இந்திகா ஸ்ரீமாலி 27 வயதான இளம் முகாமையாளர் ஜா–எல நகரின் சமரதுங்க அடகுக் கடையில் சாதாரண பதிவாளராக சேர்ந்து நம்பிக்கை, உழைப்பு என்பவற்றால் முகாமையாளர் ஆனவர்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி பட்டப்பகலில் இந்திகாவையும் அவருடன் உதவியாளராக பணிபுரிந்த 22 வயதான வங்சலாவையும் யாரோ ஒருவர் கட்டிவைத்துவிட்டு அடகுக் கடையில் இருந்த பெறுமதியான நகைகளையும் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

ஜாஎல பொலிஸ் நிலையம் சென்ற சமரதுங்க அடகுக் கடையின் உரிமையாளர் இப்படித்தான் முறைப்பாடு செய்தார்.

அந்த முறைப்பாடானது அடகுக் கடை உரிமையாளருடன் முகாமையாளர் இந்திகா, உதவியாளர் வங்சலா ஆகியோரினால் செய்யப்பட்டது.

முறைப்பாட்டையடுத்து ஸ்தலம் விரைந்த ஜா–எல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சமரதுங்க, அடகுக் கடை வர்த்தகத்தில் கடந்த 30 வருடங்களாக ஈடுபட்டுள்ளவர். ஆரம்பத்தில் சின்னதாய் ஆரம்பித்த இந்த வர்த்தகத்தில் சமரதுங்க தற்போது மிகப் பெரிய வர்த்தகர். சமரதுங்க அடகுக் கடை என்ற பெயரில் அவருக்கு 5 அடகுக் கடைகள் சொந்தமாக உள்ளன. அதில் இரண்டு ஜா–எல பிரதேசத்திலேயே உள்ளன.

அதில் ஒன்று தான் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி கொள்ளையிடப்பட்ட கடையாகும்.

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மேல் மாகாணத்தின் வடக்குப் பிராந்திய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல். ஜி. குலரத்ன மற்றும் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் மேற்பார்வையில் ஜா–எல பொலிஸ் நிலையத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் பொலிஸார் முதலில் கொள்ளையின் போது அடகுக் கடையில் இருந்த முகாமையாளர், உதவியாளரிடமும் உரிமையாளரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

அதன் படி இந்திகா சாதாரண ஊழியராக அந்த அடகுக் கடையில் சேர்த்து உழைப்பு, நம்பிக்கையால் அக்கடைக்கு முகாமையாளர் ஆகியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.

அண்மையிலேயே திருமண பந்தத்தில் இணைந்திருந்த இந்திகா 15 நாட்கள் விடுமுறை எடுத்திருந்ததுடன் விடுமுறைக்கு முன்னர் தனது நம்பிக்கையை உறுதி செய்ய வேறாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தங்க நகைகள் தொடர்பான அனைத்து தரவுகள், ஆவணங்களையும் உரிமையாளரிடம் கையளித்திருந்தார்.

6 வருடங்களாக அந்த அடகுக் கடையிலேயே வேலை பார்க்கும் இந்திகா மீதான நம்பிக்கையில் தங்க நகை பெட்டகத்தின் திறப்பை கூட உரிமையாளர் இந்திகாவிடமேயே கொடுத்துச் செல்வது வழமை.

இந்நிலையில் இந்திகாவின் உதவியாளராக புதிதாக சேர்ந்த வங்சலா 22 வயதானவர். க.பொ.த. சாதாரண தரம் வரை மட்டுமே படிந்திருந்த வங்சலா உயர் தரம் படிக்க பணம் இல்லாததால் அங்கு வேலைக்கு சேர்ந்திருந்தார்.

அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு படித்து உயர்தர பரீட்சைக்கு பிரத்தியேகமாக தோற்றுவது அவரது எண்ணம்.

இந்த விபரங்களை தவிர ஜா–எல பொலிஸாரால் இக் கொள்ளை தொடர்பில் வேறு எந்தவொரு தகவலையும் கண்டறிய முடியவில்லை. நாட்கள் உருண்டோடின.

ஜா–எல பொலிஸார் மீது உரிமையாளர் சமரதுங்கவுக்கு இருந்த நம்பிக்கை விலகிச் செல்ல ஆரம்பித்தது. இந்நிலையில் தான் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேச பந்து தென்னகோனை அவரது அலுவலகத்தில் வைத்து சமரதுங்க சந்தித்துள்ளார்.

தனது அடகுக் கடை கொள்ளை தொடர்பில் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லையெனவும் விசாரணைகளை துரிதப்படுத்தவும் அவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோனை கோரினார்.

உடனடியாக இது தொடர்பில் அவதானம் செலுத்திய தேசபந்து தென்னகோன் ஜாஎல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விசாரணையின் நிலைமையை கேட்டறிந்தார்.

தொடர்ந்தும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்தவை அழைத்த அவர் களனி பொலிஸ் நிலைய தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மனோஜ் ஆகியோரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தனிப்படையை தயார் செய்தார்.

அதனை தொடர்ந்து இந்த தனிப்படையின் சார்ஜன் தர்மசிறியை பிரத்தியேகமாக அழைத்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன்’ இதனை முடிப்பதற்கு எத்தனை நாள் வேண்டும்’ என கேட்டுள்ளார். ‘குறைந்தது 2 வாரங்கள் தாருங்கள் சேர்.. ‘என்ற தர்மசிறியின் பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எதிர்பார்த்ததாக இருக்கவில்லை.

‘2 வாரங்கள் அதிகம். ஒரு வாரம் தருகிறேன். அந்த கொள்ளையர்களை எப்படியேனும் கைது செய்து விடுங்கள் ‘ என சார்ஜன் தர்மசிறிக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜா–எல நோக்கி சென்ற சார்ஜன் தர்மசிறி தனது தனிப்பட்ட உளவாளி ஒருவரை சந்தித்து விடயத்தை கூறி தகவல் பெறுமாறு ஆலோசனை வழங்கினார்.

இதனிடையேதான் உளவாளி பிரசாத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தர்மசிறியிடம் இன்னுமொரு கேள்வியை தொடுத்தார். ‘ சேர்…. இந்த கொள்ளையரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு 10 இலட்சம் ரூபா பணம் தருவதாக அந்த கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளாரா?’ என வினவினார்.

இந்த கேள்விக்கு விடை தெரிய உரிமையாளரை சந்தித்த தர்மசிறி விடயம் தொடர்பில் வினவினார். எனினும் சரியான தகவல் ஒன்றினை தருபவருக்கு 5 இலட்சம் ரூபாவை தருவதாக அவர் தகவல் அளிக்க தர்மசிறி விடயத்தை தனது தனிப்பட்ட உளவாளிக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகமும் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கவே பிரசாத் முக்கியமான தகவல் ஒன்றை தர்மசிறிக்கு தெரிவித்தார்.

‘ சேர்.. இந்த கொள்ளையுடன் தொடர்புடையோரை கண்டிப்பாக தினேஸுக்கு தெரிந்திருக்க வேண்டும். அவன் சிலரிடம் அக்கடையை கொள்ளையடிப்பது குறித்து கலந்துரையாடியுள்ளான். கொஞ்சம் தேடிப்பாருங்கள் சரியாக இருந்தால் 5 இலட்சத்தை பெற்றுத் தாருங்கள்’ என பிரசாத் தகவலளிக்கலானார்.

இதனையடுத்து தினேஷை தேடி பொலிஸ் விசாரணை ஆரம்பமானது. எனினும் தினேஷ் அவனது ஊரில் இருக்கவில்லை.

அதனால் தினேஷை கைது செய்ய அறிவியல் ரீதியிலான தடயங்களை பயன்படுத்த பொலிஸார் தீர்மானித்தனர். களனி மத்திய தடயவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரியன்சி கஹட்டபிட்டிய தலைமையிலான குழுவும் அச்சந்தர்ப் பத்திலிருந்து விசாரணையில் இணைந்தது.

பொலிஸ் பரிசோதகர் ரியன்சி கஹட்டபிட்டியவின் ஆலோசனைக்கு அமைய தினேஷின் தொலைபேசி வலையமைப்பை வைத்து அவன் இருக்கும் இடத்தை பொலிஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து அவனை பொலிஸார் கைது செய்தனர்.

சார்ஜன் தர்மசிறி தினேஷிடம் நீண்ட விசாரணைகளை முன்னெடுத்த போது இக் கொள்ளையின் மர்மம் துலங்கியது.

