10 எண்றதுக்குள்ள படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ள சமந்தாவுக்கு ஏக கண்டனங்கள். குறிப்பாக பட விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.விக்ரம், சமந்தா ஜோடியாக நடித்துள்ள படம் ‘10 எண்றதுக்குள்ள.’ இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சமந்தா, கதாநாயகி, வில்லி என இருவேடங்களில் வருகிறார்.சாதி வெறி பிடித்த வில்லியாக அவர் வரும் காட்சிகளில் சுருட்டு பிடித்து மூக்கில் புகை விடுகிறார். புகைபிடிக்கும் வில்லி வேடத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தின் திருட்டு வி.சி.டியில் இருந்து சமந்தா புகைபிடிக்கும் காட்சி படங்களை சிலர் பிரதி எடுத்து அவற்றை இணைய தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

அந்த திருட்டு வி.சி.டி. படங்களை சேகரித்து சமந்தா தனது டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். இது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.சமந்தாவின் நடவடிக்கை திருட்டு வி.சி.டியை ஊக்குவிப்பது போல் உள்ளது என்று விநியோகஸ்தர்கள் கண்டித்துள்ளனர்.திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி சேகரன் இதுபற்றி கூறுகையில், ‘‘புகைபிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.

தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக போய் புகைபிடிப்பதால் வரும் தீமைகளை எடுத்துச்சொல்லி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சியில் நடிப்பது இல்லை என்று உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சமந்தா புகைபிடிக்கும் காட்சியில் நடித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. அது படத்தோடு முடிந்துவிட்டது என்று  நினைத்தால் திருட்டு வி.சி.டியில் இருந்து எடுத்து வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய அந்த புகைபிடிக்கும் படங்களை சமந்தா தனது ட்விட்டரில் வெளியிட்டு பெருமைப்பட்டு இருக்கிறார்.

இது பெண்களை புகைபிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டுவது போல் உள்ளது. கண்டிக்கத்தக்கது,” என்றார்.

Share.
Leave A Reply