சென்னை: இயக்குநர் முத்தையா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஷாலும், ராதாரவியும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷாலும், ராதாரவியும் எதிரெதிர் துருவங்களாக மோதிக் கொண்டனர். சரத்குமாரை விட ராதாரவியைத் தான் விஷால் அதிகம் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கொம்பன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கவிருக்கும் புதிய படத்தில், விஷால் நாயகனாக நடிக்க ஒரு முக்கியமான பாத்திரத்தில் ராதாரவியும் நடிக்கிறார் என்று கூறுகின்றனர்.

மருது என்ற தலைப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ராதாரவி நடிக்கவிருப்பது திரைத்துறையில், அதிர்ச்சி கலந்த ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் இருவரும் மோதிக் கொண்டதைப் பார்த்து இருவரும் இனிமேல் இணைய வாய்ப்புகள் குறைவுதான் என்று திரைத்துறையினர் எண்ணினர்.

அவர்களின் எண்ணத்திற்கு மாறாக இருவரும் உடனடியாக இணைந்து நடிப்பதால் நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட பகைமை இனி காணாமல் போகும் என்று திரையுலகினர் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

கொம்பன் படத்தைப் போன்று இதுவும் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம் என்றும் விரைவில் இது இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply