ஷாம் எல் ஷேக்: 224 பேருடன் எகிப்தில் இருந்து ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இன்று காலை ரஷ்ய விமானம் ஒன்று எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகரிலிருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டஸ்பெர்க்கிற்கு புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானத்தில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 224 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானம் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் காணாமல் போனதாக முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில், அந்த விமானம் சினாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கி விட்டதாக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் தெரிவித்தார்.
மேலும், விமான விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் தேடுதல் குழுவினர் விரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே விபத்து நடந்த சினாய் பகுதி இஸ்லாமிய தீவிரவாதிகள் தீவிரமாக இயங்கும் பகுதி என்பதால், தீவிரவாதிகளால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதற்கான அறிகுறி எதுவும் இல்லை என எகிப்து பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் முன்னதாக எழுந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, மேற்கூறிய ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
100 உடல்கள் கண்டெடுப்பு
இந்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட உடல்களை மீட்புக்குழுவினர் கண்டெடுத்துள்ளதாகவும், இதில் 5 குழந்தைகளின் உடல்களும் அடக்கம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்துக்குள்ளான விமானம் இரண்டு துண்டாக உடைந்து விழுந்துள்ளது. இதில் வால் பகுதி சிறிய பகுதியாக எரிந்து காணப்படுவதாகவும், விமானத்தின் மற்றொரு பெரிய துண்டு பாறையில் மோதி கிடப்பதாகவும், அந்த உடைந்த துண்டு பாகத்தின் உள்ளே இருந்து வலி மற்றும் வேதனையால் முணங்கும் சப்தம் கேட்பதாகவும், இதனால் பலர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் எகிப்து மீட்புக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.