பாலி: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தோனேசியா போலீசார் கைது செய்த போது தம்மை ஜிம்பாப்வேவுக்கு நாடு கடத்தி விடுமாறு கெஞ்சியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவால் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்தியாவிடம் அவர் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளார்.

இதனிடையே தாம் கைது செய்யப்பட்ட போது தம்மை ஜிம்பாப்வேவுக்கு தப்பி செல்ல அனுமதிக்குமாறு போலீசாரிடம் சோட்டா ராஜன் கெஞ்சியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து பாலி தீவு போலீஸ் அதிகாரி மேஜர் ரெய்ன்கார்ட் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
சோட்டா ராஜனை நாங்கள் கைது செய்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தோம். முதலில் தாம் சோட்டா ராஜன் இல்லை என்று அவர் மறுத்து வந்தார்.
தமது பாஸ்போர்ட்டை காட்டி தன்னை மோகன் குமார் எனக் கூறிவந்தார். ஆனால் கடைசியாக தாம் சோட்டா ராஜன்தான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
இந்தியாவில் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ஆகையால் என்னை ஜிம்பாப்வேவுக்கு நாடு கடத்தி விடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது வேண்டுகோளை நாங்கள் ஏற்கவில்லை.
இவ்வாறு மேஜர் ரெய்ன்கார்ட் கூறியுள்ளார். இதனிடையே சி.பி.ஐ. இயக்குநர் அனில் சின்ஹா கூறுகையில், சோட்டா ராஜனின் நடமாட்டம் குறித்து ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தோம்.
தற்போது சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
Share.
Leave A Reply