மும்பை: இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை இருக்கும் என மும்பை போலீசார் தெரிவித்தனர்.

மும்பை தவிர சீனா, தாய்லாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளிலும் இவருக்கு சொத்து உள்ளது என தெரியவந்துள்ளது.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். இவர், 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்புக்கு பிறகு தாவூத் இப்ராகிமுடன் கருத்துவேறு ஏற்பட்டு பிரிந்தார்.

சோட்டா ராஜன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் இருந்து தப்பிய சோட்டா ராஜன், தலைமைறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

கடந்த ஞாயிற்று கிழமையன்று இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு வந்தபோது சோட்டா ராஜனை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் இந்தோனேஷியா போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.

சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டுவர மும்பை போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதற்காக அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது வக்கீல் மூலம் அந்நாட்டில் உள்ள இந்தியாவுக்கான தூதருக்கு சோட்டா ராஜன் கடிதம் அனுப்பியுள்ளார்.

201510300215323068_Arrested-in-Bali-Chhota-Rajan-Indias-willingness-to-return_SECVPFபாலி போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும், பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், கிட்னி கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கவில்லை எனவும், விரைவில் தன்னை இந்தியா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

எனக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை; யாருக்கும் பயப்பட தேவையில்லை என கூறியிருந்த சோட்டா ராஜன் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஜிம்பாப்வே நாட்டுக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருப்பதாக தான் கூறியதாக வந்த தகவலை அவர் மறுத்துள்ளார். இந்தியா வரவே விருப்பம் என கூறியுள்ளார். விரைவில் அவர் இந்தியா அழைத்து வரப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில், சோட்டா ராஜனின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை இருக்கும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் பாதிக்கும் மேற்பட்ட முதலீடுகள் இந்தியாவில் இருக்கும் என்றும், குறிப்பாக மும்பை மற்றும் அங்குள்ள சேட்டிலைட் டவுன்களில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சோட்டா ராஜனுக்கு வெளிநாடுகளிலும் சொத்துக்கள் உள்ளன.

சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சொந்தமாக அவருக்கு ஓட்டல்கள் உள்ள நிலையில், சிங்கப்பூரில் நகைக்கடைகளும் இருக்கின்றன.

ஆப்ரிக்க நாடுகளில் டைமன்ட் வியாபாரம் செய்து வருகிறார். குறிப்பாக, ஜிம்பாப்வே நாட்டில் அதிகளவு முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply