1958ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்கவினால் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் முழு வீச்சாக இராணுவமும், பொலிஸும் கலவரத்தை அடக்குவதில் மும்முரம் காட்டினர்.

இராணுவமும், முப்படையும், பொலிஸும் அன்று ஒப்பீட்டளவில் நேர்மையாக, பக்கச்சார்பின்றி தம் கடமையைச் சரிவரச் செய்யும் அமைப்புக்களாக இருந்தன.

பல்லினத்தவர்களும், முப்படையிலும், பொலிஸிலும் இருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கையின் புகழ்பெற்ற நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான பிரட்மன் வீரக்கோன், ‘ரெண்டரிங் அன்டு ஸீஸர்’ (ஆங்கிலம்) என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

ஆனால், இதுபோன்ற நிலை இதன் பின்னர் இடம்பெற்ற பல்வேறு கலவரங்களில் இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (சமஷ்டிக் கட்சி), தேசிய விடுதலை முன்னணியும் (ஜாதிக விமுக்தி பெரமுண) தடைசெய்யப்பட்டன.

இவ்விரு அமைப்புக்களையும் இந்தப் பிரச்சினையின் மூலகாரணமாக காட்டியே அரசாங்கம் இந்தக் கட்சிகளைத் தடைசெய்தது.

அவசரகாலப் பிரகடனம் செய்த பின் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்க பத்திரிகையாளர்களோடு உரையாடும் போது, ‘இந்தக் இனக்கலவரம் தற்செயலாக எழுந்த ஒன்று அல்ல.

இதன் பின்னால் மிகப்பெரிய சூத்திரதாரி இருக்கிறார். அவர் இதனைத் திட்டமிட்டு, தாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

இந்தக் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் யார் என்பது தொடர்பில் நிறைய வதந்திகள் அன்று உலவின். ஆளுங்கட்சிக்குள் இருந்த வலது சார்பான தரப்பு இதனை ரஷ்யாவின் வேலை என எண்ணியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியும் தடைசெய்யப்பட வேண்டும் என விரும்பியது.

ஆளுங்கட்சியின் இடதுசாரி தரப்பு இதன் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சி, குறிப்பாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இருப்பதாக எண்ணியது.

அன்றைய காலகட்டத்தில் இடதுசாரிகளுக்கு அச்சமூட்டத்தக்க தலைவராக ஜே.ஆர். இருந்தார் என்று தனது ‘எமர்ஜென்ஸி 58 (ஆங்கிலம்)’ நூலில் பதிவுசெய்கிறார் டாஸி விட்டாச்சி.

இந்நிலையில், கொழும்பையும், கொழும்பை அண்டிய பகுதிகளிலும் ஏறத்தாழ 10,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக நின்றனர்.

வீடுகள் எரியூட்டப்பட்டு, தமிழர்களின் கடைகளும், வர்த்தக நிலையங்களும் சிதைக்கப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு, மரணத்தின் விழும்பில் தப்பியொட்டி அநாதரவாய் நின்ற அம்மக்களை அரசாங்கம் தற்காலிக அகதிமுகாம்களில் வைத்திருந்ததுடன், ஒரு பகுதியினரை கொழும்பிலிருந்து கப்பலேற்றி பருத்தித்துறைக்கு அனுப்பிவைத்தது!

கொழும்பில் அகதிகளான தமிழ் மக்களை யாழ்ப்பாணத்துக்கு கப்பலேற்றி அனுப்பியதனூடாக தமிழர்களுடைய மண் அது என்பதை அரசாங்கம் சொல்லாமல் சொல்லியிருந்தது.

காலங்காலமாக கொழும்பில் வசித்த தமிழர்கள்கூட அன்று அகதிகளாய் யாழ் மண்ணுக்கு கப்பலேற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

1958 மே 22 தொடங்கிய கலவரம் அடுத்தடுத்த நாட்களில் உக்கிரமடைந்து, மே 27ஆம் திகதி நண்பகலுக்கு பின் மேற்கொள்ளப்பட்ட அவசரகாலப்பிரகடனத்தை தொடர்ந்து தணியத்தொடங்கியது.

