கிளிநொச்சியில் நேற்றைய தினம் 30ம் திகதி கடனாக பெற்றுச் சென்ற மூன்று லட்சம் ரூபா பணத்தை நடு வீதியில் இரு திருடர்களுடன் போராடி பணத்தைக் காத்துக் கொண்ட பெண்மணியொருவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதியில் வசிக்கும் 31 அகவை உடைய பெண் ஒருவர் நகரின் மத்தியில் உள்ள ஓர் அபிவிருத்தி வங்கியில் நேற்று மாலையில் மூன்று லட்சம் ரூபா பணத்தை கடனாக பெற்றுள்ளார்.

இவ்வாறு பணத்தைப் பெற்றவர் உருத்திரபுரம் பகுதிக்கு தனித்துச் செல்வதனை அவதானித்த இருவர் உந்துருளியில் பின்தொடர்ந்து யாரும் அற்ற ஓர் பிரதேசத்தில் இப் பெண்மணியின் பணப்பையை அபகரிக்க முயன்றுள்ளனர்.

இவ்வாறு இரு இளைஞர்களும் குறித்த பெண்மணியிடம் இருந்து பணப்பையை அபகரிக்க முயன்றுள்ளனர்.

முதலில் ஓர் இளைஞன் உந்துருளியில் அமர்ந்திருக்க ஒருவரே பணப்பையை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் அம் முயற்சி பலனளிக்கவில்லை என்பதனால் இரு இளைஞர்களும் இணைந்து மேற்படி பெண்ணைத் தாக்கி தள்ளி விழுத்தி அதன் பின்பு பணப்பையை பறிக்க கடும் முயற்சி எடுத்துள்ளனர்.

இருப்பினும் பெண்மணியும் அவலக்குரல் எழுப்பியவாறு பணப்பையையும் காத்த வண்ணம் இரு இளைஞர்கள் மீதும் பதில் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

நீண்ட நேரம் போராடியும் தமது முயற்சி பலிக்காத திருடர்கள் இருவரும் உந்துருளியில் ஏறித் தப்பி ஓடியுள்ளனர்.

இவ்வாறு இரு இளைஞர்களுடனும் போராடிய போது ஏற்பட்ட காயங்களிற்கு சிகிச்சை பெறும் நோக்கில் தற்போது இப் பெண்மணி கிளிநொச்சி மாவட்ட வைத்யசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply