சம்மாந்துறையில் யானை அடித்து பட்டதாரி ஆசிரியரொருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறையிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மல்கம்பிட்டிச் சந்திக்கு அப்பாலுள்ள சல்மடுமூலை எனும் வயல்ப் பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய ஆசிரியர் எம்.ரி.எம்.இர்பான் என்பவரே இவ்விதம் யானையால் தாக்கப்பட்டு மரணமாகியுள்ளார். அவருக்கு வயது 29. இரு குழந்தைகளின் தந்தையான இவர் சம்மாந்துறையைச் சேர்ந்தவராவார்.
இவர் இன்று அதிகாலை வயலுக்கு வரம்புகட்டுவதற்காக மண்வெட்டியுடன் சென்றிருக்கிறார். அங்கு அவர் வரம்பு கட்டிக்கொண்டிருக்கும் போது பின்னால் வந்த யானை அவரை அடித்துக்கொன்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
சம்மாந்துறைப் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து நீதிவானுக்கும் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்திற்கும் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து சம்மாந்துறை மக்கள் சோகத்துடனும் பீதியுடனும் காணப்படுகின்றனர். அண்மைக்காலமாக காட்டு யானைகளின் வருகை என்பது அதிகரித்துக்கொண்டுவருகிறது.
முன்னர் ஓரிரண்டு வருவதுண்டு.தற்போது 100க்கணக்கில் வருகின்றன. இதுவரை பலஉயிர்களும் பலியாகியிருக்கின்றன.
இலட்சக்கணக்கான சொத்துக்களும் சேதமாக்கப்பட்டிருக்கின்றன.
பலதடவைகள் பலமுறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டும் எனினும் அரசதரப்பிலிருந்து காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையென பொதுமக்கள் குறை கூறுகின்றார்கள்.