தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையும் பிரச்சனைகளையும் உருவாக்கி யிருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் போராட்ட த்துக்கு களத்தில் இறங்குவோமென கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை தமிழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கமுடியாது. வேண்டுமானால் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடியுமென அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது.
இவ்வகை முரண்பாடான கருத்துக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையே கடந்த 10 மாதங்களுக்கு மேலாக வளர்ந்து வரும் இணக்கப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்திவிடுமோவென்று எண்ணத் தோன்றுகிறது என்பதை விட பயங்கொள்ள வைக்கிறது.
கடந்த பல வருடங்களாக விசாரணையின்றியும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமலும் விடுவிக்கப்படாமலும் இருக்கும் பல நூறு அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். குற்றம் காணப்படுமானால் நீதி மன்றுக்கு முன் கொண்டு செல்லுங்கள்.
இல்லையாயின் அவர்களை விடுவியுங்கள் என்ற நியாயபூர்வமான கோரிக்கைகளை பல்வேறு தரப்பினரும் மனித உரிமை அமைப்புக்களும், பொது அமைப்புக்களும் முன்வைத்து வந்துள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இக்கோரிக்கைகள் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.
ஆட்சிமாற்றமொன்று நிகழ்ந்ததன் பின் னும் இக்கோரிக்கைகள் இன்னும் தீவிரம் அடைந்து வருகின்றன. குறிப்பாக பொதுத் தேர்தல் முடிவடைந்து தேசிய அரசாங்கமொன்று உருவாகிய நிலையில் தமக்கு விரைவில் நல்ல காலம் பிறக்கும் தாம் பொது மன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது விசாரணையின் சட்ட நீதிமுறையிலோ விடுவிக்கப்படுவோம் என இலவு காத்த கிளிகள் போல் விடுதலைக்காக காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் தந்த காரணத்தினாலேயே சிறைக்குள் இருந்த கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
இவர்களின் போராட்டம் நீதியானது நியாயத்தன்மை கொண்டது என ஏற்றுக்கொண்டதனாலோ என்னவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்துமூல வாக்குறுதியொன்றை கைதிகளுக்கு வழங்கியிருந்தார்.
உடனடியாக நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தான் உறுதியான நடவடிக்கை எடுப்பேன் என்ற எழுத்துமூல உத்தரவாதத்தை ஜனாதிபதி செயலகம் ஊடாக நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த எழுத்துமூல உத்தரவாதம் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமாரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதியின் எழுத்துமூல உத்தரவாதம் சிறைச்சாலை ஆணையாளரால் மகஸின் சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரசியல் கைதிகளு க்கு படித்துக்காண்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவாத்தை ஏற்றுக்கொண்ட கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை 17.10.2015 அன்று இடைநிறுத்திக் கொண்டார்கள்.
இத்தருணத்தில் உடன் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்ததுடன் இரா.சம்பந்தன் கைதிகளுக்கு மேலும் ஒரு உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
பாரிய குற்றம் இழைத்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்படுவீர்கள். ஜனாதிபதியை நான் பூரணமாக நம்புகிறேன்.
உங்களை விடுவிக்க நான் ஆவன செய்வேன் என இரா. சம்பந்தன் பலமான ஒரு வாக்குறுதியை நல்கியிருந்தார். இதை ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளில் முதன்மைப்பட்டு நின்ற விவகாரம் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
மிக நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ்க் கைதிகள் இழைக்காத குற்றத்துக்காகவும் இழைத்த குற்றத்துக்கு மேலாகவும் காலவரையறையற்ற தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டுமென்ற நியாயத்தை அரசாங்கத்துக்கு புகட்டியதுடன் வலியுறுத்தியும் வந்துள்ளனர்.
ஆனால் நாமொன்று நினைக்க அரசு ஒன்று நினைக்கிறது என்பது போல் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கமுடியாது. இதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை.
இதனால் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையின்றி உள்ள கைதிகளையும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள கைதிகளையும் பிணையில் விடுவிப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கைதிகள் விடுதலை தொடர்பான உயர்மட்ட கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த 19 ஆம் திகதி கூட்டப்பட்டு இதையடுத்து 26 ஆம் திகதி இரண்டாம் முறை கூட்டப்பட்டே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என்ற அரசாங்கத்தின் முடிவானது தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் விசனத்தை ஊட்டியிருக்கிறது என்பது வெளிப்படையாக உணரப்படுகிறது.
