மன்னார் மறை மாவட்டத்தில் பறப்பாங்கண்டல் என்னும் கிராமத்தில் கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணையில் அதிசயம் ஒன்று நிகழ்ந்ததைத் தொடர்ந்து இவ் அதிசயத்தை பார்ப்பதற்கும் அதற்கு வணக்கம் செலுத்துவதற்கு என பலரும் அவ் இடத்துக்கு படையெடுத்துள்ளனர்.
எனினும் இவ் விடயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் எவ்வித கருத்துக்களையும் வெளிவிடாது மௌனம் காக்கின்றது.
இச் சம்பவம் கடந்த புதன் கிழமை (21) இடம்பெற்றபோதும் வியாழக்கிழமையே (22) சம்பவம் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்ததை
தொடர்ந்தே மக்கள் இவ் பகுதிக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மன்னார், பறப்பாங்கண்டல் என்னும் கிராமத்தில் இரு ஆலயங்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு ஆலயத்தில் புனர்நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருகின்றது. மற்றைய ஆலயம் தற்பொழுது புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் இவ் ஆலயங்களில் திருப்பலி நிறைவேற்றி முடிவுற்றதும் திருப்பலி வேளையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்விய நற்கருணைகளில் மிஞ்சியவற்றை அருகில் உள்ள திருக்குடும்ப கன்னியர் மடத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுவது வழமையாகும்.
சம்பவம் அன்று பிற்பகல் இவ் கன்னியர் மட அருட்சகோதரி ஒருவர், மடத்தில் பரிசுத்த இடத்தில் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த திவ்விய நற்கருணைக்கு மரியாதை செலத்துவதற்காக திறந்தபோதே அந்த அதிசயத்தைக் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் சம்பவம் தொடர்பாக உடன் பங்கு தந்தையூடாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்டர் சோசை அடிகளாருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பின் இவ் விடயம் வெளியில் கசியாமல் இருப்பதற்காக அன்று மறைக்கப்பட்டிருந்ததாகவும் இருந்தபோதும் நேற்று பிரதேச மக்களுக்கு அனைவருக்கும் தெரியவந்துள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் திவ்விய நற்கருணை இருந்த அந்த பாத்திரத்துக்குள் இரத்தக் கரை தென்பட்டதாகவும் இரு வடிவங்கள் கொண்ட உருவங்கள் தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பொழுது இவ் அதிசயம் கொண்ட திவ்விய நற்கருணை பங்கு தந்தையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இது சம்பந்தமாக எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம்
காக்கின்றனர்.