‘ சேர்… நான் உண்மையை சொல்கிறேன். தங்க நகைகளை கிணற்றில் போட்டு விட்டேன்…’ என தினேஷ் கூறவே கிணற்றை இறைக்க சந்தேக நபரையும் அழைத்துக் கொண்டு பொலிஸார் ஸ்தலம் சென்றனர்.

‘ சேர்…. கிணற்றை இறைக்க தேவையில்லை. நகைகள் தாயிடம் தான் உள்ளது.’ என தினேஷ் மீண்டும் கூறலானான். இதனையடுத்து தினேஷுடன் அவன் தாய் வீட்டுக்கு சென்ற பொலிஸார் நகைகள் பலவற்றையும் மீட்டனர்.

எனினும் மீட்கப்பட்ட நகைகள் தொடர்பில் பொலிஸார் திருப்தியடையவில்லை. தொடர்ந்தும் விசாரித்தனர். ஏனைய நகைகள் எங்கே என குடைந்தனர்.

அதன் பலனாக மேலும் 80 தங்க மோதிரங்கள் தினேஷிடமிருந்து பொலிஸாரால் மீட்க முடிந்தது. எனினும் மேலும் அரைவாசிக்கும் மேற்பட்ட நகைகள் தொடர்ந்து காணாமல் இருந்ததால் தினேஷை தொடர்ந்தும் பொலிஸார் விசாரணை செய்தனர்.

‘ சேர்… இவ்வளவுதான் என்னிடம் உள்ளது. ஏனைய நகைகள் அனைத்தையும் சுபுன் எடுத்துச் சென்று விட்டார்…’ என கூறவே பொலிஸார் சுபுனை தேட ஆரம்பித்தனர்.

தொடர்ந்து தினேஷையும் விசாரணை செய்ய ஆரம்பித்த பொலிஸார் கொள்ளைக்கான காரணம் உள்ளிட்டவற்றை அறிய முனைந்தனர்.

‘ சேர்… எனது உயிர் நண்பன் சந்தனவுக்காகத்தான் இதனை செய்தேன். அவன் மனைவி தான் அடகுக்கடை முகாமையாளர் இந்திகா…… அவர்கள் இருவருக்கும் கொள்ளை தொடர்பில் தெரியும்…. இந்திகாவின் உதவியுடனேயே இதனை செய்தோம்….. ‘ என தினேஷ் கூறினான்.

ஒரு புறம் சுபுனை தேடி வலைவிரித்திருந்த பொலிஸார் கம்பஹா – ஒருதொட்ட பகுதியில் வாழ்ந்த இந்திகாவையும் கணவன் சந்தனவையும் வாக்குமூலம் ஒன்று அவசியம் எனக் கூறி ஜா–எல பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

“சேர்… எங்களுக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது…..” என இருவரும் கூறவே இந்த தம்பதி உண்மையைக் கூறப் போவதில்லை என்பது பொலிஸாருக்கு தெரிந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்டிருந்த தினேஷை பொலிஸார் அந்த தம்பதி முன் கொண்டு வந்து நிறுத்தவே உண்மைகளை பொலிஸார் தெரிந்து கொண்டுதான் விசாரிக்கின்றார்கள் என்பதை முகாமையாளர் இந்திகாவும் அவள் கணவனும் தெரிந்து கொண்டு நடந்தவற்றை அப்படியே கூறலாயினர்.

“சேர்… எங்கள் இருவருக்கும் அண்மையில் தான் திருமணம் நடந்தது. திருமணத்தின் பின் இந்திகா அடகு கடைக்கு வேலைக்கு போவது எனக்கு பிடிக்கவில்லை.

அதனால் அவளை நான் வேலைக்கு போக வேண்டாம் என்றேன். அவள் அதற்கு மறுப்பு தெரிவித்தாள். ஏன்….. போகாமல் இருக்க முடியாதா? என நான் கேட்டேன். எனினும் அவள் வேலையிலிருந்து நிற்க இணங்கவில்லை.

இது எனக்கு பெரும் மன உளைச்சலை தந்தது. தொடர்ந்தும் இடைக்கிடையே இது தொடர்பில் அவளை நான் கேட்க ஆரம்பித்தேன். அப்போது தான் நான் அங்கிருந்து பணம் எடுத்துள்ளேன் என இந்திகா பயத்துடன் கூறினாள்.