இந்த விசன வீச்சை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிப்படையாகவே கொட்டிக் காட்டியிருக்கிறார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எதி ர்ப்புத் தெரிவிக்கும் இனவாதிகளின் கருத்துக்களுக்கும் அமைச்சரவையின் குழப்பங்களுக்கும் நாம் பொறுப்பல்ல.
எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் போராட்டக்களத்தில் குதிப்போம் என சுமந்திரன் கட்டியம் கூறியிருப்பது கூட்ட மைப்பினரின் சீற்றத்தை வெளிப்படுத்துவதாகவே காட்டுகிறது.
அதுமட்டுமன்றி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையே ஏற்பட்டுவரும் நெருக்கப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்கும் விரிசல் ஏற்பட்டுவிடுமோ மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிடுமோ என்று எண்ண வைக்கிறது.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பார்க்கப் போனால் இந்த அரசாங்கமானது மஹிந்த ராஜபக் ஷவின் எதேச்சதிகா ரப் போக்கினை பின்பற்றிக் கொண்டிருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நிலைமைகள் மாறிக்கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
தேசிய அரசாங்கம் நல்லிணக்க அரசாங்கம் என தமக்குத்தாமே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கமும் அதற்குள் பங்காளிகளாகவும் பிதாமகர்களாக இருப்போரும் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதுடன் அரசாங்கத்தின் நேர்த்தன்மைக்கு ஊறுவிளைவிப்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள் என்ற விமர்சனம் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படுகிறது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டுமென மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட யோசனை அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனையை முன் வைத்த டி.எம்.சுவாமிநாதன் வேறு யாருமல்ல ஐ.தே.க.வின் அமைச்சர், நீண்டகால உறுப்பினர்.
இவர் முன்வைத்த யோசனைக்கு எதி ர்ப்பு தெரிவித்தவர்கள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ, மற்றும் ஜாதிகஹெல உறுமய கட்சியின் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஆகியோர்.
சம்பிக்க ரணவக்க
சம்பிக்க ரணவக்கவைப் பொறுத்தவரை அவருடைய கடந்தகால அரசியல் பாதை முழுவதிலும் தமிழ் மக் கள் விரோத நடைபோட்டவராகவே இருந்துள்ளார் என்பது உள்ளங்கையில் நெல்லிக்கனி போன்ற விடயம்.
ஆனால் நீதியமைச்சரின் செயற்பாடுகள் தமிழ் மக்களை ஆச்சரியம் அடையவைக்கிறது. ஜனாதிபதியின் அறிக்கை வெளிவந்த மறுகணமே நீதியமைச்சர் கூறிய கருத்து அவரின் உள்ளார்ந்த நிலையை புட்டுக்காட்டுவதாக இருந்துள்ளது.
இதேபோன்றே அரசியல் கைதிகளை விரைவில் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் குற்றமற்றவர்களை விடுதலை செய்யவும் பாரிய குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்களை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சரு மான ராஜித சேனாரட்ன முன்பு கூறியிருந்தார் இப்பொழுது அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சங்கடங்கள் ஏற்படுமெனத் தட்டிக்கழிக்கிறார்.
இதேவேளை அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கினால் இராணுவத்தினருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டிவருமென அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும்திலக் மாரப்பனவும் கூறியுள்ளனர்.
இவர்களின் கூற்றானது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் விவகாரமாகவே நோக்கப்படுகிறது.
பொதுவாகவே தமிழ் மக்களுடைய எவ்வகை பிரச்சினைக்கு தீர்வுகாண அரசு முயற்சி செய்கின்ற போதேல்லாம் ஆளும் அரசாங்கத்தை சேர்ந்த தமிழ் மக்கள் விரோத சக்திகளோ அல்லது குழுக்களோ அதற்கு வெளியே உள்ள இனவாத குழுக்களோ கட்சிகளோ தமது எதிர்ப்பை லாவகமாக வெளிக்காட்டுவது இலங்கையில் ஒரு புதிய வரலாறு அல்ல.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டபோது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அரசியல் தீர்வை முன்வைக்க விழைந்த போது இவ்வாறான நிலைகள் சூழ்கொண்டிருக்கின்றன என்பது பொதுவான உண்மை.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் ஆளும் தேசிய அரசாங்கத்துக்குள்ளேயே உடன்பாடு காணப்படவில்லை.
அதற்கு வெளியேயும் இனவாத சக்திகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மிக பூடகமாக தெளிவுபடுத்திக் காட்டியுள் ளார்.
இலங்கையில் இன்னும் (இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும்) இனவாத குழுக்கள் மற்றும் கட்சிகளின் முறுக்கு நிலைகள் இன்னும் அடக்கி வைக்கப்படவில்லை என்பதற்கு உதாரணமாகத்தான் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் கரு த்து வெளிக்காட்டி நிற்கின்றது.