ஜூன் 3ஆம் திகதி, நிலைமைகளை ஆராயும் பொருட்டு நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சிக் குழுக் கூட்டம் பிரதமர் பண்டாரநாயக்க தலைமையில் கூடியது.

‘கனவான்களே, நான் நிலைமையை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன். இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்துவிடலாமென்ற தவறான நோக்கத்துடன் இருந்த குழுக்களெல்லாம் கடந்த இரண்டு வாரங்களில் சட்டத்தையும் ஒழுங்கையும் உடைப்பதில் ஒன்றிணைந்தன.

அந்தக் காடையர்களை தடுத்து நிறுத்துவதில் நாம் வெற்றிகண்டுவிட்டோம்’ என அந்தக் கூட்டத்தில் பிரதமர் பண்டாரநாயக்க அறிவித்தார்.

சமஷ்டிக் கட்சியைத் (இலங்கை தமிழரசுக் கட்சி) தடைசெய்த போதிலும் அதன் தலைவர்கள் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியை, எஸ்.டி.பண்டாரநாயக்க (கம்பஹா), பனி இலங்ககோன் (வெலிகம) ஆகிய ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரநாயக்கவிடம் அங்கு கேட்டனர்.

‘ நாட்டின் எந்தப் பகுதிகளில் தமிழர்கள் இருந்தாலும் பலம் பொருந்தி வருகிறார்கள், சிங்களவர்களை அவர்கள் இல்லாமல் செய்துவிடுவார்கள்.

இதனை இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா?’ என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார் ஹொரண தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாகர பலன்சூரிய.

இதற்கும் மேலாகச் சென்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் ராஜபக்ஷ, ‘அவர்களை (தமிழர்களை) அழித்துவிடுவோம்!’ என்று கத்தினார்.

இது பிரதமர் பண்டாரநாயக்கவுக்கு சினத்தை ஏற்படுத்தியது. ‘நீங்கள் உண்மையாகவே தமிழர்களை அழிப்பது பற்றி சிந்திக்கிறீர்களா? இந்த அரசாங்கத்துக்கு அது போன்ற எந்த எண்ணமுமில்லை. இந்தக் கருத்தை ஹம்பாந்தோட்டை எம்.பி. லக்ஷ்மன் சொன்னதைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.

தமிழ்ப் பெண்மணியை மணந்துள்ள நீங்களா இப்படிச் சொன்னது லக்ஷ்மன்?’ எனக் கேட்டார் பிரதமர் பண்டாரநாயக்க.

தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பிரதமர் பண்டாரநாயக்க, ‘இந்தநாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சாந்தியுடனும், சமாதானத்துடனும் வாழ வேண்டும்.

எனது எண்ணமென்னவெனில் நாம் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றாக வாழவேண்டும். உங்களுடைய பிரதமராகச் சொல்கிறேன், இந்த இலக்கை அடைவதற்காகவே என்னுடைய அரசாங்கம் வேலை செய்யும்’ என்று தீர்க்கமாகச் சொன்னார்.

z_p09-media1ஜூன் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சா.ஜே.வே.செல்வநாயகம் உரையாற்றினார். ஒரு தளர்ந்து போன செல்வநாயகமாக அவர் காணப்பட்டார்.

முதல்நாள் அகதிமுகாமில் அவர் கண்டவை, கேட்டவை எல்லாம் அவரைத் தளர்வடையச் செய்திருந்தன எனப் பதிவு செய்கிறார் டாஸி விட்டாச்சி.

இரவு 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிய தமிழரசுக்கட்சி (சமஷ்டிக் கட்சி) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

சா.ஜே.வே.செல்வநாயகம், டாக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டியிலிருந்து அவர்களது வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களது வெளியுலகத் தொடர்பு முற்றாக தடைசெய்யப்பட்டது. கொழும்பில் வீடுகள் இல்லாத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு ‘கோல் ‡பேஸ் ஹொட்டேலின்’ இரண்டாவது மாடியில் தடுத்து வைக்கப்பட்டனர்.

வி.ஏ.கந்தையா, டாக்டர். வி.கே.பரமநாயகம், வி.என்.நவரட்ணம், என்.ஆர்.ராஜவரோதயம், சி.வன்னியசிங்கம், சி.ராஜதுரை, அ.அமிர்தலிங்கம் ஆகிய தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்கள்.

இதனை விட, ஏறத்தாழ 150 அளவிலான (சில முஸ்லிம்களும் உள்ளடங்கலாக) தமிழரசுக்கட்சியினர் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இத்தோடு ஜாதிக விமுக்தி பெரமுணவைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சொகுசான வசதி (அவர்களது வீட்டில் அல்லது ‘கோல் ‡பேஸ் ஹொட்டலில்’ தடுத்துவைக்கப்படுதல்) கைது செய்யப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் பிரதமர் பண்டாரநாயக்க மீது வைக்கப்பட்டது.

அவசரகாலப் பிரகடனம் என்பது அங்கிகாரம் பெற்ற காட்டாட்சி என்ற விமர்சனத்தில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் ‘அவசரகாலத்தில்’ எதையும் செய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவிடும்.

ஒரு சர்வாதிகாரியின் பலம், ‘அவசரகாலத்தில்’ ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்கும் கிடைத்தவிடும். ஜனாநயக நாடொன்றில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டப் பாதுகாப்புக்கள் எல்லாம் செயலிழந்துவிடும்.

யாரும், எப்போது சுடப்படலாம், கைது செய்யப்படலாம், மரண விசாரணை தேவையில்லை என்ற நிலை 1958 மே – ஜூன் காலப்பகுதியில் உருவாகி ‘அவசரகாலம்‘ நிறைவடையும் வரை தொடர்ந்தது.

பிரதமர் பண்டாரநாயக்க 1958 ஓகஸ்ட் 5ஆம் திகதி தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

தமிழரசுக்கட்சி தடைசெய்யப்பட்டு, அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுதில், மிதவாத தமிழ் மக்களிடையே நல்லெண்ணமொன்றை ஏற்படுத்த பிரதமர் பண்டாரநாயக்க முயற்சித்தார்.

சட்டமூலத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய பண்டாரநாயக்க, ‘இந்த நாட்டில் தீவிரவாதிகளின் அளவு, அது தமிழராக இருந்தாலென்ன சிங்களவராக இருந்தாலென்ன, மிகச்சொற்பமே. ஆனால், பெரும்பான்மையானவர்கள் நியாமும், மிதவாதமும் மிக்க மக்களே.

அந்த மக்கள் எமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தின் கீழ் ஒற்றுமையாக, தன்மானத்துடனும், சுயகௌரவத்துடனும் இணைந்து முன்னேறிச் செல்லவே எண்ணுகிறார்கள்.

சுதந்திரமென்பது அனைவருக்குமானது – அது சிங்களவருக்கானது, ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அது தமிழருக்குமானது கூட, அது முஸ்லிம்களுக்கானதும், அது மலே மக்களுக்கானது, அது பறங்கியருக்கானதும், அது எல்லா பிரசைகளுக்குமானது.

ஜவஹர்லால் நேரு சொன்னதை நான் ஞாபகமூட்ட விரும்புகிறேன், சுதந்திரம் என்பதன் அர்த்தம், உள்ளக இனமுரண்பாடு, அநீதி மற்றும் சிறுபான்மையினரின் ஒடுக்குமுறை என்றால், சுயராஜ்ஜியம் என்பது நரகத்துக்;குப் போகட்டும்’ என்று உரையாற்றினார்.

‘தனிச்சிங்களச்‘ சட்டம் எழுத முன்பே பண்டாரநாயக்க இதனை யோசித்திருக்கலாம். ஆனால், இந்தப் பொழுதில் பண்டாரநாயக்க இதனையாவது செய்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இந்த சட்டமூலம் மீதான விவாதத்தில் தடுத்து வைக்கப்பட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பங்குபற்ற தான் அனுமதிப்பதாக பிரதமர் பண்டாரநாயக்க அறிவித்தார்.

மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துபேசித்தான் தான் இதுபற்றி முடிவெடுக்க முடியும் என் செல்வநாயகம் பிரதமருக்கு அறிவித்தார்.

பொலிஸ் காவலுடன் தடுத்துவைக்கப்பட்ட உறுப்பினர்கள் செல்வநாயகம் அவர்களது வீட்டில் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

அந்தக் கூட்டத்தின் பின்பு தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் ‘சுதந்திர மனிதராக’ நாடாளுமன்றக் நடவடிக்கைகளில் பங்கேற்பதானால் பங்கேற்போம் இல்லையெனில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்தனர்.

அவர்கள் இல்லாமலேயே தமிழ்மொழி விசேட ஏற்பாடுகள் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

இந்ததச் சட்டம் தமிழ் மொழி மூலமான பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வி, தமிழ் மொழி மூலம் அரசசேவை பரீட்சைகள் எழுதுதல் (சேவையில் இணைந்தபின் குறிப்பிட்ட காலத்துள் உத்தியோகபூர்வ மொழியை (சிங்களம்) கற்றுத் தேற வேண்டும்), வடக்கு, கிழக்கில் குறித்தொதுக்கப்பட்ட நிர்வாக விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ மொழிக்கு (சிங்களம்) எந்த பட்சபாதமுமின்றி தமிழில் கருமமாற்றுதல் ஆகிய ஏற்பாடுகள் இருந்தன.

ஆனால், இவை சட்டரீதியான அங்கிகாரமுடையவை அல்ல. அதாவது இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பிரதமரிடம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தச் சட்டம் 1958ல் நிறைவேற்றப்பட்ட போதும் 1966 டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியிலேயே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஆகவே இதை நிறைவேற்றுவதில் பிரதமர் பண்டாரநாயக்க காட்டிய மும்முரத்தை, இதனை நடைமுறைப்படுத்துவதில் அவர் காட்டவில்லை.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க என்ற ஆளுமை இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றின் ஒரு முக்கிய புள்ளி.

சுதந்திரத்துக்குப் பின்னராக இனப்பிரச்சினையின், குறிப்பாக மொழிப்பிரச்சினையின் தீவரப் போக்கின் ஆரம்பப்புள்ளி.

தன்னுடைய ஒக்ஸ்‡போர்ட் பல்கலைக்கழக அனுபவங்கள் பற்றி எழுதும் போது பண்டாரநாயக்க, அங்கு தனது முதலாவது ஆண்டில் தான் சந்தித்த இனரீதியான பாகுபாட்டை, ஒரு வெள்ளை மனிதன் அல்லாதவன், வெள்ளை மனிதனுக்கு சமனாக உருவாவதிலுள்ள சவாலைப் பற்றி எழுதியவர், தான் உணர்ந்துகொண்ட ஞானமாக சொன்னது ‘அவர்களுக்குச் சமனானவனாக நான் ஆவதற்கு, முதலில், நான் அவர்களைவிட உயர்ந்தவனாக ஆகவேண்டும்’. ஏறத்தாழ இதேயொரு நிலைக்கு இலங்கையின் தமிழர்களை தள்ளும் கைங்கரியத்தினை பண்டாரநாயக்க தொடங்கி வைத்தார்.

அதிகாரம் என்ற ஒன்றைக் கைப்பற்றவும், அதனைத் தக்கவைக்கவும் பண்டாரநாயக்க தேர்ந்தெடுத்த பெரும்பான்மை இனவாதம் என்ற ஆயுதம், இன்று அவராலேயே கட்டுப்படுத்த முடியாது அளவிற்கு பரந்துவிரிந்துவிட்டது.

இதை நிச்சயமாக பண்டாரநாயக்க உணர்ந்திருப்பார். ஆனால் அதே ஆயுதம் தன் உயிரைப் பறிக்கும் என அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

(அடுத்த வாரம் தொடரும்…)
என்.கே.அஷோக்பரன் LLB (Hons)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 07)

Share.
Leave A Reply