பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான டெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, இம்ரான் கானும் அவரது மனைவி, ரெஹாம் கானும் விவாகரத்துக் கோரியிருக்கிறார்கள்.
அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்ரானின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கங்களில் அவரது கட்சியின் பேச்சாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ரெஹாம் கானும் தனது ட்விட்டர் கணக்கில் தாங்கள் பிரிந்துபோக முடிவு செய்ததை உறுதிப்படுத்தினார்.
ஜனவரி மாதத்தில்தான் இந்த இருவரும் இம்ரான் கானின் வீட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
ஊடகங்கள் இந்த விஷயத்தில் அனுமானரீதியிலான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்று அவரது கட்சிக்காகப் பேசவல்ல நயீம் உல் ஹக் கூறினார்.
இது குறித்து இனி மேலதிகத் தகவல்கள் தரப்படாது என்றும் அவர் கூறினார்.
இதை தனது ட்விட்டர் கணக்கில் எதிரொலித்த இம்ரான் கான், ” இது எனக்கும், ரெஹாமுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் வலியைத்தரும் காலகட்டம். எங்களது அந்தரங்க விஷயங்கள் குறித்து மரியாதை காட்டுமாறு எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இருவருக்கும் இடையே நிதிரீதியான உடன்பாடு ஏதும் இல்லை என்று அவர் கூறினார். ரெஹாமின் தார்மீக ஒழுக்கம் குறித்தும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆற்றும் தொண்டு குறித்து தனக்கு அதிக மதிப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளரான ரெஹாம் கானும் அவரது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட தகவலில், “நாங்கள் பிரிந்து போய் விவாகரத்து கோர முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
இம்ரான் கான் ஏற்கனவே பிரிட்டிஷ் ஊடகவியலாளரும், ஆர்வலருமான, ஜெமைமா கோல்ட்ஸ்மித்தைத் திருமணம் செய்து, ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் 2004ல், விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தத் திருமணம் மூலம் அவருக்கு இரு மகன்கள் இருக்கிறார்கள்.அவர்கள் பிரிட்டனில் வசிக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் பதவி விலகவேண்டுமென்றும், அரசியல் சீர்திருத்தங்களைக் கோரியும் நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு இம்ரான் தலைமை தாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.