புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்தில் மரணமடைந்த கணவரின் உடலை எரியூட்டிய தீயில் குதித்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனைவியை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் நயாகார் மாவட்டம் கும்பர் சகி என்ற கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரபீந்திரா (28). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் இவருக்கு, லிபி (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணம் ஆகும்.
சம்பவத்தன்று ஒடிசாவில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு குடோலுனுக்கு லாரியில் பழங்கள் ஏற்றிச் சென்றார் ரபீந்திரா. அப்போது எலுரு என்ற இடத்தில் அந்த லாரி விபத் துக்குள்ளானது.
இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரபீந்திரா உயிரிழந்தார். கணவர் விபத்தில் உயிரிழந்த தகவல் அறிந்து லிபி மிகுந்த துக்கம் அடைந்தார்.
உடனடியாக வீட்டில் இருந்து விஷ மருந்தை சாப்பிட்டும், வீட்டு மாடியில் இருந்து குதித்தும் 2 முறை தானும் அவர் தற்கொலைக்கு முயன்றார்.
ஆனால், உறவினர்கள் அவரை காப்பாற்றி விட்டனர். இதனால் சோகமான மனநிலையில் இருந்துள்ளார் லிபி. இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து ரபீந்திராவின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.
கணவரின் உடலைப் பார்த்து லிபி கதறி அழுதார். பின்னர், ரபீந்திராவின் உடல் தகனம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படது.
அங்கு இறுதிச் சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைத்து அவரது உடல் தீ மூடப்பட்டது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கணவரின் சிதையில் குதித்தார் லிபி.
இதில் அவரது உடலிலும் தீப்பிடித்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக லிபியை மீட்டு சிகிச்சைக்காக கட்டாக் மருத்துவமனையில் சேர்த்தனர்.
லிபியின் உடலில் 60 சதவீத தீக்காயங்கள் இருப்பதாகவும், தொடர்ந்து அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணவரின் மீது கொண்ட தீராக்காதலால் தானும் உடன்கட்டை ஏற புதுப்பெண் முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share.
Leave A Reply