நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மேக்கனிகாடு, புதுவளவு பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 52) விவசாயி. இவரது மகன் அசோகன்(வயது 32). லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அசோகனுக்கும், ரேவதி (22) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமணமான பிறகு அசோகன் தனது மனைவியுடன் தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார். டிரைவர் என்பதால் அடிக்கடி அசோகன் வெளியூருக்கு சென்று விடுவார்.

இந்த நிலையில் மாமனார் தங்கராசுக்கும், ரேவதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக ஊருக்குள் பரவியது. இது பற்றி உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் அசோகனிடம் மனைவியின் நடத்தை குறித்து கூறினார்கள்.

இதனால் அசோகன் அதிர்ச்சியும், அவமானமும் அடைந்தார். 2 பேரையும் கையும் களவுமாக பிடிக்க அவர் திட்டம் தீட்டினார். கடந்த சில மாதங்களாக தந்தை –மனைவியை கண்காணித்து வந்தார்.

நேற்று அசோகன் லாரி வேலைக்கு செல்வது போல் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கராசுவும், ரேவதியும் வீட்டிற்குள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அப்போது, வேலைக்கு செல்வது போல் சென்ற அசோகன் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு தந்தையுடன் மனைவி உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அவருக்கு தலைக்கேறியது.

இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த அசோகன் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து வந்து தங்கராசுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், வீட்டில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேய தங்கராசு பரிதாபமாக இறந்தார்.

மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீப்போல பரவியது. புதுவளவு பகுதி மக்கள் வீட்டின் முன்பு கூடினர்.

இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராசு உடலை மீட்டு, நாமக்கல் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது. அசோகன் தன் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, வாழவந்திநாடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:–

நான் பெட்ரோல் டேங்க் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். எனது தந்தை தங்கராசு. என்னுடைய தாய் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு நான் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இதில் எங்களுக்கு மனோபாலா(5), துளசிபாலா(4) என 2 மகன்கள் உள்ளனர்.

2 மகன்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கருதி, வெளிமாநிலங்களுக்கு டேங்க் லாரிகளை ஓட்டிச்செல்வேன். உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு வரமுடியாததால் நீண்ட நாட்கள் அங்கேயே தங்கியிருப்பேன். மாதக்கணக்கில் அங்கேயே தங்கியிருந்து லாரியை ஓட்டிச்செல்வதால் எனக்கு பணம் மிச்சமாகும்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியூருக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தேன். அப்போது அக்கம் பக்கத்தினர் எனது மனைவியையும், தந்தையையும் பற்றி தவறாக கூறினார்கள். இது பற்றி எனது தந்தையுடம் கூறி தகராறு செய்தேன். இருவரையும் கண்டித்தேன். எனினும் அவர்கள் கேட்கவில்லை.

நேற்று இரவு வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தேன். மனைவியும், தந்தை தங்கராசுவும் உல்லாசமாக இருந்தனர். நான் நேரில் பார்த்து விட்டதை கண்டதும் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நான் விரட்டிச் சென்று மனைவியை சரமாரியாக தாக்கினேன். இதையடுத்து தந்தை தங்கராசுவை கட்டையால் அடித்து கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.

Share.
Leave A Reply