உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
இங்குள்ள பாக்பத் மாவட்டம் டோகாட் பகுதியை சேர்ந்தவர், தேஷ்பால்(35). இவருடைய மனைவி ராக்கி(32). கடந்த சிலமாதங்களாக ராக்கிக்கும், அதேபகுதியைச் சேர்ந்த சதிஷ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக தெரியவந்த தேஷ்பால், இருவரையும் பலமுறை கண்டித்து வந்துள்ளார்.
ஆனால், அந்தத் தொடர்பை அறுத்துக்கொள்ள விரும்பாத இருவரும் தங்களது சந்தோஷத்துக்கு குறுக்கே நிற்கும் தேஷ்பாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
இதனையடுத்து, நேற்று மாலை ராக்கியும், சதிஷும் தேஷ்பாலின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி, உயிருடன் தீயிட்டு எரித்தனர்.
எரிந்த நிலையில் அலறித்துடித்த அவரது சப்தம் கேட்டு விரைந்துவந்த அக்கம்பக்கத்து வீட்டார், தீயை அணைத்து, அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே தேஷ்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாக்பத் மாவட்ட போலீசார், தலைமறைவாக இருக்கும் ராக்கி மற்றும் அவரது கள்ளக்காதலனான சதிஷ் ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.