தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதும் பேரம் பேசும் நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான பேரம் பேசல்கள் நல்லாட்சித் தத்துவத்திற்கு ஏற்றதல்ல எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினால் படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் கூறிய கருத்துக்கு அவர் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கமும் இராணுவத்தைப் பாதுகாக்கின்ற முயற்சியைத் தான் முன்னெடுத்து வருகின்றது.அந்தத் தீவிர முயற்சியின் காரணமாகத் தான் தற்போது தமிழ்க் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவ்வாறு விடுவிப்பதாயின் இராணுவத்தையும் போர்க் குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கூறுகின்றது .
ஆனால், அவர்களின் இந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமல்ல. ஏனெனில், இன்று சிறைகளிலுள்ள கைதிகள் ஏறக்குறைய ஐந்து தொடக்கம் இருபது வருடங்கள் வரை தொடர்ச்சியாகச் சிறைகளிலிருக்கின்றனர்.
ஒரு கைதி ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தால் அது பத்து வருடங்கள் சிறையில் இருந்தமைக்குச் சமன்.
ஆகவே,இப்போதிருக்கின்ற கைதிகள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தண்டனைகளை அனுபவித்தவர்கள். இதனால், கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தால் படையினரையும் விடுவிக்க வேண்டுமென்று கூறுவது நியாயமற்ற கருத்து.
எங்களைப் பொறுத்த வரை அமைச்சர்கள் கூறுகின்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல.
தற்போது சிறைகளிலிருக்கும் தமிழ்க் கைதிகளை விட மோசமான குற்றம் செய்தவர்களை அமைச்சர்களாக்கி அழகு பார்த்தார்கள்.
அவர்கள் இன்றும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.இந்த நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஒவ்வொரு கைதியின் விவகாரமும் தனித்தனியாக ஆராயப்பட்டு முடிவு: அமைச்சர் திலக் மாரப்பன
தடுத்து வைக்கப்படுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அடுத்தவாரமே இது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அவர் குறிப்பட்டார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் சிறைக் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிலைப்பாடு எவ்வாறு உள்ளதென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் தெரிவித்ததாவது:
“தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த காலத்தில் இருந்தே இந்த விடயம் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.எனினும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் விரைவில் ஒரு தீர்மானம் எடுக்க முடியாதுள்ளது.
முன்னைய அரசாங்க காலத்தில் இந்த விடயங்கள் தொடர்பில் சட்ட ரீதியில் சரியாக செயற்படாத காரணத்தினால் தான் இன்று இவ்வாறான சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
அதேபோல் எவ்வாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் சரியான ஆதாரங்களை பதிவு செய்திருக்கவும் இல்லை.
இவ்வாறு தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகள் சிலர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதேபோல் யுத்த காலகட்டத்தில் புலிகளுடன் தொடர்புபட்டிருந்ததையும், குற்றவாளிகள் என்பதை ஒப்புக்கொண்டவர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
அதேபோல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்புக் காவலில் சிலரும் உள்ளனர். ஆகவே இவை தொடர்பில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
எனவே குற்றம் சுமத்தப்பட்டு அது நிரூபிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க முடியாது. அவர்கள் தொடர்பில் எம்மால் எந்தவித மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முடியாது. இவர்கள் தொடர்பில் சட்ட முறைமைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதேபோல் பொது மன்னிப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொரு வழக்கையும் அவதானித்து அதற்கமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும்.
ஆனால் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பிணையில் விடுவிக்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.
எவ்வாறெனினும் அடுத்த மாதம் முதல் வாரத்தினுள் இந்த நபர்களை விடுவிக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இவர்களை விடுவிப்பது தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ தலைமையில் குழுவொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஆலோசனைக்கு அமைய நாம் இந்த குழுவினூடாக செயற்பட்டு வருகின்றோம். ஆகவே அடுத்த வாரம் மீண்டும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
பொதுமன்னிப்புக் கோரிக்கை நிராகரிப்பு: மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிக்க கைதிகள் திட்டம்?
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்பதை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகள் ஆராய்ந்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது விடுதலை தொடர்பில் அரசால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
தாம் உண்ணாவிரதத்தை மேற்கொண்டபோது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு வழங்கப்போவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தம்மை பொதுமன்னிப்பில் விடுவிக்குமாறு கோரி மீண்டும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப் போகின்றனர் என தமிழ் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது என்று அரசு அறிவித்துவிட்டது.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுமார் 217 தமிழ் அரசியல் கைதிகள் நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் 6 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், பொதுமன்னிப்புக்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிணை அனுமதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு எடுத்துள்ள இந்தத் தீர்மானத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தாம் கொடுத்திருந்த நவம்பர் 7 என்ற காலக்கெடுவுக்குள் அனைத்துக் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து தாம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.