ந்தார்.
அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தபோது தமிழினி கைது செய்யப்பட்டார்.
இளைஞர்களை, குறிப்பாக யுவதிகளுக்குப் பயிற்சி வழங்கியதாகவும், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீண்டகாலமாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் பெண்களுக்கான பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழினி, பின்னர் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான இவர் அரசியலில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இவரை தேர்தலில் போட்டியிடச் செயற்வதற்காக அரச தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக அப்போது பரவலாக பேசப்பட்டது.
ஆனால், தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அமைதியான முறையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, திருமணம் முடித்து வெளிச் சமூகத் தொடர்புகள் எதுவுமின்றி அமைதியான முறையில் தமிழினி வாழ்ந்து வந்தார்.
இவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தகவல்கூட வெளியில் வரவில்லை. நோய் முற்றி அவர் மகரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று அதிகாலை காலமானதாக கூறப்படுகிறது.
தமிழினியின் சடலத்தை அவரது சொந்த ஊரான பரந்தனுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் அவருடைய கணவனும் தாயாரும் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அவருடைய இறுதிக்கிரியைகள் பரந்தனில் இடமபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
போரின் இறுதியில் ஓமந்தையில் வைத்து சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட அவர், 2013ஆம் ஆண்டு புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.