சிறையிலிருக்கும் புலிகளை விடுவித்து நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இவர்களை விடுதலை செய்தால் புலிகளுக்கு அரசாங்கமே அங்கீகாரம் கொடுப்பதற்கு சமமானது. இவர்களை விடுவித்தால் மீண்டும் ஐந்தாம் ஈழப்போர் ஆரம்பமா கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத் தின் தலைவர் குணதாஸ அமரசேகர அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
இவற்றையெல்லாம் ஒன்று கூட்டிப் பார்க்கின்ற போது தமிழ் அரசியல் கைதி கள் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஒன்றாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வேறொன்றாகவும் அரசாங்கத்துக்குள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற இனத்துவ விரோத சக்திகள் மற்றொன்றையும் போக்காக கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த முரண்பட்ட போக்குகள் சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமநிலை காணப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் சுமுகநிலை பெறுமா என்பது கேள்விக்குறியாகவே மாறியுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என அரசாங் கம் எடுத்திருக்கும் தீர்மானமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விசனத்தை உண்டு பண்ணும் விவகாரமாகவே மாறியிருக்கிறது.
கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைதிகளுக்கு எழுத்துமூல வாக்குறுதியை வழங்கியதோடு கூட்டமைப்பினர் இவ்விவகாரத் துக்கு நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் தீர்வு காணப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே கைதிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கூட்டமைப்பினர் நிறுத்தி வைத்தார்கள்.
ஆனால் கடந்த 20 ஆம் திகதி பிரதமர் தலைமையில் உயர்மட்டக் குழு எடுத்த தீர்மானமானது கூட்டமைப்புக்கு விசனத்தை உண்டு பண்ணியிருப்பதுடன் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயுள்ள அரசியல் மற்றும் புரிந்துணர்வு நிலையை பாதி க்கும் விடயமாக ஆக்கியிருக்கிறது.
இது பற்றி சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதியே தமிழ் கைதிகள் விடுதலை தொடர்பாக வாக்குறுதியளித்திருந்தார். அவ்வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்குரியது என தெளிவாக விளக்கியுள்ளார்.
இது பற்றி சம்பந்தன் மேலும் விளக்குகையில் நாடு முழுவதிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்தனர்.
கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
அவர் அதைக் காப்பாற்றுவார் என சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு விமர்சனத்துக்குரிய சூழ்நிலையில் நவம்பர் 7ஆம் திகதிக்கு முன் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவாரா அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவார்களா என்ப தெல்லாம் பிரச்சனைத்தளமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி கூட்டமைப்புக்கும் சிறைக் கைதிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளின் படி நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் கைதி கள் விடுதலை செய்யப்படாவிட்டால் ஏற்படக்கூடிய இரண்டு விளைவுகளுக்கு அரசு உடனடியாக முகங்கொடுக்க வேண் டிவரும் ஒன்று அரசியல் கைதிகள் முன்பு கூறியது போல் உண்ணாவிரதப் போராட்டம் 7 ஆம் திகதிக்குப் பின் தொட ங்கப்படும்.
இரண்டாவது விடயம் தமக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறை வேற்றவில்லையென்ற கசப்புணர்வும் மனக்குன்றலும் கூட்டமைப்புக்கும் அர சுக்கு மிடையேயுள்ள நல்லிணக்கப் பாட்டையும் புரிந்துணர்வையும் நலிவடையச் செய்யக் கூடும்.
மீண்டுமொரு கைதிகளின் உண்ணா விரதப் போர் ஆரம்பிக்கப்படுமானால் அது நாட்டுக்கோ ஆட்சியாளர்களுக்கோ ஆரோக்கியமாக அமைந்துவிடாது என்பதும் எதிர்க்கொள்ளப்பட வேண் டிய விடயம்.
கடந்த 60 வருடத்துக்கு மேலான அரசியல் நகர்வில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் சாதகமான சூழ்நிலையை இந்த ஆட்சியாளர்களும் தட்டிக் கழிப்பா ர்களானால் அது நாட்டுக்கு பேராபத்தாக முடிவதுடன் அரசியல் தீர்வொன்றை நோக்கி நகர்வதற்கும் இடைஞ்சலாக ஆகிவிடும்.
எவ்வாறு இருந்த போதிலும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் தரும் அரசாக இதுவும் மாறிவிடக்கூடாது என்பதே எல் லோருடைய எதிர்பார்ப்பாகும்.
– திருமலைநவம்