ஒரு வழியாய் என் பிரசவ நாளும் நெருங்கியது. நான் அழகிய ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்தேன். எனினும், அந்த குழந்தையின் மீது என்னால் எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை. குழந்தையை அவர்கள் இருவரின் பெயரிலேயே பதிவு செய்தார்கள்..
……………………………………………
“நான் தவறு செய்ய வேண்டும் என்று நினைத்து எதையும் செய்யவில்லை. காலத்தின் போக்கில் என்னுடைய கோலம் மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையும் திசை மாறிப்போனது.
என்னுடைய கடந்த காலத்தை நினைத்தால் எனக்கு சரியாக நித்திரைகூட வருவதில்லை. முன்பு நான் நடந்துவரும் பாதையில் யாரும் எதிர்ப்பட்டாலே பாவம் என்று நினைத்து விலகிச் செல்வார்கள்.
ஆனால், இது நான் விரும்பி ஏற்ற வாழ்க்கையல்ல. விதியின் விளையாட்டில் நானும் தவறு செய்ய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
இன்று எனக்காக உப்புகரிக்கும் கண்ணீர்த் துளிகளும், ஆறாத காயங்களுமே எஞ்சியுள்ளன. சிறு வயது முதலே நான் ஆசைப்பட்டது எதுவுமே எனக்கு கிடைத்ததில்லை.
அப்பா எனக்கு மூன்று வயதாய் இருக்கும் போதே எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அதன்பின் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியிலேயே அம்மா என்னையும் ,அக்காவையும் வளர்த்தார்.
இன்று அம்மா உயிருடனே இல்லை. அக்கா எங்கு இருக்கின்றாள் என்றே தெரியவில்லை. யாருமே இல்லாமல் தனிமரமாய், சுதந்திரமாய் சுற்றி திரிய வேண்டிய வயதில் கூண்டில் அடைப்பட்ட கூண்டுக்கிளியாய் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கின்றேன். “
இது பாலியல் தொழிலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட நதிகாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) உள்ளக்குமுறலாகும். நதிகா தொடர்ந்து தனது கடந்த காலத்தை பற்றி கூறுகையில்,
“நான் 25 வருடங்களுக்கு முன்பு சனநெருக்கடியான கொழும்பு பிரதேசத்தில் இருக்க இடமில்லாமல் எனது தாயுடனும், சகோதரியுடனும் சேரிபுறங்களிலுள்ள வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
தந்தை சிறு வயதிலேயே எங்களை விட்டு சென்றதால் எங்கள் இருவரையும் வளர்க்க எம் தாய் மிகுந்த சிரமப்பட்டாள். எங்களுக்கு உதவிக்கு என்று யாரும் இருக்கவில்லை.
எல்லோரும் எங்களை அனுதாபத்துடன் மட்டுமே பார்த்தார்கள். இரவு நேரங்களில் எங்கள் வீட்டில் யாராவது ஆண் ஒருவன் இருப்பான். எனினும், ஆரம்பத்தில் வீட்டில் என்ன நடக்கின்றது என்பது எனக்கு புரியவில்லை.
அம்மா என்னையும், அக்காவையும் பாடசாலையில் சேர்த்தார். அக்காவுக்கு 16 வயது பூர்த்தியாகியவுடனே சேகர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) என்பவருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
அதன்பின் நானும், அம்மாவும் மட்டுமே வீட்டில் இருந்தோம். என்னை நன்கு படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டார்.
எனினும், நான் இருந்த இடம் படிப்பதற்கு ஏற்ற சூழலாகவிருக்கவில்லை. எனக்கு 13 வயதாகிய போதே எனது அம்மா என்ன தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றாள் என்பதை தெரிந்து கொண்டேன்.
நான் பாடசாலைக்கு செல்வது, புத்தகங்கள், உடைகள் வாங்குவது, நானும் அம்மாவும் பசியாற உணவு உண்பது எல்லாமே அந்த பாவப்பட்ட பணத்தால் என்பதை நினைக்கும் போது அருவருப்பாகவிருந்தது.
ஒரு வகையில் அம்மாவை நினைக்கும் போது கவலையாகவும் இருந்தது. எனவே, நான் இது தொடர்பில் அம்மாவுடன் முரண்பட ஆரம்பித்தேன்.
அம்மா என்னைக் கட்டியணைத்து அழுதவாறே ” உன்னுடைய அப்பா உன்னையும், உன் அக்காவையும் விட்டுச் சென்றவுடன் எனக்கு வாழ்வதற்கு வேறு வழியிருக்கவில்லை.
ஒரு நாள் உங்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று கூட எண்ணினேன்.
எனினும், உங்கள் இருவரினதும் பிஞ்சு முகத்தை பார்த்தவுடன் அப்படி செய்ய எனது மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. அதனால் தான் உங்கள் இருவருடைய எதிர்காலத்துக்காக என்னையே அர்ப்பணிக்கத் துணிந்தேன்.
வெவ்வேறு ஆண்களுக்கு பின்னால் சென்று பணம் சம்பாதித்தேன். சில ஆண்களின் மனைவிமார் வீட்டுக்கு முன்னால் வந்து நின்று என்னைத் தகாத வார்த்தைகளினால் திட்டுவார்கள்.
எனினும், உங்கள் இருவருக்காகவும் நான் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டேன். நான் அனுபவிக்கும் கஷ்டத்தை நீங்கள் இருவரும் எந்த காலத்திலும் அனுபவிக்க கூடாது என்பது மட்டுமே என் நோக்கமாகவிருநதது .
எனினும், உன் அக்கா அதை உணராமல் எங்கோ சென்று விட்டாள். “நீ நன்கு படித்து என்னை பெருமைப்படுத்து” என்று கூறினார். அன்று அம்மாவின் கண்ணீரிலிருந்து சிந்திய கண்ணீர்த் துளிகள் என் மனதை ரணமாக்கின. அன்று முதல் என்னுடைய உலகத்தில் நண்பர்கள், காதலர்கள் என்று யாருக்குமே இடம் இருக்கவில்லை.
நண்பர்கள் என்று யாரையுமே என்றுமே நான் வீட்டுக்கு கூட்டிவந்தது கிடையாது. நான் நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று அம்மாவின் இந்த அவல வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது மட்டுமே என் சிந்தையில் சதா ஓடியது.
என்னுடைய கவனம் முழுக்க படிப்பில் இருந்தது. மிகுந்த சிரமத்துடன் படித்து கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றினேன். அதன்பின் பெறுபேறுகள் வரும் வரை ஒரு சிறு தொழிலுக்கும் சென்றேன்.
அந்த தொழிலும் என் மனதுக்கு நிறைவாக அமைந்தது. எனவே, அங்கு கிடைக்கும் சம்பள பணத்தில் சிறு அறையொன்றினை வாடகைக்கு வாங்கி அம்மாவை அங்கு அழைத்துச் சென்றேன்.
அங்கு வசதி வாய்ப்பில் குறைவிருந்த போதும் நானும், அம்மாவும் சந்தோஷமாகவிருந்தோம். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளும் வெளியாகின.
எனக்கு உயர்தரத்தை தொடரும் அளவுக்கு பெறுபேறுகளும் கிடைத்தன. அன்று எனது மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. நான் அழகாக உடுத்திக் கொண்டு பாடசாலைக்கு சென்றேன். ஏதோ புதிதாய் பிறந்தது போன்ற ஒரு பூரிப்பு என்னுள்.
ஆயினும், அந்த மகிழ்ச்சி வெகு நாட்கள் நீடிக்கவில்லை. நான் வேலையை விட்டு விலகி மீண்டும் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்ததால் எங்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.
எனவே, பணப்பற்றாக்குறை காரணமாக எனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட நேரிடுமோ என்ற பயம் எனக்குள் இருந்தது.
இதனிடையே தான் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் சகோதரர் அங்கு அடிக்கடி வந்து போவார். அவர் சற்று வயதானவர் எனினும், திருமணமாகாதவர்.
அவருடைய வருகையானது நாளடைவில் அவருக்கும் அம்மாவுக்கும் இடையில் பழக்கத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் எங்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வந்தார். எனக்கு அது பிடிக்கவில்லை.
நான் இது தொடர்பில் அம்மாவுடன் முரண்பட ஆரம்பித்தேன். எனினும், அம்மா “மகள் நாங்கள் சாப்பிடுவதற்கு, நீ படிப்பதற்கு எல்லாம் பணம் வேண்டும்.
எனக்கு இதை விட்டால் வேறு வழியில்லை” என்று கூறி என்னைச் சமாளித்தாள். எனவே, நானும் என்ன செய்வதென்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். ஒரு வழியாய் இரண்டு வருடங்கள் உருண்டோடின.
உயர்தர பரீட்சைக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. அம்மா திடீரென சுகவீனமுற்றார். நாளுக்கு நாள் அம்மாவின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே சென்றது.
அவரால் தனியாக எதையுமே செய்ய முடியவில்லை. மரணப்படுக்கையில் இன்றோ நாளையோ என்று இழுத்துக்கொண்டிருந்தார். எனவே, அம்மாவுக்காக என் முழு நேரத்தையும் செலவழித்தேன்.
இத்தகைய ஒரு தருணத்தில் தான் அம்மாவுடன் பழகிய வீட்டு உரிமையாளரின் தம்பி நடுநிசியில் அறைக்குள் நுழைந்து என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார். ஆரம்பத்தில் நான் அவரிடமிருந்து விலகிச் சென்றேன்.
எனினும் வெகு நாட்கள் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அம்மாவின் மருந்து செலவுகள், வீட்டுச் செலவுகள் என்பவற்றுக்கு எனக்கு பணம் தேவைப்பட்டது.
