வட ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் பிராந்தியமெங்கும் 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த பயங்கர நிலநடுக்கம் வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதுடன் அங்கும் உயிர்ச்சேதங்கள் பதிவாகின.
ஆப்கானிஸ்தானின் தொலைதூர ஹிந்து குஷ் மலைப் பகுதியிலுள்ள பைசலாபாத்துக்கு 80 கிலோ மீற்றருக்கு அப்பால் 7.5 ரிச்டர் அளவு சக்திகொண்ட இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மதியம் 2.40 மணியளவிலே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் இந்திய தலை நகரங்களில் இருக்கும் கட்டடங்கள் அதிர்ந்ததோடு அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். பல பகுதிகளிலும் தொலைத் தொடர்புகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கான் டகார் மாகாணத்தில் பெண்கள் பாடசாலைக் கட்டட இடிபாடுகளுக் குள் சிக்கி 12 மாணவியர் பலியாகினர்.
நிலநடுக்கத்தின் போது வெளியேற முயன்ற மாணவியரே இவ்வாறு பலியாகினர். இதில் மேலும் 35 மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக மாகாண அரசின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலநடுக்கம் வட ஆப்கானிஸ்தானில் மையம் கொண்ட போதும் நேற்றை பிந்திய செய்திகளின்படி பாகிஸ்தானில் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பதோடு பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீர் மற்றும் இந்திய நிர்வாக காஷ்மீர் பகுதிகளும் அதிகம் பாதிக் கப்பட்டுள்ளன.
பிந்திய செய்திகளின் படி பாகிஸ்தானில் 90க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். பாகிஸ்தானின் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடக்கு பிராந்தியமே அதிகம்பாதிக் கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பலி எண்ணிக்கை 20 ஐ தாண்டி இருந்தது.
நில நடுக்கம் மையம் கொண்ட ஹிந்துகுஷ் மலைப் பிரதேசத்தின் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட் டிருக்கும் நிலையில் உயிர்ச்சேதம் பாரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்த இந்த நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த வட இந்திய மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்டடங்களில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
“காலடிக்கு கீழ் இருக்கும் நிலம் ஆட்டம் கண்டு எங்களுக்கு பிடித்துக் கொள்ளவும் எதுவும் இல்லாத நிலையில் பயங்கரமாக இருந்தது” என்று பெஷா வரைச் சேர்ந்த ஒருவர் விபரித்துள்ளார்.
“இறைவனை நினைவூட்டிக்கொண்டு மக்கள் பயத்தில் கட்டடங்களில் இருந்து வெளியேற ஓட்டம்பிடிப்பதை காண முடிந்தது.
நாம் அனைவரும் பயத்தில் இருந்தோம்” என்று சுவாத் பள்ளத்தாக்கில் இருக்கும் பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் தொலைபேசி ஊடே பி. பி. சி. தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.
காபூல் நகரிலுள்ள பொதுமக்கள், இந்த அளவுக்கு கடுமையான நில நடுக்கத்தை இதுவரை தாங்கள் உணர்ந்தது இல்லை என்று கூறியுள்ளனர். அங்கு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து பாகிஸ்தானிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகளும் உதவ தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷரீப் கேட்டுக்கொண்டுள்ளார். இடிபாடு இடம்பெற்ற பகுதிகளை நோக்கி மீட்பு குழுவினர் விரைந் துள்ளனர்.
டெல்லியில் சுமார் ஒரு நிமிடம் வரை இதன் தாக்கம் உணரப்பட்டது. மேலும் கட்டடங்கள் குலுங்கியதால் நூற்றுக் கணக்கானோர் கட்டடங்களிலிருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக் கின்றன.
ஸ்ரீநகரில் நில நடுக்கத்தைப் பார்த்த மக்கள் கட்டடங்கள் ஆடியதைப் பார்த்த தாகவும் இது 2005 ஆம் ஆண்டு ஏற் பட்ட பேரழிவு நில நடுக்கத்தை நினை வூட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் ஹன்சா பள்ளத்தாக்கிலிருந்து வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், பனிமலைச் சரிவு ஏற்பட்டதாக கூறப்பட் டுள்ளது.
பஞ்சாப். உத்தராகண்ட். மற்றும் ராஜஸ்தான் பகுதிகளிலும் நிலநடுக்க அலைகள் உணரப்பட்டன. அவசர நிலைக்கு தயாராக இருக்கும்படி இந் திய பிரதமர் நரேந்திர மோடி உத்தர விட்டுள்ளார்.
இந்திய யுரேசிய கண்டத் தட்டுக்கள் மோதும் இடத்தில் இமய மலையை சுற்றியுள்ள பகுதிகள் பூகம்ப ஆபத்து பகுதியாக திகழ்கின்றன. யுரேசிய கண் டத்தட்டுக்கு அடியே இந்திய துணைக் கண்டத் தட்டு நுழைந்து வருவதால் எண்ணிலடங்கா சிறிய மற்றும் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு சரியாக ஆறு மாதங்களிலேயே இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
கடந்த மே மாதம் இடம்பெற்ற நேபாள நில நடுக்கத்திற்கு பின்னர் நிகழ்ந்த மற்றொரு சக்திவாய்ந்த பின்னதிர்வு காரணமாக உயிர்ப்பலி 9,000 ஐ எட்டியது.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு வடக்கு பாகிஸ்தானை தாக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 25,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Earthquake CCTV Afghanistan and PakistanAfghanistan