எவ்வளவு தொகை பணம் எடுத்தாய்? என நான் அவளை கேட்ட போது ஐந்தாறு இலட்சம் என அவள் கூறினாள். இதனை கேட்ட போது எனக்கு கோபம் வந்தது. தொடர்ந்து நான் எப்படி பணம் எடுத்தாய் என வினவினேன்.

அப்போதுதான் அடகு வைக்கத் தரப்படும் நகைகளுக்கு இரண்டு மூன்று பற்றுச் சீட்டுகளை தயாரித்து பணம் எடுத்ததாக அவள் கூறினாள் “என சந்தன கூறலானான்.

அந்த அடகுக் கடையில் வருடா வருடம் கணக்காய்வுகள் இடம்பெறவில்லை. இதனால் இந்திகாவுக்கு இவ்வாறு பற்றுச் சீட்டுகளை தயாரித்து பணம் மோசடி செய்வது இலகுவானது.

நகைப் பெட்டகத்தின் திறப்பும் இந்திகாவிடமேயே அதிகளவான சந்தர்ப்பங்களில் இருந்த நிலையில், அதிலிருந்த நகைகளையே மீண்டும் மீண்டும் அடகு வைப்பதாக காட்டி இந்த பற்றுச்சீட்டுகள் தயார் செய்யப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தொடர் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு தொடர்ந்தும் சந்தன இந்திகா ஜோடி நடந்தவற்றை கூறலாயினர்.

“சேர் ….. பின்னர்….. அவள் ஒவ்வொரு நாளும் செய்த மோசடி விபரங்களை எழுதிவறுமாறு கூறினேன். அவளும் எழுதி வந்தாள். இதனைப் பார்த்த போது அவள் எடுத்துள்ள பணம் ஒரு கோடி ரூபா வரை இருக்கும் என தோன்றியது.

இந்நிலையில் மனைவியைக் காப்பாற்ற நான் சட்டத்தரணி ஒருவரிடம் சென்றேன். விபரங்களை கேட்ட அந்த சட்டத்தரணி உரிமையாளருடன் சென்று பேசித்தீர்க்குமாறும் எடுத்த பணத்தை திருப்பி செலுத்துமாறும் எமக்கு அறிவுரை வழங்கினார்.

அவரும் அந்த விவகாரத்தை கைவிடவே எனக்குத் தெரிந்த ஓய்வுபெற்ற உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரை நான் நாடினேன். அவரும் விடயங்களை கேட்டவுடன் உடனடியாக பொலிஸ் நிலையம் சென்று சரணடையுமாறு கூறினார்.

இந்நிலையில் தான் எனது நண்பன் தினேஷை நான் சந்தித்து அவனுடன் இது தொடர்பில் கலந்துரையாடினேன். குறித்த அடகு கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் பெண்ணொருவரின் பெயரில் எனது மனைவி மோசடிகளை செய்திருந்ததால் அவளையும் சந்தித்துப் பேசினோம்.

அவளும் கைவிரித்தாள். செய்வதறியாது அடகுக் கடையை கொள்ளையிடுவது என நாம் தீர்மானித்தோம். இதற்காக அக்கடையின் முகாமையாளராக இருந்த எனது மனைவி இந்திகாவின் உதவி எமக்கு கிடைத்தது” என சந்தன அனைத்தையும் கூறினான்.

அதனை தொடர்ந்து நடந்தவற்றை தினேஷ் பொலிஸாருக்கு தெரிவித்தான். “சேர்… சந்தனவையும் அவள் மனைவியையும் காப்பாற்ற அக்கடையைக் கொள்ளையிட தீர்மானித்து எனது நண்பர்களிடம் பேசினேன். அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

இறுதியாக வேலையின்றி கஷ்டப்படும் நண்பன் சுபுனின் உதவியை நான் நாடினேன். இவன் ஒப்புக் கொண்டான். கொள்ளையிடுவதில் ½ வாசியை அவன் கோரினான்.. அதற்கு உடன்பட்டோம். அதன்படி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி திட்டத்தை அரங்கேற்றினோம்.

தேர்தலுக்கு இரு நாட்கள் இருந்த நிலையில் திட்டத்தை நடைமுறைப்படுத்த சுபுனை அழைத்துக் கொண்டு அடகுக் கடையை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்றேன்.

அவனை இறக்கிவிட்டு கொள்ளை முடிந்ததும் அழைப்பை ஏற்படுத்துமாறு கூறி ஜா–எல பகுதியில் காத்திருந்தேன். ஏற்கனவே திட்டமிட்டபடி இந்திகா மதிய உணவை எடுத்துவிட்டு மீண்டும் அடகுக் கடைக்குள் செல்லும் போது சுபுனும் பலாத்காரமாக உள்நுழைவதைப் போல் நுழைந்து திட்டத்தை அரங்கேற்றினார்.

அதன்படி அந்த கடையிலிருந்த பெண் உதவியாளரின் வாயில் பிளாஸ்ட்டரை ஒட்டிவிட்டு கை கால்களையும் கட்டிப்போட்டு இந்திகாவின் கழுத்தில் கத்தியை வைத்து போலியாக மிரட்டி தங்க நகைகள், பணத்தை சுபுன் கொள்ளையிட்டு வந்தான்.

கொள்ளையின் பின் ஏற்கனவே பேசியதைப் போல் சுபுன் எனக்கு அழைப்பை ஏற்படுத்தவில்லை. அதனால் நான் கலவரமடைந்தேன். அவனை தொடர்பு கொள்ள முனைந்த போது அவனது தொலைபேசி செயலிழந்திருந்தது.

அதனால் மேலும் கலவரப்பட்ட நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது மாலை வேளை சுபுன் எனக்கு அழைப்பை ஏற்படுத்தினான். மாலை பாழடைந்த இடமொன்றுக்கு வருமாறு சுபுன் கூறவே நான் அங்கு சென்று அங்கு வைத்து இருவரும் கொள்ளையிடப்பட்டவற்றை சமமாக பிரித்துக் கொண்டோம்.

அதன் பின்னர் நான் தாய் வீட்டுக்கு வந்து நகைகளை தாயிடம் கொடுத்து ஒளித்தேன். நீங்கள் எப்படியோ என்னை பிடித்து விட்டீர்கள். சுபுன் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது” என தினேஷ் தனக்கு தெரிந்தவற்றை ஒப்புவித்தான்.

இதனையடுத்து மேலதிக விசாரணையை ஆரம்பித்த பொலிஸ் குழு சுபுனின் தொலைபேசி இலக்கத்தை மையப்படுத்தி அவனைத் தேடியது.

அவன் அதிகளவு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்த இலக்கமொன்றுடன் அவனை நெருங்க பொலிஸார் திட்டமிட்டனர். அதன் படி அவனது கள்ளக் காதலியின் தொலைபேசி இலக்கத்தை பின் தொடர்ந்து சுபுனை தேடினர். எனினும் அவன் சிக்கவில்லை.

இதனிடையே தனது மனைவியுடன் வேறு ஒரு பிரதேசத்தில் சுபுன் வாடகைக்கு குடியிருப்பதாக உளவாளி ஒருவரூடாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பொலிஸார் சுபுன் தொடர்பில் விசாரித்தனர்.

அந்த வாடகைக்கு இருந்த அறை மூடப்பட்டிருந்தது. நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் அறையை உடைத்து பொலிஸார் சோதனையிட்டார்கள். அங்கு சுபுன் இருக்காத போதும் கொள்ளையிடப்பட்ட நகைகளில் பல அங்கு இருந்தன.

அவற்றை பொலிஸார் கைப்பற்றினர். இதனையடுத்து சுபுனை தேடி விசாரணைகளை பொலிஸார் விரிவுபடுத்தினர். கைது செய்யப்பட்ட தினேஷ், சந்தன, இந்திகா ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்த பொலிஸார் தலைமறைவாக வாழும் சுபுனை கைது செய்ய விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தான் வேலை செய்த அடகு கடையிலேயே கொள்ளையடித்து அக்கடையில் செய்த மோசடியை மறைக்க முயன்ற இந்திகாவும் அவள் கணவன் உள்ளிட்டோரும் தற்போது கம்பி எண்ணுகின்றனர்.

ஒரு குற்றத்தை ஒருபோதும் இன்னொரு குற்றத்தால் சரி செய்ய முடியாது. குற்றமொன்றினை செய்து விட்டு தப்பிக்கவும் முடியாது. அதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஜாஎலவில் நடந்த  வேறொரு கொள்ளை சம்பவம் இது

Share.
Leave A Reply