பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியா பாலி தீவில் கைது செய்யப்பட்டுள்ளது இந்தியாவில், குறிப்பாக மும்பை கேங்க்ஸ்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாவூத் இப்ராஹிமை கைது செய்வதற்காக இந்திய உளவுத்துறை ஏஜென்சிகள் மேற்கொண்ட ‘சீக்ரெட்’ ஆப்ரேஷனின் ஒரு அம்சமே இந்த நடவடிக்கை என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

choயார் இந்த சோட்டா ராஜன்?

சோட்டா ராஜனின் இயற்பெயர், ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. மும்பையில் ஏழ்மையான மராத்தி குடும்பத்தில் பிறந்த ராஜன், 1980களில், மும்பை திரையரங்குகளில் பிளாக்கில் சினிமா டிக்கெட்டை விற்று நிழல் உலக அனுபவத்தைப் பெற தொடங்கி, பின்னர் நாயர் என்பவரிடம், ‘வேலை’க்கு சேர்ந்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு லோக்கல் ரவுடிகளிடம் பிரபலமானான்.

பின்னர் ராஜன் நாயருக்கு, ‘படா’ ராஜன் என்றும், இவருக்கு, ‘சோட்டா’ ராஜன் எனவும் பெயர் வந்தது. ஒரு கட்டத்தில் ரவுடிகளுடன் ஏற்பட்ட மோதலில் படா ராஜன் என்கிற நாயர் கொல்லப்பட, சோட்டா ராஜன், அந்த கும்பலின் தலைவனானான்.

அந்தக் காலகட்டத்தில்தான் மும்பையில் தாவூத் இப்ராகிம், அருண் காவ்லியுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலிலும் சோட்டா ராஜன் ஈடுபட்டான். அருண் காவ்லியின் மூத்த அண்ணன் பாபா காவ்லி, கடத்தலின்போது கொல்லப்பட்டான்.

இந்த வழக்கில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, சோட்டா ராஜன் துபாய் தப்பிச் சென்றான். இப்படி தொடங்கிய சோட்டா ராஜனின் தாதா பயணத்தில் பல்வேறு கொலை வழக்குகள் பதிவாகின. இந்தியாவில் மட்டும் சோட்டா ராஜன் மீது 20 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தியாவையே உலுக்கிய நிகழ்வு மும்பை குண்டுவெடிப்பு. மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தத் தொடர்குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இன்னமும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிமுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, தாவூத் இப்ராஹிமை விட்டுப் பிரிந்து சோட்டா ராஜன், தனது ஆதரவாளர்களுடன் தனித்துச் செயல்பட்டார்.

இதனால், தாவூத் இப்ராஹிமுக்கும் ராஜனுக்கும் மோதல் வெடித்தது. இருவரது ஆதரவாளர்களும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கொலை செய்யத் தொடங்கினர். இதையடுத்து, சோட்டா ராஜனை கைது செய்யும் முயற்சியில் மும்பை காவல் துறை தடாலடியாக இறங்கவே, இந்தியாவில் இருந்து வெளியேறி உலக நாடுகளில் தலைமறைவானான்.

எந்த நாட்டில் இருக்கிறான் என்பது போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் போகவே தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்தபடியே, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத தொழில்களை நடத்தி வந்தான் ராஜன்.

கடந்த 2000-ம் ஆண்டில், தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள விடுதியில் சோட்டா ராஜன் தங்கியிருந்தபோது தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் அவனைக் கொலை செய்ய முயன்றனர். ஆனால், ராஜன் ஜன்னல் வழியே குதித்து உயிர் தப்பினான். அதன்பிறகு, ராஜன் எங்கிருக்கிறான் என்பது நிழல் உலகத்துக்கும் தெரியாமல் போனது.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு முழுமையான தலைமறைவு வாழ்க்கையில் இருந்த சோட்டா ராஜன், தற்போது இந்தோனேசிய பாலி தீவில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்தக் கைது குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சோட்டா ராஜன் கைது செய்யப்படவில்லை என்றும், அவன் தானாகவே போலீசிடம் உயிருக்குப் பயந்து சரணடைந்தததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சோட்டாவின் கைது பின்னணியில், இந்த உளவுத்துறையான ‘ரா’ இருக்கிறது என்றும், தாவூத்தை கைது செய்வதற்காக ‘ரா’ ‘ஐபி’ மற்றும் சிபிஐ உள்ளிட்ட இந்திய ஏஜென்சிகள் வகுத்த வியூகத்தின்படியே இந்தக் கைது நடந்துள்ளது என்றும் செய்திகள் மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளன.

விரைவில் தாவூத் கைது?

சோட்டா ராஜன் கைதில் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. சோட்டா ராஜன் எங்கிருக்கிறான் என்பதை இந்திய உளவு நிறுவனங்கள் நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு பின் தொடர்ந்துள்ளன.

இருப்பினும் சிபிஐ திடீரென இன்டர்போல் அமைப்பை உஷார்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிபிஐ-யின் இந்த திடீர் நடவடிக்கையில் இருந்து இரண்டு விளக்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. ஒன்று சோட்டா ராஜனால் இனிமேல் இந்திய உளவு அமைப்புகளுக்கு எந்த பயனும் இல்லை.

மற்றொன்று, சோட்டா ராஜனை கைது செய்து அவனை நாடுகடத்தி இந்திய சிறையில் பத்திரமாக அடைக்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏனெனில் தாவூத்தை நெருங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றும், அதனால் இந்த திடீர் நடவடிக்கை பாய்ந்துள்ளது என்றும் மும்பை காவல்துறை வட்டாரங்கள் மற்றும் டெல்லி வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீல், ஆஸ்திரேலியாவில் வைத்து சோட்ட ராஜனை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே ராஜன் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.

சோட்டா ராஜன் இந்திய சிறையில் பாதுகாப்பாக இருக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அதன் பின்னணியில் மிகப் பெரிய பேரம் நடந்திருக்க வேண்டும்.

அந்த பேரம் தாவூத் இப்ராஹிமைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்றும் ‘நிழல்’ உலகத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இதனால் மிக விரைவில் தாவூத் கைது நடக்கலாம் என்றும், அது மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனையாகப் பேசப்படும் என்றும் பா.ஜனதா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Share.
Leave A Reply