மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அந்த நபர்களை கொலை செய்வதற்கான காரணம் தனக்கு தெரியாதெனவும் கிடைக்கின்ற ஆலோசனைகளுக்கமைய செயற்பட்டதனை மாத்திரமே தான் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்தும் அவர் தகவல் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இராணுவ புலனாய்வு பிரிவினர் ஊடாக கைது செய்யப்பட்டு குறித்த நபர்களை தன்னிடம் ஒப்படைப்பதாகவும், பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து தான் செயற்பட்டதாக பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அவர் இன்னமும் சில தகவல்களை மாத்திரமே வெளியிட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

ஏனைய சம்பவங்கள் தொடர்பில் தனக்கு தெரியாதெனவும், அந்த தகவல் வேறு சிலருக்கு மாத்திரமே தெரியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply