ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் ஊர்வலம் போன நிகழ்வு, அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதபூஜை விஜயதசமி விழாவையொட்டி இந்த ஊர்வலம் ஜம்முவில் நடந்துள்ளது. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலபாஜக எம்.எல்.ஏ-க்கள் ககன் பகத், சாம் சௌத்ரி ஆகியோர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக எம் எல்.ஏ-வான ககன் பகத், ”இந்து மதத்தினரின் வலிமையைக் காட்ட இந்த ஊர்வலம் நடந்துள்ளது.

இந்துக்களின் மரபு சார்ந்த ஆயுதங்களை வணங்க இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது ”என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை தடி, இசை வாத்தியங்கள் போன்றவற்றுடன் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், இப்போது துப்பாக்கி, வாள் முதலான கொடிய ஆயுதங்களுடன் நடந்துள்ளது, நாடு முழுக்க கடுமையான விவாதத்தையும் சர்ச்சையையும் உண்டாக்கியுள்ளது.

பா.ஜனதா கட்சி ஆளும் இடங்களிலெல்லாம் அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகள் வெளிப்படுவதாகவும், அதனால் நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் இடதுசாரி அமைப்புகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக தாத்ரி சம்பவம், முற்போக்கு எழுத்தாளர்கள் மீதான தாக்குதல், ஹரியானாவில் தலித் சிறுவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், கர்நாடாகவில் தலித் எழுத்தாளர் ஒருவர் அண்மையில் இந்து இயக்க ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கண்டும் காணாமல் இருப்பது, குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் இருப்பது போன்றவை இந்துத்வா அமைப்புகளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மேலும் அண்மையில் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் நடந்த தசரா பேரணியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 89-வது ஆண்டு விழாவும், அதன் தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரையும் தூர்தர்ஷனில் 1 மணி நேரத்துக்கு ஒளிபரப்பானது.

ஒரு குறிப்பிட்ட மத அமைப்பின் நிகழ்ச்சிகளையும், கருத்துக்களையும் பொதுவெளியில் எப்படி ஒளிபரப்பலாம் என்றும், இது ஆபத்தான போக்கு என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் நடத்திய ஊர்வலத்துக்கு காவல்துறை எப்படி அனுமதி வழங்கியது?

பிற அமைப்பினர் நாட்டில் வேறு எங்காவது இதுபோன்று ஊர்வலம் நடத்தினால், அதனை அரசோ அல்லது காவல்துறையோ அனுமதிக்குமா? இவ்வாறெல்லாம் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பி உள்ளன.

manushஇது தொடர்பாக திமுக-வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில், “இவங்களெல்லாம் எந்த நாட்டு ராணுவம்?

இந்த துப்பாக்கிகளுக்கு லைசன்ஸ் இருக்கிறதா? யாருக்கு எதிராக இந்த வாள்களும் துப்பாக்கிகளும்? இவர்களைத் தவிர வேறு எந்த இயக்கமாவது தெருவில் துப்பாக்கி ஏந்தி ஊர்வலம் போக அனுமதி உண்டா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

 rss

Share.
Leave A Reply