என்னால் அம்மாவை தனியாக விட்டு வெளியில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, எந்த வாழ்க்கையிலிருந்து அம்மாவுக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேனோ…. எந்த தொழிலை வெறுத்தேனோ அதையே நானும் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நான் அந்த மனிதனின் ஆசைக்கு இணங்கியதால் அம்மாவின் மருந்து செலவுகள், வீட்டுச் செலவுகளுக்கு அவர் உதவி செய்தார்.
எனினும், என் தாய் உயிர் பிழைக்கவில்லை. அம்மா சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார். அம்மாவின் இறுதி ச்சடங்குகளுக்கும் அவர் உதவி செய்தார்.
எனினும், அதற்கு பிறகு அங்கு இருக்க எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எல்லாம் முடிவடைந்து விட்டது. என்னுடைய இளமைப் பருவமும் வீணடிக்கப்பட்டு விட்டது. வெறும் கையுடன் அங்கு இருந்து வெளியில் வந்தேன்.
அதன்பின் எங்கு செல்வது? என்ன செய்வது? என்று எதுவுமே புரியவில்லை. தங்குவதற்கு இடமின்றி தவித்தேன்.
இந்த நிலையில் தான் பஸ் நிலையத்தில் வைத்து வசதி படைத்த பெண்ணொருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அவருடைய கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்த நிலையில் அவர் மட்டுமே வீட்டில் தனியாகவிருந்தார். பிள்ளைகள் என்று யாரும் இருக்கவில்லை.
எனவே, நானும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவருடன் தங்கினேன். அவர் எனக்கு வேலையொன்றையும் கொடுத்து தங்குவதற்கு அங்கு அறையொன்றையும் ஒதுக்கிக் கொடுத்தார்.
எனக்கு நடந்த கசப்பான அனுபவங்களையும் நான் அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் வழங்கினார்.
எனவே இனி என்னுடைய வாழ்க்கை அமைதியாகவும் அழகாகவும் இருக்க போகின்றது என்று அன்று நான் நினைத்தேன்.
ஆயினும் மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் அவருடைய கணவர் வெளிநாட்டிலிருந்து வந்து விட்டார். வந்தவர் சிறிது நாட்களில் என்னுடன் தவறான முறையில் பழக ஆரம்பித்தார்.
இது பற்றி நான் எனது எஜமானியிடம் கூறிய போதும் அவர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. கணவரை கண்டிக்கவும் இல்லை. பல நாள் எங்கள் இருவரையும் தனியாக விட்டு அவர் வெளியில் சென்று நீண்ட நேரம் கழித்தே வீட்டுக்கு வருவார்.
எனவே அந்த சந்தர்ப்பத்தை அவரின் கணவர் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.
இதனிடையே நான் கர்ப்பமடைந்தேன். இது தொடர்பாக நான் எனது எஜமானியிடம் கூறினேன். அவர் அப்போது கதறி அழுதார்.
எனினும், எனது கர்ப்பகாலத்தில் அவர்கள் இருவருமே என்னை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். ஒரு வழியாய் எனது பிரசவ நாளும் நெருங்கியது.
நான் அழகிய ஆண்குழந்தையொன்றை பெற்றெடுத்தேன். எனினும், அந்தக் குழந்தையின் மீது என்னால் எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை.
குழந்தையை அவர்கள் இருவரின் பெயரிலேயே பதிவு செய்தார்கள். அதன்பின் குழந்தையை எனது எஜமானி பொறுப்பெடுத்துக்கொண்டார். அப்போது தான் எனக்கு எல்லா உண்மையும் புரிந்தது.
இங்கும் நான் வஞ்சிக்கப்பட்டு விட்டேன் என்று புலம்பினேன். எனினும், எனது குழந்தைக்கு நல்ல தாய், தந்தை, உறவுகள், சொத்துகள் என்று எல்லாம் கிடைத்திருப்பதை எண்ணி சந்தோஷப்படுகின்றேன்.
இனி அங்கு எனக்கென்ன வேலையென்று நினைத்து அந்த வீட்டிலிருந்து வெறும் கையுடன் வெளியேறினேன் வந்தேன். நான் வரும் போது எஜமானி எனக்கு பணம் கொடுத்தார். எனினும், நான் அவற்றை ப்பெற்றுக்கொள்ளவில்லை.
அதன்பின் நானும் அம்மா செய்த அதே தொழிலை செய்ய ஆரம்பித்தேன். கை நிறைய பணம் சம்பாதித்தேன். இதன்போது தான் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் நான் கைது செய்யப்பட்டேன்.
இன்னும் சில நாட்களில் நான் விடுதலையாகி விடுவேன். விடுதலையாகியவுடன் ஒரு முறையாவது சென்று என்னுடைய பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும்.